884. நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது ‘மினா’வில் அன்னாரை உஸ்மான் (ரலி) சந்தித்து, ‘அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் (ரலி) (அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம்) ‘அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?’ என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ் (ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி ‘அல்கமாவே!’ என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:”இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று தெரிவித்தார்கள்.
885. நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்” என்று கூறினார்.
மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். ஒருபோதும் மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
886. உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.