பிளேக் நோய் மற்றும் தஜ்ஜாலிடமிருந்து மதீனா பாதுகாப்பு.

871. ‘தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1879 அபூஹூரைரா (ரலி).

872. ”யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1871 அபூஹுரைரா (ரலி).

873. கிராமவாசி ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் கண்டது. உடனே அந்தக் கிராமவாசி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் (மீண்டும்) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு (மூன்றாம் முறையாக) அவர் நபியவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மதீனா, கொல்லனின் உலை போன்றதேயாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகின்றது” என்றார்கள்.

புஹாரி :7211 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

874. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1884 ஜைது பின் ஸாபித் (ரலி).

875. ”மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1877 ஸஅத் (ரலி) .

876. ”யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு மதினாவிலிருந்து (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ‘ஷாம்’ வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1875 ஸூஃப்யான் பின் அபூஸூஹைர் (ரலி).

877. ”மதீனா வளமிக்க நகராக இருக்கும் நிலையில், இரைதேடக் கூடிய பறவைகளும் விலங்குகளும் மட்டுமே நாடி வரக்கூடியதாக அதை மக்கள்விட்டு(ச் சென்று) விடுவார்கள்! மறுமை நாளில், இறுதியாக எழுப்பப்படவிருப்பவர்கள்
முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர்! (அவர்களின் மரணம் எப்படி நிகழுமெனில்) அவர்கள் இருவரும் தம் ஆடுகளை (இடையர்களின் பாணியில்) அதட்டி அழைத்த வண்ணம் மதீனாவை நாடிச் செல்வார்கள். (மதீனாவைச் சென்றடைந்ததும்) அதை (மனித சஞ்சாரமற்ற) மிருகங்களின் வசிப்பிடமாகக் காண்பார்கள்: இறுதியில் ‘வதா’ (எனும்) மலைக்குன்றை அடைந்தவுடன் முகம் குப்புற மூர்ச்சையுற்று விழுந்து (இறந்து) விடுவார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.