மனிதன் என்பவன் பலவகைகளில் நன்றி மறப்பவனாக இருக்கிறான். நானொருவனுக்கு உதவி செய்து, அதை சமயம் வரும் போது அவனுக்கு உணர்த்துவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் சமூகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சார்ந்தவனாகதான் இருக்க வேண்டியுள்ளது. என்னிடம் உதவி பெற்றவன், எனக்கு உதவி தேவைப்படும் போது அவன் செய்யாத பட்சத்தில், அவனுக்கு நான் செய்த உதவியை சொல்லி காட்டி, இது மனித தன்மையில் உள்ளது அல்ல என்பதை அவனுக்கு நாம் உணர்த்த வேண்டும்.
இதில் நம் மனதை மிகவும் பாதித்து கொண்டிருக்கும் விஷயம் என்னவெனில்; இன்று வளர்ந்து வாலிப பருவத்தில் வளைய வரும் பலர் தங்களுடைய பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொள்கிறார்கள். இது முறையா என்று சிந்திக்க வேண்டாமா? இவன் அல்லது இவள் தக்க பருவம் அடையும் வரை தன் சுகங்கள் அத்தனையும் தியாகம் செய்து, தன் வாழ்க்கையையே இவர்களுக்காக அர்ப்பணித்த பெற்றோரை, அவர்களுடைய கடைசி காலத்தில், அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் காலத்தில், நம்முடைய மனசாட்சியை ஒழித்து வைத்து விட்டு ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோமே இவனை விட நன்றி மறப்பவன் எவன் சொல்லுங்கள் பார்ப்போம்.
அறிவுடைவன் சிந்தித்து பார்க்கட்டும். தான் இன்று இருக்கும் நிலைக்கு யார் காரணம் என்பதையும், இன்று இவன் உடம்பில் ஓடும் இரத்தம், அன்று அவன் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி கொடுத்தது தான் என்பதையும், தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் யார் என்பதையும், மனித மனம் உள்ளவன் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளான்.
இன்று நான், நான் என்று மமதையும், திமிர்தனத்திலும், அலைபவன், நேற்று தன் தந்தையுடைய உடம்பில் அருவருப்பான விந்து துளியாக இருந்ததையும் நினைத்து பார்க்கட்டும். இன்னும் இன்று இவன் பெற்றோருக்கு இவன் செய்வதை இவனுடைய பிள்ளைகள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இதையே இவனுடைய பிள்ளைகள் நாளை இவனுக்கு செய்ய காத்திருக்கிறார்கள் என்பதையும், இப்போதே எண்ணி பார்த்து கொள்ளட்டும்.