782. நபி (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஓர் உம்ரா செய்தார்கள்.
783. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று பதிலளித்தார்கள்.
784. நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது புனிதப் போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் விதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை. அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார். நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.
785. நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் லுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், ‘இது பித்அத்!” என்றார்கள்! (காரணம் இப்னு உமர் (ரலி) நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததைப் பார்த்ததில்லை). பிறகு, ‘நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?’ என உர்வா (ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள் ‘நான்கு, அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்!” என்றார்கள். நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. இதற்கிடையே அறையில் உம்முல் மூமினீன் ஆயிஷா (ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), ‘அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர் (ரலி)) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?’ எனக் கேட்டார். ‘அவர் என்ன கூறுகிறார்?’ என ஆயிஷா (ரலி) கேட்டதும். ‘நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது!” என்று கூறுகிறார்!” என்றார். ஆயிஷா (ரலி), ‘அபூ அப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!” எனக் கூறினார்கள்.