774. ‘உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ என இப்னு உமர் (ரலி) கூறினார்”
775. நான், உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அதுபற்றி என்னிடம் கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக உளூச் செய்தார்கள்; பிறகு கஅபாவைத் வலம் வந்தார்கள்; பிறகு உம்ராவுக்காக தனித்து வலம் வரவில்லை’.மேலும் உர்வா, அபூபக்ர் (ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவைத் வலம்தான் வந்தார். பிறகு உம்ராவுக்கென்று வலம் ஏதும் வரவில்லை. உமர் (ரலி) அவ்வாறேதான் செய்தார். பிறகு உஸ்மான் (ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவையே வலம் வந்ததைப் பார்த்தேன். அவர் உம்ராவுக்காக வலம் ஏதும் வரவில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஆகியோரும் ஹஜ் செய்துள்ளனர். என்னுடைய தந்தை ஸுபைர் இப்னு அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவரும் முதன் முதலாக கஅபாவைத் வலம்வந்தார். பிறகு உம்ராவுக்காக அவர் தனியாக வலம் ஏதும் வரவில்லை. முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் இவ்வாறே செய்வதை பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃபு) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) இவ்வாறு செய்ததைப் பார்த்தேன். அவர் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) இருக்கத்தானே செய்கிறார். அவரிடம் அவர்கள் கேட்க மாட்டார்களா? முன் சென்றவர்களில் யாரும் ஹஜ்ஜை முறித்துவிட்டு உம்ராவாக எதையும் ஆக்கவில்லை. மேலும் அவர்கள் (மக்காவில்) கால் வைத்ததும் வலம்தான் வந்தார்கள். பிறகு அவர்கள் இஹ்ராமைக் களைவதில்லை. என்னுடைய தாயாரும் என் சிறிய தாயாரும் மக்கா வந்ததும் வலம் வருவதற்கு முன்னர் எதையும் செய்வதில்லை. இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை’ என்று கூறினார்.
776. (அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் ஊழியரான) அப்துல்லாஹ் அறிவித்தார். அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம்.” (தன் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (ஒரு முறை) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்திறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் அதிகம் இருக்கவில்லை; மேலும், எங்களிடம் (பயண) உணவுகளும் வாகனப் பிராணிகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும், என்னுடைய சகோதரி ஆயிஷா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம்; கஅபாவை வலம்வந்து ஸயீ செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டோம். பிறகு மாலை நேரத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தோம்” என அஸ்மா (ரலி) கூறினார்.