குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..

771. குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர் (ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!” என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, ‘ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது தான்!” என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, ‘இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்!” என்றார்கள். பிறகு, இரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே வலம் வந்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.

புஹாரி 1813 இப்னு உமர் (ரலி).

772. இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டில், இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய நாடினார்கள். அப்போது அவர்களிடம் ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்’ எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது! எனவே, அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறினார்கள். பின்னர் புறப்பட்டு பைதா என்னுமிடத்திற்கு வெளியே வந்ததும் ‘ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் என்னுடைய உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ எனக் கூறினார்கள். மேலும் குதைத் என்னுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டு சென்றார். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. யவ்முன் நஹ்ர் (துல்ஹஜ் பத்தாம் நாள்) வரை பலியிடவில்லை; இஹ்ராம் அணிந்திருக்கும்போது விலக்கப்பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (பலிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், ‘இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார்கள்.

புஹாரி : 1640 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.