768. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (எனவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை); நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், ‘உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தம் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது. யார் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜு நாள்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தம் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!” என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்ததும், இறையில்லம் கஅபாவை வலம் வந்துவிட்டு முதலாவதாக ருக்னை (ஹஜருல் அஸ்வதை) முத்தமிட்டார்கள். பிறகு மூன்று சுற்றுக்கள் (தோள்களைக் குலுக்கி) ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் வலம் வந்தார்கள். வலம்வந்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஏழு முறை ஸயீச் செய்தார்கள். பிறகு, தம் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மேலும் அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் தம் குர்பானிப் பிராணியை பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். மக்களில், குர்பானி கொடுப்பதற்காகப் பிராணியைக் கொண்டு வந்தவர்களும் நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே செய்தார்கள்.
769. இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ், உம்ராச் செய்தார்கள். இப்னு உமர் (ரலி) கூறிய (முன் ஹதீஸிலுள்ள) செய்தியையே ஆயிஷா (ரலி) எனக்குக் கூறினார் என உர்வா அறிவித்தார்.