அரஃபாத்தில் தங்குதல் பற்றி….

764. மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாகத் வலம்வருவார். மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள். ‘மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்” என்ற (திருக்குர்ஆன் 02:199) வசனம் குரைஷிகள் பற்றி இறங்கியதுதான். அவர்கள் முஸ்தலிஃபா என்னும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களாயிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு திருப்பி விடப்பட்டனர். என ஆயிஷா (ரலி) கூறினார் என என்னுடைய தந்தை (ஸுபைர்) எனக்கு அறிவித்தார்.

புஹாரி : 1665 உர்வா பின் ஜூபைர் (ரலி).

765. (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) அரஃபா தினத்தில் என்னுடைய ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்றிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், இவர் (நபி (ஸல்) குரைஷிக் குலத்தவராயிற்றே!’ இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம் எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் கிரியைகளையும் செய்வதில்லை).

புஹாரி :1664 ஜூபைர் பின் முத்இம் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.