749. ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். அதற்கு ‘உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!” என்று கூறினார்கள்.
750. நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.