714. ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!” என்றார்கள். நான் ‘என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்யமுடியும்!” என்று கூறினேன். ‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!” என்றார்கள். நான் ‘என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்?’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!” என்றார்கள்.
715. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!” என்றார்கள்.”அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) வயோதிகம் அடைந்த பின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகைகை நான் ஏற்காமல் போய் விட்டேனே’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்!” என அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
716. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!” என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். ‘அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதே” என்று கூறினார்கள்.
717. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதைவிட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்’ என்று க
ூறினார்கள்.
718. நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி (ஸல்) அவர்கள் ‘நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!” என்று கூறினார்கள். நான், ‘இதற்கு எனக்கு சக்தி உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். ‘தாவூத் நபி (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள் விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!” என்றேன்.
”காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!” என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)” என்று அதா (ரஹ்) கூறினார்.
719. நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!” என்றார்கள். அதற்கு ‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!” என்று கூறினார்கள்.
720. ”அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
721. நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ‘ஒவ்வொரு ம
ாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)” என்றேன். அவர்கள் ‘ஐந்து நாள்கள்!” என்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே!” என்றேன். ‘ஒன்பது நாள்கள்!” என்றேன். ஒன்பது நாள்கள்!” என்றார்கள். பிறகு, ‘தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பும் இல்லை அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.