நோன்பின் சிறப்புகள்.

707. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1904 அபூஹுரைரா (ரலி).

708. ”சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1896 ஸஹ்ல் (ரலி) .
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.