தேவையுடையோர்க்கு தானம் செய்தல்.

629.நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களின் தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

புஹாரி: 3149 அனஸ் (ரலி).


630.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள் ஆனால் என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா! என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு என்று கூற நான் நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள் நான் உங்களுக்காக அதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தேன் என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு மக்ரமா திருப்தியடைந்தான் என்று கூறினார்கள்.

புஹாரி: 2599 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.