606.”ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘ஸதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள்.
607.”இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்” என்றார்கள்.