592. ”தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
593. நிச்சயமாக மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணிடம் அபயம் தேடியவர்களாக, நாற்பது பெண்கள் அவனை பின்தொடர்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
594. உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.