589.”தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ‘அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.
590.மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை வாகனத்தில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.