ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்.

544.நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி: 1253 உம்மு அதிய்யா (ரலி)


545.நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ எனக் கூறினார்கள்.ஹஃப்ஸா (ரலி)வின் அறிவிப்பில், ‘ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குளிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் ‘நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்” என உம்மு அதிய்யா (ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.

புஹாரி : உம்மு அதிய்யா (ரலி)


546.நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, ‘மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் அதன் உளூச் செய்யவேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1256 உம்மு அதிய்யா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.