நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை.
கலீஃபா உமர் (ரலி) அவர்களும், முஆவியா (ரலி), அவர்களும், மற்றும் எண்ணற்ற ஸஹாபாக்களும் வாழ்ந்திருக்கையில் வறட்சி ஏற்பட்டபோது உயிருடனிருந்த அப்பாஸ் அவர்களையும், யஸீத் பின் அஸ்வத் அவர்களையும் கொண்டு வஸீலா தேடினார்கள். மறைந்துபோன நபியைக் கொண்டோ, அவர்களின் கப்றருகில் சென்றோ இதைச் செய்யவில்லை. தம் துஆக்களில் நபியவர்களின் மீது ஸலவாத்தும் கூறினர். மறைந்துபோன நபியைக் கொண்டு வஸீலா தேடல் அனுமதிக்கப்பட்ட நல்ல அனுஷ்டானம் என்று அவர்கள் கருதியிருந்தால் நபியுடைய கப்றருகில் நின்றாவது (குறைந்த பட்சம்) பிரார்த்திக்க முனைந்திருப்பார்கள். நபியையோ, அவர்களுடைய அந்தஸ்தையோ குறிக்கின்ற ஏதேனும் ஒன்றை எடுத்துக் கூறி அதன் பொருட்டாலோ அல்லது நம்மில் சிலர் துஆச் செய்வது போல் நபியைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கவோ, ‘அவர்களின் பொருட்டால்’ என்று கூறி கேட்கவோ செய்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் அவர்கள் செய்யவில்லை.
எனவே அது அனுமதிக்கப்படாத வஸீலாவின் முறை என்பதையும், அவர்கள் செய்து காட்டிய முறைதான் வஸீலாவின் அனுமதிக்கப்பட்ட அமைப்பு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களது அந்தஸ்தை எடுத்துக் கூறி பிரார்த்தித்தல் கூடாது என்று கூறினோம். ஆனால் நபியவர்கள் கூறியதாக அறிவீலிகள் சிலர், ‘நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் என்னுடைய அந்தஸ்தையும், மதிப்பையும் எடுத்துரைத்து அதன் பொருட்டால் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ்விடத்தில் எனக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது’ என்ற ஹதீஸை குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் நம்பத் தகுந்த நூல்களிலிருந்து எடுக்கப்படவில்லை. இது பொய்யான ஹதீஸாகும். ஹதீஸ் துறையில் ஞானமுள்ள ஒருவர்கூட இதைத் தம் நூற்களில் குறிப்பிடவில்லை. எல்லா நபிமார்களுடையவும், ரஸூல்மார்களுடையவும் மதிப்பைவிட நபியவர்களின் மதிப்பு மிக மேலானது. இதை எவரும் மறுக்க முடியாது. மேன்மைக்குரிய நபிமார்களான மூஸா, ஈஸா நபிகளை விட நபி (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள். இதுபற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்: “மூமின்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை) தொல்லைப் படுத்தியவர்களைப் போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூறிலிருந்து அல்லாஹ் அவரை தூய்மைப்படுத்தி விட்டான். அல்லாஹ்விடத்தில் அவர் மிக கண்ணியமானவராகவே இருந்தார்”. (33:69)
இன்னும் திருமறையில் ஈஸாவைப்பற்றிக் கூறினான்: “(மர்யமை நோக்கி) மலக்குகள் கூறினர். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு (மகனை அளிக்க) நற்செய்தி கூறினான். அதன் பெயர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் என்பதாகும். அவர் இம்மை, மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், இறைவனுக்கு மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்”. (3:45)
அல்லாஹ்விடத்தில் மூஸாவுடையவும், ஈஸாவுடையவும் மதிப்பு இப்படியென்றால் மனிதர்களின் தலைவரான ‘மகாமுல் மஹ்மூத்’ (சுவனத்தில் ஒரு பதவி) ‘கவ்ஸர்’ (சுவனத்தின் ஒரு நதி) ‘ஹவ்ளு’ (சுவனத்தில் ஒரு தண்ணீர் தடாகம்) ஆகியவற்றை எல்லாம் இறைவன் வழங்கி கண்ணியப்படுத்துகின்ற நபி (ஸல்) அவர்களின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா?
மகாமுல் மஹ்மூத் புகழுக்குரிய பதவியை எல்லோரும் தமக்காக ஆசைப்படுவர். மேற்கூறிய அல் கவ்ஸர், அல் ஹவ்ளு இதிலிருந்து நீர் பருக விரும்பும் மக்களின் பாத்திரங்கள் வானத்திலிருக்கும் நடசத்திரங்களுக்கு சமமாகும். அதன் நீர் பாலை விடவும் வெண்மையானது. தேனை விடவும் சுவை நிரம்பியது. அந்நீரில் ஒருமடங்கு பருகியவனுக்குத் தாகமே இராது. உலுல் அஸ்ம் என்ற சிறப்புப் பெற்ற நபிமார்களான ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா (அலைஹிம்) உட்பட அனைத்து நபிமார்களும் மறுமையில் ஷபாஅத்துச் செய்வதை விட்டும் பின்வாங்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தாம் மக்களுக்கு ஷபாஅத்தைக் கொண்டு உதவி புரிவார்கள்.
அர்ஷின் கீழுள்ள ‘லிவாவு’ என்ற கொடிக்குரியவர்களும் நபியவர்களேயாகும். இந்தக் கொடியின் நிழலில் நபி ஆதமும், இதர நபிமார்களும் இருப்பார்கள். நபி ஆதமின் சந்ததிகளில் தலைமைப் பதவிக்குரியவர், அனைத்து நபிமார்களை விட சிறந்தவர்களும், அவர்கள் அனைவருக்கும் போதகரும், மிகப் பெரும் மதிப்பிற்குரியவர்களுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மாத்திரமே என்பதை எவராலும் மறுக்க இயலாது.
ஆனால் எவ்வளவு இருப்பினும் அல்லாஹ்விடத்தில் அவன் சிருஷ்டிகளுக்குரிய மதிப்பு சிருஷ்டிகளுக்கிடையில் ஒருவருக்கொருவர் அறிந்திருக்கும் மதிப்பைப் போலல்ல. இத்தனை மதிப்புகள் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தும் கூட அல்லாஹ்வுடைய அனுமதி பெறாமல் சிருஷ்டிகளில் ஒருவருக்கும் அவர்கள் ஷபாஅத் செய்ய முடியாது.
திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: “வானங்களிலும், பூமியிலுமுள்ள ஒவ்வொன்றும் அர்-ரஹ்மானிடம் அடிமையாக வந்தே தீரும். அவையனைத்தையும் அவன் பூரணமாக கணக்கிட்டு அறிந்தும் வைத்திருக்கிறான்”. (19:93-94)
மேலும் கூறுகிறான்: “மஸீஹும், அல்லாஹ்வோடு நெருங்கிய மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைப் பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வத்தால் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாகக் காணுகின்றனரோ அவர்கள் யாவரையும் மறுமையில் அவன் தன்னிடம் கொண்டுவரச் செய்வான். ஆகவே எவர் உண்மையாகவே விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலியைப் பூரணமாக வழங்கி தன் அருளால் பின்னும் அதிகப்படுத்துவான். எவர் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாக காணுகின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனைப் படுத்துவான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு தோழரையும், உதவிப் புரிவோரையும் (அங்கு) அவர்கள் காண மாட்டார்கள்”. (4:172-173)
மனிதன் இன்னொரு மனிதனிடம் அனுமதியின்றியோ சிபாரிசு கேட்க முடியும். இது சிருஷ்டிகளின் தன்மை. ஏனெனில் ஒருவன் சிருஷ்டிக்கப்பட்டவன் என்ற நிலையில் மற்றவனுக்கு கூட்டாக இருக்கிறானல்லவா எனவே இருவருக்கும் காரியங்கள் நிறைவேறுவதில் பங்குண்டு. அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் எந்த விஷயத்திலும் எவருடனும் அவன் கூட்டாக இருக்கிறான் என்று சொல்ல முடியுமா?
திருமறை கூறுகிறது: “(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்களாக) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்ருக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அவ்விரண்டிலும் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதிப் பெற்றவர்களைத் தவிர அவனிடத்தில் பரிந்துப் பேசுவதும் பயனளிக்காது”. (34:22-23)