495. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள்.
496. (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
497. ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.
498. என் தந்தை (ஸலமா இப்னு அக்வஹ் (ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் ‘பைஅத்துர் ரிள்வான்’ செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம் ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) ‘ஜும்ஆ’ தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள்.