481. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்றிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதிமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.
482. (அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.
483. (‘தாத்துர் ரிகாஉ’) போருக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம். கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.
484. ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பவர்களில் ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘எனக்கு நீர் அஞ்சுகிறீரா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அவர், ‘இப்போது என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்” என்று பதிலளித்தார்கள
். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். பிறகு தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் (அச்ச நேரத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகிக் கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்துகளும், மக்களுக்கு இரண்டு ரக்அத்துகளும் ஆயின. (அந்த மனிதரின் பெயர் ‘கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்’ என்றும், இப்போரில் ‘முஹாரிப் கஸஃபா’ கூட்டத்தாரை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் அபூ அவானா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸத்தத் (ரஹ்) அறிவித்தார்.)