460. குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நார்த்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானதாகும்.
புஹாரி : 5427 அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி)
461. குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 4937 ஆயிஷா (ரலி)