451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள்.
452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டுவிட்டாலோ அது ஓடிப்போய்விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
453.”இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்” என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், ‘மறக்க வைக்கப்பட்டுவிட்டது’ என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
454.குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.