442.நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.
443.நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் வந்தார்கள். ‘நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழும்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து ‘மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
444.”உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’.