இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.

437-நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள்.

‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

புஹாரி:6316 இப்னு அப்பாஸ் (ரலி).


438-‘நபி (ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி (ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள்.

நானும் எழுந்து நபி (ஸல்)
அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

புஹாரி: 183 இப்னு அப்பாஸ் (ரலி)


439-நபி (ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.

புஹாரி:1138 இப்னு அப்பாஸ் (ரலி)


440-நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள். பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை. இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்புகிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடம் நீதி கேட்டேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை.

புஹாரி: 7499 இப்னு அப்பாஸ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.