நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி நின்றதற்கப்பால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்பார்கள். இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின் மாதிரியாகும்.

மற்றொன்று: நபிகளின் ஷபாஅத்தையும், துஆவையும் தமக்கு அருள் புரியும்படி நேராக அல்லாஹ்விடமே கெஞ்சி பிரார்த்தனை செய்வது. கண்பார்வை இழந்த ஸஹாபியும் இம்மாதிரியைத்தான் பின்பற்றியதாக நாம் ஹதீஸில் பார்த்தோம். அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்காகப் பிரார்த்தித்து அம்மனிதரிடமும் நேராக அல்லாஹ்விடம் ஷபாஅத்தை ஏற்றருள நீரும் பிரார்த்தியும் என்று பணித்தார்கள் என்று வருகிறது.

இப்படி இருக்க நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த போது அவர்களால் பிரார்த்தனையைப் பெறாத ஒருவர் நபியின் துஆவினாலும், ஷபாஅத்தினாலும் அல்லாஹ்விடம் எப்படி வஸீலாவை (நெருங்குதலை) பெற முடியும்? நடைபெறாத ஒரு விஷயத்தை வைத்து அல்லாஹ்விடம் அனுகுவதை (வஸீலாவை) கேட்கிறான் என்று சொல்ல வேண்டும். இதில் அணுவளவும் பயனில்லை. முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள உமர் (ரலி) அவர்களின் வரலாறும் இப்படித்தான். அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழை தேடிப் பிரார்த்தித்தார்கள். அப்படியென்றால் அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் துஆச் செய்தார்கள் என்பது அதன் தாத்பரியமல்ல. அப்பாஸ் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும், இதர முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து நின்று அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். மழையும் பெய்தது. இதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.