நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.
இதைத் திருமறையும் விளக்கிக் காட்டுகிறது: “நபியே! நீர் விரும்புகிறவர்களை நேர்வழியில் செலுத்திவிட நிச்சயமாக உம்மால் முடியாது. ஆனால் அல்லாஹ் மட்டுமே தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்”. (28:56)
“(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீர் எவ்வளவோ விரும்புகிறீர். ஆனால் எவர்கள் தப்பான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை”. (16:37)
ஹிதாயத்தைப் போன்றுதான் நபிமார்களின் துஆவும், அவர்கள் தேடுகின்ற மன்னிப்பும், பரிந்து பேசுவதும் ஆகிய அனைத்துமே அப்படித்தான். மன்னிப்பையும், சிபாரிசையும் பெறுவதற்கு அருகதைப் படைத்தவர்களான நபி (ஸல்) அவர்கள் கேட்டால், அத்துடன் அல்லாஹ்வும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டால் அது பயனளிக்கும். அன்றி நயவஞ்சகர்களுக்கும், நிராகரித்த குஃப்பார்களுக்கும் பிரார்த்தித்தல் பயனற்றது. இவர்களது குற்றங்களும் மன்னிக்கப்பட மாட்டாது. இதைத் திருமறையும் கூறுகிறது: “(நபியே!) நீர் அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடுவதும் அல்லது தேடாமல் இருப்பதும் அவர்களைப் பொருத்தவரையில் சமமே. அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான்”. (63:6)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…