377– மூமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
378– நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்குத் தாமதமானால் தாமதப்படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.
379– நானும் எனது தந்தையும் அபூ பர்ஸா (ரலி)யிடம் சென்றோம். கடமையான தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள். என்று கேட்டோம். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுது விட்டு) மதீனாவின் கடைக்கோடியில் உள்ள தமது இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளிக் குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும் என்றார்கள். மஃரிப் பற்றி அபூ பர்ஸா (ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக்கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் விரும்புபவர்களாக இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் , இஷாவுக்குபின் பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும் போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும் என அபூ பர்ஸா (ரலி) கூறினார்கள்.
சோதனைக்காக!