331– யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
332– ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) யார் அந்தச் செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறாரோ அவர் நம்மை நெருங்க வேண்டாம் அல்லது நம்முடன் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
333– யார் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை விட்டு விலகி அவரது இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப் பட்டன. அது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரம் கேட்ட போது அதில் உள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்ட போது நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.