311– (ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீசீனியாவின் மன்னர்) நஜ்ஜாஸியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
312– (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.
313– நபி (ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.