175- மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் (ரலி)யை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். அதற்காக உளூ செய்வது தான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
176- நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவி விட்டுத் தொழுகைக்குரிய உளூ செய்வார்கள்.
177- நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூ செய்து விட்டுத் தூங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
178- இரவு நேரத்தில் தமக்கு குளிப்புக் கடமையாகி விடுகிறது என உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு உளூ செய்யும், உமது உறுப்பைக் கழுவி விட்டு நீர் தூங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
179- நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.