கேள்வி எண்: 102. கீழ்வரும் ஹதீஸுடைய தராதரத்தைக் குறித்து ஹதீஸ் கலை நிபுணர்களின் கூற்றை வரைக.
பதில்: ஆதம் (அலை) அவர்கள் முதலில் தவறு செய்த போது, சுவனத்தின் வாசலில் ஆதம் (அலை) அவர்கள் பார்த்ததாக சொல்லப்படும் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹு என்ற கலிமாவில் உள்ள முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு என்று கூறியதால் தான் அல்லாஹ் அவரை மன்னித்ததாக சிலர் எண்ணிக் கொணடிருக்கின்றனர். ஆனால் இக்கருத்து தவறானதாகும். இக்கருத்தை தலாயிலுன்னுபுவ்வத் என்ற நூலில் இமாம் பைஹகி அவர்களும், முஸ்தக்ரக் என்ற நூலில் இமாம் ஹாகிம் அவர்களும், முஸ்ஸ முக்ஸகீர் என்ற நூலில் இமாம் தப்ரானி அவர்களும் இதை பதிவு செய்துள்ளனர்.
இதனை தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள், இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் இப்னு ஜைது இப்னு அஸ்லம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகிறது. அவர் பலவீனமானவர், ஏற்கத்தக்கவர் அல்ல என்று அதன் தரத்தையும் நமக்குச் சொல்லி விடுகிறார். இச்சம்பவத்தை பதிவு செய்துள்ள இன்னொரு நூலாசிரியர் இமாம் ஹாகிம் அவர்கள் தனது மஹ்ரிபத்துஸ் ஸஹீஹ் மினஸ்ஸகீம் என்ற நூலில் இந்த அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இடடுக் கடடியவர் என்று இவரை அடையாளம் காடடி இருக்கிறார்கள்.
இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்ல. இந்த நிகழ்ச்சி இடடுக் கட்டப்பட்டது என்று ஹதீஸ் கலையின் மாமேதைகள் இமாம் அல்லாமா அல்ஹாபிழ் தஹபி அவர்கள், தங்களின் மீஸானுல் இஃதி தால் என்ற நூலிலும், அல்லாமா அல்ஹாபிழ் இப்னு ஹஜருல் அஸ்கலானி அவர்கள் தங்களின் அல்லிஸான் என்ற நூலிலும் மேற்கூறப்படட ஹதீஸை பரிசீலனை செய்து அதன் தராதரத்தை கூறியிருக்கிறார்கள்.
இதைத்தவிர இப்னு ஜவ்ஸி, அலி இப்னுல் மதனீ இப்னு ஸஃது தஹாபி, இமாம் இப்னு ஹிப்பான், ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்களும் முறையே அப்துரரஹ்மான் மிக மிக பலவீனமானவர், இவர் செய்திகளைத் தலைகீழாக மாற்றக் கூடியவர் என்று கூறிவிடடு இவர் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களை நிராகரித்துள்ளனர்.
எனவே மேற்கூறப்படட ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது. சரி அப்படியென்றால் எந்த வாசனங்களைக் கூறியதால் அல்லாஹ் ஆதம் அலை அவர்களை மன்னித்தான்? இதற்கு விடையை அல்லாஹ்வே தன் திருமறையில் கூறுகிறான்.
அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அறிந்து) கொண்டார். (அந்தச் சொற்கள் முலம் மன்னிப்பு கேட்டார்) அவரை அவன் மன்னித்தான் (அல்குர்ஆன்: 2:37)
இந்தத் திருக் குர்ஆன் வசனத்தில் கூறப்படும் சில வார்த்தைகள் என்ன என்பதை திருக்குர்ஆனில் ஆராயும் போது, ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் தங்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் கேட்ட துஆவை ஒரு இடத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அவ்விருவரும் எங்கள் இறைவா! நாங்கள் எங்களுக்கே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருளவில்லையாயின் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 7:23-அல் அஃராஃப்)
அதாவது, இறைவனிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் 7:23 வசனம் தான். இதைத் தான் அவ்விருவரும் கூறி மன்னிப்பு கேடடிருக்கிறார்கள் என்று நாம் தெரிய முடிகிறது. பெரும்பான்மையான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் இதனையே சொல்கின்றனர். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.