ஒருவன் அடுத்தவனை நோக்கி நபியவர்களின் பொருட்டால் கேட்கிறேன் (அவர்களைக் கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று கூறினால் இக்கூற்றிலுள்ள ‘நபியைக் கொண்டு கேட்கிறேன்’ என்பதின் கருத்தில் நபியை ஈமான் கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை கருதப்பட்டால் இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும்.
ஸஹாபாக்கள், தாபியீன்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்கள் ஆகியோருள் சிலர் நபி (ஸல்) அவர்கள் வபாத்தான பிறகும் இத்தகைய பாணியில் துஆக் கேட்டிருக்கிறார்கள் என்று கூறும் சம்பவங்களும், இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகின்ற – நபிகள் மரணமடைந்த பிறகும் அவர்களைப் பொருட்டாகக் கொண்டு பிரார்த்திக்கலாம் – என்ற கூற்றையும், இவையனைத்தையும் நாம் மேற்கூறிய கருத்தின்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நபியைக் கொண்டு பிரார்த்தனை செய்தார்களென்றால் அவர்களை விசுவாசம் கொண்டு அவர்களை நேசித்துப் பின்பற்றி நடப்பதின் பொருட்டால் துஆச் செய்திருக்கிறார்கள் எனக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் இதை விளங்குவதில்லை. நபியைக் கொண்டு உதவி தேடுதல் என்ற சொல்லிற்கு நாம் கூறிய கருத்தை அளிக்கவில்லை. வேறு பல மாதிரியான வியாக்கியானங்களைக் கொடுத்து விடுகிறார்கள். இதனால் பற்பல தவறுகள் நுழைந்து விடுகின்றன. நபித்தோழர்கள் நபியைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என வரும் ஹதீஸின் விளக்கத்தில் நபியின் பிரார்த்தனையையும், அவர்களின் சிபாரிசையும் பெற்று அல்லாஹ்வுடன் சமீபிப்பதைத் தேடினார்கள் என்று அறிஞர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்,
உற்றார் உறவினர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களுக்காகப் பிரார்த்திப்பது, மன்னிப்புத் தேடுவதும் வாரிசுகளின் மீதுள்ள பாத்தியதையாகும். உறவு (இரத்த பாசம்) உறவினர்களுக்கு மத்தியில் சில பாத்தியதைகளை சுமத்துகின்றன. அப்படிச் சுமத்தப்பட்ட பாத்தியதைகளில் உற்றாருக்குப் பிழைபொறுக்கத்தேடி அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிதல் என்பது மிகக் குறிப்பிடத் தக்கதாகும். இறைவன் திருமறையில் உறவை மதிப்பாகக் கூறியுள்ளான்.
“அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் வேண்டையவற்றைக் கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும் இரத்த பந்தத்திற்கும் (உறவிற்கும்) பயந்து நடந்துக் கொள்ளுங்கள்”. (4:1)
நபியவர்கள் கூறினார்கள்: ‘உறவு (இரத்த பந்தம்) என்பது அருளாளன் எனும் அல்லாஹ்வின் திருநாமத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒன்றாகும். இப்பந்தத்துவத்தை எவர் துண்டிக்காமல் ஒட்டி வாழ்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் அருளிலிருந்தும் துண்டிக்கப்பட மாட்டார். இதை முறித்து வாழ்கிறவரை அல்லாஹ் தன்னருளிலிருந்து அப்புறப்படுத்தி விடுகிறான்’. மேலும் நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ‘ரஹ்ம்’ எனும் இரத்தபந்தத்தை சிருஷ்டித்த போதுஅது ரஹ்மானின் அரையோடு* பின்னிப் பிணைந்து நின்று ‘இறைவா! இவ்விடம் உறவினர்களைப் பிரிந்து வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுமிடம் என்று கூறியது’. அப்போது இறைவன் கூறினான்: ‘உன்னுடன் ஒட்டி வாழ்கிறவனுடன் நான் சேர்ந்திருப்பதையும், உன்னைப் பிரிந்து வாழ்கிறவனுடன் நான் தூரமாக இருப்பதையும் நீ திருப்திப்படுகிறாயா இல்லையா? இந்த வினாவுக்குப் பதிலளிக்கும் போது ‘ரஹ்ம்’ எனும் இரத்தபந்தம் ‘ஆம் (என்னை எவர்கள் பிரிந்து வாழ்கிறார்களோ அவர்களை விட்டு விலகி விடு. என்னை நெருங்கியவர்களோடு நீயும் நெருங்கிச் செல். இதையே நான் பொருந்திக் கொண்டேன் இறைவா) என்று கூறியது.
ஹதீஸ் குத்ஸியில் இறைவன் கூறினான்: ‘நான் அருளாளன் (ரஹ்மான்). ‘ரஹ்ம்’ எனும் இரத்தபந்தத்தைப் படைத்தேன். ரஹ்மான் என்ற எனது திருநாமத்திலிருந்து ‘ரஹீம்’ என்ற பெயரையும் அதற்குத் தேர்வு செய்தேன். எனவே எவர் இரத்தபந்தத்தை இணைந்து வாழ்கிறாரோ அவருடன் நானும் சேர்ந்திருப்பேன். எவர் அதைப் பிரிந்து வாழ்கிறாரோ அவரை விட்டு நான் பிரிந்து விடுவேன்’.
அலி (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படுகின்ற ஒரு சம்பவத்தில் அவர்களின் சகோதரர் ஜஃபரின் மகன் அலி (ரலி) அவர்களிடம் வந்து தம் தந்தையாரைச் சொல்லி எதையாவது கேட்டால் அலி (ரலி) அவர்கள் அதனை உடனே கொடுத்து விடுவார்களாம். சகோதரர் ஜஃபருக்கு அலி (ரலி) அவர்களின் மீது இரத்த பாசத்தினால் ஏற்பட்ட சில கடமைகள் இருப்பதனால் தான் அலி (ரலி) அவர்கள் இப்படிச் செய்தார்கள்.
இரத்த பாசத்தினால் ஏற்படும் கடமைகள் அனைத்தும் மனிதர்கள் இறந்த பின்னரும் நீடித்திருக்கும் என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘யா ரஸூலல்லாஹ்! என் பெற்றோர்கள் மரணமடைந்து விட்டார்கள். இரத்த பாசத்தினால் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள், பேருதவிகள் இவற்றுள் ஏதாவது என்மீது மீதி இருக்கிறதா என்று வினவியதற்கு ‘ஆம். அவர்களுக்காக நீ பிரார்த்தனை புரிதல் வேண்டும். இறைவனிடம் அவர்களுக்காக மன்னிப்புத் தேட வேண்டும். அவர்கள் வாக்களித்த வாக்குறுதிகளை நீ நிறைவேற்றுவதும் உன்மீது கடமையாகும். பெற்றோர்கள் வழியாகக் கிடைத்த இரத்த பாசத்தை விட்டும் நீ பிரியாமல் உறவினர்களை ஒட்டி வாழ வேண்டும். ஏனெனில் பெற்றோர்கள் இல்லையென்றால் நட்புறவோ, சொந்த பந்தமோ ஒருபோதும் உனக்கு ஏற்பட்டிருக்காது’ என்றும் கூறி முடித்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் குறிப்பிடப்படுகிறது: ‘மனிதன் தன் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களின் உற்ற தோழர்களை ஒட்டி வாழுதல் என்பது மிக ஏற்றமான நன்மை பயக்கும் செயலாகும். சிருஷ்டிகளுள் எவற்றைக் கொண்டும் சத்தியம் செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யக் கூடாது. நபிமார்களாக இருப்பினும் சரியே. இவற்றைக் கொண்டு சத்தியம் செய்து பிரார்த்திப்பதை எல்லா அறிஞர்களும் விலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களும், தோழர்களும் இதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். உயிரற்ற பொருட்களைக் கொண்டும் ஆணையிடக் கூடாது. மேலும் ‘இறைவா! கஃபாவின் மீது சத்தியமாக உன்னிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறி துஆக் கேட்பவனும் குற்றவாளியாக மாறி விடுகிறான் என்று எல்லா அறிஞர்களும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
*இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களுடைய முஸ்னத் எனும் பிரபலமான ஹதீஸ் கிரந்தத்தின் இரண்டாவது தொகுப்பில் 330-ம் பக்கத்தில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸின் நேருரையில் காணப்படுகின்ற ‘ஹக்வுர்-ரஹ்மான்’ என்பதற்கு ‘ரஹ்மானின் ஹக்வு’ (அரை-நடுப்பகுதி) என்றே அர்த்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் இதைப்போன்று குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படுகின்ற இறைவனின் ஸிபாத்துகள் யாவும் அவற்றின் கருத்துகளை மாற்றாமலும், திருப்பாமலும், புரட்டாமலும், வடிவம்-உவமை போன்றவற்றைக் கூறாமலும், குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்தது போன்று அப்படியே ஏற்பது ஸலபுஸ்ஸாலிஹீன்களின் கொள்கையாகும். எனவே அவர்களைப் பின்பற்றி நாமும் ‘ஹக்வு’ என்ற இவ்வார்த்தைக்கு ஹதீஸில் வந்தது போன்று அர்த்தம் சொல்லக் கடமை பட்டிருக்கிறோம். இவ்வார்த்தையின் கருத்தைப் புரட்டியோ, திருப்பியோ கூறுவதும், பொருந்தாதவற்றைக் கூறி அதன் தாத்பரியத்தை மாற்றி விடுவதும், அல்லாஹ்வின் தன்மைகளுக்கு உவமை, ஒப்பு, வடிவம் முதலியவற்றைக் காண்பதும் மாபெரும் குற்றமாகும். இங்கு வந்திருக்கும் ‘அரை’ (ஹக்வு) படைக்கப்பட்ட ஜீவராசிகளின் அரையைப் போன்றதல்ல என்றும், அல்லாஹ்வுக்கே உரித்தான அவனுக்குப் பொருந்துகின்ற ‘அரை’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…