நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.
இவர்களின் பிரயோகங்களில் வஸீலா என்ற வார்த்தையின் கருத்தை நாம் அவசியம் விளங்கிக் கொள்ள வேண்டும். நபியைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கினார்களென்று ஒருஸஹாபி கூறினால் அதன் கருத்தில் நபியின் பிரார்த்தனையாலும் அவர்களின் ஷபாஅத்தாலும் அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். நபியவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவித் தேடுதல், அவர்களைக் கொண்டு அவன்பால் முன்னோக்குதல் என்பவற்றின் அனைத்துத் தாத்பரியமும் இப்படித்தான். ஸஹாபாக்களைப் பொறுத்தவரையில் நபியின் பிரார்த்தனையும், அவர்களின் ஷபாஅத்தையுமே கருதுவர்.
இனி பிற்கால மக்களிடையே வஸீலா என்ற வார்த்தைக்கு அளிக்கப்படும் கருத்துக்கு வருவோம். இவர்களிடம் நபியைக் கொண்டு வஸீலா தேடுவதென்றால் நபியைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தனை செய்தல், நபியின் உரிமை மீது ஆணையிட்டுக் கேட்டல் என்ற கருத்தைக் காண முடிகிறது. நபியல்லாத மற்ற வலிமார்கள், ஸாலிஹீன்கள், நல்ல மக்கள் என்று யார் யாரைப் பற்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் முன்னிருத்தி, அவர்களைக் கொண்டு ஆணையிட்டு, அவர்களின் பொருட்டால் பிரார்த்தித்தல் இதுவே பிற்கால முஸ்லிம்கள் பலர் மத்தியில் வஸீலாவுக்குக் கொடுக்கப்படும் கருத்தாகும். (இது நச்சுக் கருத்து என்பதை இவர்கள் விளங்கவில்லை) இப்படி தவஸ்ஸுல், வஸீலா என்ற சொற்களைத் திருமறை, நபிமொழி, ஸஹாபிகளின் சொற்கள், பின்னர் தோன்றிய தற்கால முஸ்லிம்களின் பிரயோகங்கள் இவற்றிலெல்லாம் காண முடிகிறது.
ஆனால் இப்பின்னோர்களான முஸ்லிம்களின் இக்கருத்துகளைத் தவிர ஏனைய பிற கருத்துக்கள் சரியானது என்பதில் சந்தேகமில்லை. அனைத்து அறிஞர்களும் இதனை ஏகோபித்துக் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் திருமறையிலும், நபிமொழியிலும், ஸஹாபாக்களின் பிரயோகங்களிலும் வந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் வஸீலா, தவஸ்ஸுல் என்பவற்றிற்கு இஸ்லாமிய ஷரீஅத்து அளிக்கும் கருத்துக்களாகும். எனவே அதில் எந்த தவறுதல்களும் ஏற்படுவதற்கு வழியில்லைதானே. வாஜிபான, முஸ்தஹப்பான அனைத்து நற்கிரியைகளும் இஸ்லாமிய ஷரீஅத்தின் வஸீலாக்கள் எனலாம். நபி (ஸல்) அவர்களை விசுவாசித்து வழிபட்டு நடப்பதினால் இறைவனிடம் (வஸீலாவை) சமீபிப்பதைத் தேடுதல் என்பதும் இங்கே பொருந்துகின்றதல்லவா? இதுதான் உண்மையான வஸீலா.
பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு ஸஹாபாக்கள் வஸீலா தேடினார்களென்றால் அவர்களின் துஆக்களையும், ஷபாஅத்தையும் பெற்று இறைவனிடம் சமீபிப்பதை (வஸீலாவை) தேடினார்கள் என்று விளங்குதல் வேண்டும். இத்தகைய கருத்துள்ள வஸீலாவைத் தேடிக்கொள்வதற்கு எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். ஏனெனில் அறிஞர் பெருமக்கள் அனைவரும் இம்மாதிரியான வஸீலாவைத் தேட அனுமதி வழங்கியுள்ளனர். உமர் (ரலி) அவர்களின் பிரார்த்தனையும் இதைத்தான் காட்டுகிறது. தம் பிரார்த்தனையில் அவர்கள் கூறினார்கள்: ‘இறைவா! நாங்கள் மழையின்றி வரட்சியால் பாதிக்கப்பட்ட வேளையில் எங்கள் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு நாங்கள் உன்னை சமீபிப்பதற்கு முனைந்தோம். அதனால் நீ எங்களுக்கு மழை பெய்யச் செய்து அருள் பாலித்தாய். அதே நிலைமை இன்று எங்களைப் பாதித்துள்ளது. ஆகவே நபிகளின் பெரிய தந்தையார் அவர்களை வைத்து நாங்கள் உன்னை சமீபிக்கிறோம். (வஸீலா தேடுகிறோம்) ஆகவே எங்களுக்கு மழையைப் பெய்யச் செய்தருள்வாயாக!
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ‘நபி (ஸல்) அவர்களைக் கொண்டு அல்லது நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையைக் கொண்டு’ தான் அவர்களின் துஆ ஷபாஅத் இவற்றைக் கொண்டு அல்லது அவற்றின் உதவியால் நற்கருமங்கள் செய்து நாங்கள் உன்னை அணுகினோம் என்பதாகும். ஆகவே நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட அதே நிலைமை இன்று எங்களைப் பாதித்துள்ளது. எனவே நபியின் சிறிய தந்தையின் துஆ ஷபாஅத்தின் பொருட்டால் உன்னை நாங்கள் சமீபிக்கிறோம், வஸீலா தேடுகிறோம் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இதைத்தான் கூறினான்: “அவனிடம் நெருங்கிச் செல்லக்கூடிய வணக்க வழிமுறைகளைத் தேடிக் கொள்ளுங்கள்”. (5:35)
நபிக்கு வழிப்படுதல் அல்லாஹ்வுக்கு வழிப்படுதல் போலாகும். ஆகவே நபிக்கு வழிப்பட்டு நடப்பதினாலும், அல்லாஹ்வின் சமீபத்தைப் பெற முடிகிறது. இதை அல்லாஹ் விளக்கிக் காட்டுகிறான்: “எவன் அல்லாஹ்வின் தூதருக்கு வழிப்பட்டு நடக்கிறானோ, அவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டான்”. (4:80)
நற்கிரியைகள் புரிந்து இறைவனுக்கு வழிப்பட்டு அவன் தூதர்களைப் பின்பற்றி அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்லுதல் என்ற கருத்துக்குரிய வஸீலாவைத் தேடுவது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும். இத்தகைய கருத்துக்குரிய வஸீலா இஸ்லாத்தின் அடித்தளம் போன்றதல்லவா? முஸ்லிம்களில் யாரால்தான் இத்தகைய வஸீலாவை மறுக்க முடியும்? இதைப் போலவே நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையையும், ஷபாஅத்தையும் பெற்று இறைவனை சமீபிப்பதும் இவையெல்லாம் அனுமதிக்கப்பட்ட வஸீலாவாகும். எனவே தான் உமர் (ரலி) அவர்கள் இதைச் செய்துக் காட்டினார்கள். அவர்கள் நபிகளின் துஆவின் பொருட்டால் அல்லாஹ்விடம் வஸீலா தேடினார்கள். அன்றி நபிகளைப் பொருட்டாக வைத்து வஸீலா தேடவில்லை. இது முக்கியமாக முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா? நபிகளைப் பொருட்டாகக் கொண்டு வஸீலா தேடியிருந்தால் அவர்கள் மரணமடைந்த பிறகும் அவர்களை வைத்தே வஸீலா தேடியிருக்க வேண்டும்.
நபிகள் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை விட மேலானவர்கள் அல்லவா? நபியவர்கள் உயிருடன் வாழ்ந்திருக்கையிலும் நபிகள் மரணமடைந்தாலும் அவர்களைப் பொறுத்த வரையில் இருவாழ்க்கையும் சமம்தானே. கப்றிலும் நபிகள் உயிருடன்தான் இருப்பார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள் அப்படிச் செய்யாமல் நபியவர்கள் மரணமடைந்த பிறகு அவர்களின் பெரிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு இறைவனிடம் வஸீலா தேடியதனால் நபிகளின் உடலைக் கொண்டும், அதைப் பொருட்டாக வைத்தும் அவர்கள் வஸீலா தேடவில்லை என்பது தெளிவாகிறது. அப்படி உடலைப் பொருட்டாக வைத்து வஸீலா தேடக்கூடாது என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். எனவே நபியவர்கள் வாழ்ந்திருக்கையில் செய்யப்பட்ட சில அமல்கள் நபியவர்கள் மரணமடைந்த பிறகு முடியாமலாகிவிடும். அப்படியானால் நபியவர்கள் மரணமடைந்த பிறகும் அவர்களின் துஆவைக் கொண்டு வஸீலா தேட முடியாது. ஏனெனில் அது அவர்கள் உயிருடன் வாழ்ந்திருந்த காலத்தோடு முடிந்து விட்டதல்லவா? இதிலிருந்து நாம் எதை விளங்குகிறோமென்றால் உயிருடன் வாழ்ந்திருக்கும் மனிதனிடம் வஸீலா தேட முடியும். இறந்துபோன மனிதன் எத்தகு பெரியவனாக இருப்பினும் அவரின் துஆவையோ சிபாரிசையோ எதிர்பார்த்து வஸீலா தேடக் கூடாது. அப்படித் தேடுதல் பெருங் குற்றமாகத் திரும்பி விடும் என்பதைத்தான்.
இறைவனுக்கு வழிப்படுவதின் மூலமாக அவனை நெருங்குதல் என்ற கருத்துக்குரிய வஸீலாவை மனிதன் தேட வேண்டும். அதற்கு காலமோ இடமோ குறிப்பில்லை. ஆனால் நபிகளின் துஆவைக் கொண்டும், சிபாரிசைக் கொண்டும் இறைவனை நெருங்குதல் என்ற கருத்துக்குரிய வஸீலாவுக்கு நபியவர்கள் ஹயாத்துடனிருப்பதை நிபந்தனையாக்கப்படுகிறது. தற்பொழுது நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டதினால் அத்தகைய வஸீலாவும் வேண்டப்பட மாட்டாது. நபிகளின் ஷபாஅத்தைக் கொண்டு வஸீலா தேடுவதற்கும் இனி மறுமையில்தான் முடியும். நபிகளைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதும், அவர்களைக் கொண்டு ஆணையிட்டு வேண்டுவதும் இவைகள் அனைத்துமே பெரிய தவறான கருமங்களாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் நபித்தோழர்களில் ஒருவர்கூட இவற்றைச் செய்யவில்லையல்லவா? எத்தனையோ துன்பங்கள், துயரங்கள் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டன. இருப்பினும் படைப்பினங்களை அழைத்தோ, அவற்றின் பொருட்டாலோ ஒருபோதிலும் அவர்கள் பிரார்த்திக்கவில்லை. நபிகளின் வாழ்நாளிலும் இப்படிச் செய்யவில்லை. அவர்கள் வபாத்தான பிறகும் செய்யவில்லை. நபிகளின் கப்றிலும், மற்றெந்த ஸாலிஹீன்கள் சென்று அவர்கள் இப்படிச் செய்யவில்லை. ஸஹாபாக்களைப் பற்றி அறிவிக்கப்படும் பலமாதிரியான பிரார்த்தனைகளில் ஒன்றில் கூட இத்தகைய பிரார்த்தனைகளைக் காண முடியாது. நபிகளும், ஸஹாபாக்களும் கூறியதாக இது விஷயத்தில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அவை பலவீனமான ஹதீஸ்களாக இருப்பதைக் காணலாம். இன்ஷா அல்லாஹ் அதைப் பற்றி பின்னர் நாம் விளக்கமாகக் குறிப்பிடுகிறோம்.
இனி மத்ஹபுடைய இமாம்களின் அபிப்பிராயத்துக்கு வருவோம். இவர்களின் சொற்களைக் கவனித்தால் கூட ஸஹாபாக்களின் போக்கை இவர்கள் மீறவில்லை என்பதையும் காணலாம். அபூஹனீபா (ரஹ்) அவர்களும் அவர்களின் தோழர்களான இதர இமாம்கள் அனைவரும் இறந்து போன மனிதரைக் கொண்டும், அவரைப் பொருட்டாக வைத்தும், அவரைக் கொண்டு ஆணையிட்டும் வஸீலா தேடக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். ‘அபுல் ஹுஸைனுல் குத்ரி’ என்ற அறிஞர் ‘ஷரஹுல் கர்கீ’ என்ற பெரும் ஃபிக்ஹு நூலில் கராஹத் என்ற தலைப்பில் பர்பீ என்ற தம் மேற்கூறிய சட்டத்தை இமாம் அபூஹனீபாவின் தோழர்களான இமாம்களில் பலர் குறிப்பிட்டுள்ளதாக அறிவிக்கிறார்.
இமாம் அபூ யூஸுப் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக பிஷருப்னுல் வலீத் குறிப்பிடுகிறார்; ‘அல்லாஹ்விடம் அவனைக் கொண்டல்லாமல் மற்ற யாரைப் பொருட்டாக வைத்தும் பிரார்த்திக்க கூடாது. ‘இறைவா! உனது சிம்மாசனத்தின் மகத்துவத்தால் உன் சிருஷ்டிகளின் பொருட்டால் கேட்கிறேன் என்று பிரார்த்திப்பதை நான் பெரிதும் வெறுக்கிறேன்’ என்று இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறினார்களாம். இமாம் அபூ ஹனீபா அவர்கள் கூறியதற்கொப்ப அபிப்பிராயப் பட்டிருக்கிறார்கள். ‘இன்னாரின் பொருட்டால் அல்லது அன்பியாக்கள், ரஸுல்மார்களின் பொருட்டால் அல்லது கஃபாவின் பொருட்டால் அல்லது மஷ்அருல் ஹராமின் பொருட்டால் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறி துஆச் செய்தலை முழுக்க முழுக்க இமாம் அபூ யூஸுப்பும் வெறுத்திருக்கிறார்கள்.
அறிஞர் குத்ரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது? எனவே சிருஷ்டிகளின் பொருட்டைக் கொண்டு பிரார்த்திப்பது தவறாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த முடிவுமாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…