மிகவும் கடினமாதொரு காலச் சூழலில் மனித சமூகம் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சிரமநிலையில், தம்மைப் பெற்ற தாய்-தந்தையரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது, இறையருளுக்கும், மதிப்புக்கும் உரிய செயலாகும். அதுமட்டுமல்ல, இறைகட்டளையை மதித்து தமது ஆன்மிக நிலையை வளர்த்து கொள்ளும் ஒரு மாபெரும் வாய்ப்புமாகும் அது!
தம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தையருக்காக பிரார்த்திக்கும்படி மட்டும் மனிதனுக்கு இறைவன் கட்டளையிடவில்லை. மாறாக, நம்மைப் பராமரித்து வளர்க்க யாருமில்லாது நிராதரவான நிலையில் குழந்தையாக நாம் இருந்தோம். அந்நேரம், நமது சுகத்துக்காகவும், தேவைகளுக்காகவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தாம் பெற்றோர்!
இதனைக் கவனத்தில் கொண்டு பெற்றோர் மீது எல்லையில்லா கருணை காட்டும்படி இறைவன் கட்டளையிடுகின்றான்! குறிப்பாக, தாயைமதித்துப் போற்றும் வகையில் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
சுவனம் அன்னையின் காலடியில் இருக்கின்றது!
முஸ்லிம் பெற்றோர் வயது முதிந்தவர்களாகி விட்டால், அவர்கள் கருணையுடன் நடத்தப்படுகின்றார்கள். அவர்களிடம் காட்டப்படும் கருணையிலும், பரிவிலும் எந்தவொரு குறையும் ஏற்படுவதில்லை. பெற்றோருக்குத் தொண்டாற்றுவதும் – சேவை புரிவதும் இஸ்லாத்தில் தொழுகைக்கு அடுத்தப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கடமையாக போற்றப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, இத்தகையதொரு சேவையைத் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பதும் பெற்றோர்க்குரிய உரிமையாகும். (முதிர்ந்த வயதின் காரணமாக) பெற்றோர் (அறிந்தும், அறியாமலும்) செய்கின்ற தவறுகளுக்காக அவர்களை குற்றம் பிடிப்பது மிகவும் வெறுக்கத்தக்க இழிவான ஒரு செயலாகும். பிள்ளைகளின் இத்தகைய செயல்பாடு அவர்களைப் பெற்றவர்களுக்கு பெரும் கவலையைத் தரக்கூடியது.
இதோ, திருக்குர்ஆனின் கட்டளையைக் காணுங்கள்:
உம் அதிபதி(யாகிய அல்லாஹ்) விதித்துள்ளான்: “அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய்-தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்றுகூட கூறாதீர்!
மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக!”
மேலும், “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடன் பாசத்துடனும் வளர்த்தார்களோ, அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!” என நீர் இறைஞ்சியவண்ணம் இருப்பீராக! திருக்குர்ஆன்: 17:23,24
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.