இயேசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

ஈஸா (அலை)  – இயேசு – ஜீஸஸ் என்று வழங்கப்படும் இயேசு கிறிஸ்து அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். உயர்ந்த அந்தஸ்தில் வைத்து அவரைப் போற்றுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்த உலகில் அவருடைய இரண்டாவது வருகையை நம்புகின்றனர்.

மனித குலத்துக்கு இறைவன் அனுப்பிய தூதர்களில் ஒருவராக அவரை நம்புகின்றார்கள். அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்கள் அவரை வெறுமனே ஜீஸஸ் என்றோ, இயேசு என்றோ குறிப்பிடுவதில்லை! மாறாக, அவருடைய பெயருடன் சேர்த்து அலைஹிஸ்ஸலாம் – இறைசாந்தியும், சமாதானமும் அவர் மீது பொழியட்டும்! என்று கூறி போற்றுகின்றனர். கன்னித்தாயின் வயிற்றில் பிறந்த அவருடைய பிறப்பை தூய்மையானதாகப் போற்றிப் புகழ்கின்றது இஸ்லாம்! மர்யம் எனும் அத்தியாயத்தில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இயேசுவின் தாய் மர்யம் எனும் மேரியை உலகப் பெண்கள் அனைவரிலும் சிறந்த கற்புக்கரசியாக மெச்சுகின்றது!


இயேசு மற்றும் அவருடைய தாய் மேரியின் சிறப்பை திருக்குர்ஆன் வர்ணிப்பதைக் காணுங்கள்:-

மேலும், அந்நேரம் வந்தபோது, வானர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்து தூய்மையாக்கினான்; மேலும், அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உமக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும், ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”

(நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள் இவற்றை உமக்கு, வஹி (எனும் இறைசெய்தி) மூலம் நாம் அறிவிக்கின்றோம்.

(வழிபாட்டு இல்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது  அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும், அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை.

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூறுங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளைப் பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா – அல் மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். மேலும், அவர் தொட்டில் பருவத்திலும், பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடையே பேசுவார். மேலும் நல்லொழுக்கம் உடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்” (இதனைக் கேட்ட) மர்யம், ” என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படி குழந்தைப் பிறக்கும்?” என்று வினவினார்.

அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ஆகுக என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது! (திருக்குர்ஆன்: 3: 42_47)

ஆதி மனிதரான ஆதம் (அலை) அவர்களை தந்தையின்றி வியக்கத்தக்க முறையில் பிறக்கச் செய்த அதே இறை ஆற்றல் தான் இயேசுவையும் படைத்தது.

திருக்குர்ஆன் கூறுகின்றது:

திண்ணமாக அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதத்தைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ஆகுக என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார். (அல்குர்ஆன்: 3:59)

இறையருளால் இயேசு தனது தூதுத்துவத்தின் போது பல்வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். இயேசு கூறியதை திருக்குர்ஆன் இவ்வாறு நமக்கு அறிவிக்கின்றது:-

(இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழ்த்தோன்றல்களிடம் வந்தபோது:) “திண்ணமாக, நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் கண் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப்போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும், நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதிக் கொண்டு உயிர் பெற்றெழச் செய்வேன்”! (அல்குர்ஆன்: 3:49)

தமக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் கொண்டு வந்த ஏகத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தித் தருவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவுமே இயேசுவும், முஹம்மத் (ஸல்) அவர்களும் இறைத்தூதர்களாக அனுப்பப்பட்டார்களே தவிர, ஏகத்துவக் கொள்கையின் தாத்பரியத்தை மாற்றுவதற்காக இறைத்தூதர்களாக அனுப்பப்படவில்லை. தனது வருகையைக் குறித்து இயேசு அவர்களின் வாய்மொழியை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

……எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்கு தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன்!” (அல்குர்ஆன்: 3:50)

முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:-

ஏக இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதர் ஆவார்கள். மேலும், இயேசு அவர்கள் இறைவனின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார்கள். மேலும் இறைவாக்கு மர்யத்தின் வாய்மொழியாக வெளிப்பட்டது. மேலும், சுவனமும், நரகமும் இருப்பது உண்மையே!  – என யார் உளப்பூர்வமாக நம்புகிறாரோ அவரை இறைவன் சுவனத்துள் நுழைவிப்பான். (ஆதாரம்-புகாரி)

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.