திருக்குர்ஆன் கூறுகின்றது:-
தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை! திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான் திருக்குர்ஆன்: 3:42-47.
சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அம்சமே! இதனால்தான், இன்றும்கூட முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பைபெற முடிந்திருக்கின்றது. ஏனைய மதங்களின் மீதான இஸ்லாத்தின் சகிப்புத் தன்மைக்கு வரலாற்றில் பல உதாரணங்கள் கூற முடியும்.
கி.பி. 634-ல் இஸ்லாமிய ஆட்சியாளரான கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ஜெருஸலத்துக்குள் நுழைந்தபோது, நகரில் இருந்த பல்வேறு மதத்தவருக்கும் அவரவர் மதவழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். அதுமட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத சிறுபானமையினர் தத்தமது மத நம்பிக்கையின் அடிப்படையில், நீதிமன்றங்களை அமைத்துக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டம் அனுமதி வழங்குகின்றது. தாமே நிர்ணயித்துக் கொண்ட குடும்பச் சட்டங்களையும் அவர்கள் பின்பற்றிக் கொள்வதில் எந்த தடையையும் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.