சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர்.

இறைவன் நபியவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்திருக்கிறான். அனைத்துப் பாவங்களை விட்டும் தூய்மைப் படுத்தினான். அதனால் அவர்கள் குற்றங்கள் புரிவதை விட்டும் பாதுகாக்கப் படுகிறார்கள். அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தவனும் சன்மார்க்கத்தை எய்துகிறான். கீழ்வரும் வசனத்தில் இறைவன் தன் நபியைப் பரிசுத்தமானவர் என்று பாராட்டுகிறான்: “தோன்றி மறையும் நட்சத்திரங்களின் மீது ஆணையாக, உங்கள் தோழர் (நபியவர்கள்) வழி கெடவுமில்லை. தவறான வழியில் செல்லவுமில்லை. தன்னிஷ்டப்படி அவர் எதனையும் கூற மாட்டார். வஹி மூலம் அறிவிக்கப் பட்டதைத் தான் கூறுவார்”. (53:14)

இறைவனை நாம் தொழும்போது கீழ்வரும் வசனத்தைச் சொல்ல வேண்டுமென்று நம்மை இறைவன் பணித்துள்ளான்: “நீ எங்களை நேரான வழியில் நடத்தி வைப்பாயாக. எவர்களுக்கு நீ அருள்பாலித்தாயோ அவர்களுடைய வழியில். அவ்வழி உன் கோபத்திற்குள்ளானவர்களுடைய வழியுமல்ல. நெறி பிறழ்ந்தவர்களின் வழியுமல்ல”. (ஸுரா பாத்திஹா) கோபத்திற்குள்ளானவர்களைக் கொண்டு யூதர்களையும், நெறி பிறழ்ந்தவர்களைக் கொண்டு கிறிஸ்தவர்களையும் கருதப்பட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதீ பின் ஹாதிம் கூறுகிறார். (திர்மிதி)

எனவேதான் ஸுஃப்யான் பின் உயைனா என்பவர்கள் விளக்குகிறார்கள்: ‘பெரியார்கள் சொல்வார்களாம். நம் முஸ்லிம் அறிவாளிகளில் மோசமானவர்களிடம் யூதர்களின் ஒரு வகைப் பாவனையைக் காண முடிகிறது. நம் முஸ்லிம்களிலேயே தவறான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறவர்களிடம் கிறிஸ்தவர்களின் ஒரு ஒற்றுமை இருக்கிறது’ என நெறி தவறிய அறிஞனுடையவும், விபரம் தெரியாமல் ஏராள வணக்க வழிபாடுகளைப் புரிகிறவர்களுடையவும் (ஃபித்னாவை) குழப்படிகளைப் பயந்து கொள்ளுங்கள் என்று ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் பலர் கூறியிருக்கின்றனர். ஏனெனில் இவ்விரு சாராரின் குறும்புத்தனமும், குழப்படியும் எல்லோரையும் பாதிக்கின்றன அல்லவா? எவன் மெய்யைப் பகுத்துணர்ந்த பின்னரும் அவ்வழியில் நடக்கவில்லையோ அவன் யூதனுக்கு ஒப்பானவன். அத்தகைய யூதர்களைப் பற்றித் திருமறை கீழ்வருமாறு கூறுகிறது: “நீங்கள் தவ்ராத்தை ஓதிக் கொண்டே உங்களை மறந்து விட்டு மற்ற மனிதர்களை நன்மை செய்யும்படி ஏவுகிறீர்கள்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (2:44)

எவர் மார்க்க விபரமின்றி அல்லாஹ்வை அளவு கடந்து தன்மனம் போன போக்கிலும், இணை வைத்தும், மார்க்க வரம்புகளை மீறியும் வணக்கங்கள் புரிகிறாரோ அவர் கிறிஸ்தவருக்கு ஒப்பாவார். அவர்களைப் பற்றி அல்லாஹ் கீழ்வருமாறு குறிப்பிடுகிறான்: “வேதத்தையுடையோர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையல்லாததை மிகைப்படுத்திக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும் முன்னர் வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழிகெடுத்து விட்டதுடன் தாங்களும் நேர் மார்க்கத்திலிருந்து விலகி விட்டனர்”. (5:77)

சுருங்கக்கூறின், உண்மையைப் புரிந்தும் அதற்கொப்ப செயல்படாதவன் மனோ இச்சையின் அடிமையாகிறான். விபரமின்றி ஏராளமான வழிபாடுகளில் மூழ்கிறவனை வழி கெட்டவனாகவும் சித்தரிக்கப் படுகிறது. மனோ இச்சைக்கு அடிமையாவதினால் தான்தோன்றித்தனம் பிறக்கிறது. நேர்வழியை ஒதுக்கி விட்டதிலிருந்து வழிகேடுகள் தலை தூக்குகின்றன. இறைவன் கூறுகிறான்: “(நபியே!) நீர் அவர்களுக்கு ஒருவனுடைய (பல்ஆமிப்னு பாஊரா) சரித்திரத்தை ஓதிக் காண்பியும். அவனுக்கு நாம், நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். எனினும் அவன் அதிலிருந்து முற்றிலும் நழுவி விட்டான். ஆகவே ஷைத்தான் அவனைப்பின் தொடர்ந்து சென்றான். அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி வழி தவறியவர்களிலாகி விட்டான். நாம் நினைத்திருந்தால் அவனை அவ்வத்தாட்சிகளின் காரணமாக உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக இன்பத்தில் மூழ்கி தன் இச்சையைப் பின்பற்றி விட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்திற்கு ஒத்திருக்கிறது. நீர் அதைத் துரத்தினாலும் நாக்கை தொங்க விட்டுக் கொள்கிறது. விட்டு விட்டாலும் நாக்கை தொங்க விட்டுக் கொள்கிறது. இதுவே நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களுக்கு உதாரணமாகும். ஆகவே அவர்கள் சிந்தித்து ஆராய்ந்து நடக்கும் பொருட்டு இச்சரித்திரத்தை அடிக்கடிக் கூறுவீராக”. (7:175-176)

 நியாயமின்றி பூமியில் கர்வங் கொண்டு அலைபவர்கள் என்னுடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும்படி செய்து விடுவேன். அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்ட போதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறு நேரான வழியை அவர்கள் கண்ட போதிலும் அதனைத் (தம் வாழ்க்கையின்) வழியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தவறான வழியைக் கண்டால் அதனையே (தம் வாழ்வின்) பாதையாக அமைத்துக் கொள்வார்கள். திட்டமாக அவர்கள் நம்முடைய வசனங்களை பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்துப் பாராமுகமாக இருந்ததே இதற்குக் காரணமாகும்”. (7:146)

எனவே எவர்கள் வழிகேட்டையும், மனோ இச்சைக்கொப்ப நடப்பதையும் தம் வாழ்க்கையில் இணைத்துக் கொள்கிறாரோ அவர்கள் யூத, கிறிஸ்தவர்களின் வழியைப் பின்பற்றி விடுகிறார்கள். இறைவன் நம் அனைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும், நபிமார்கள், உயிர்த்தியாகிகள், இறை நேசர்கள், மற்றும் நன்மக்கள் எல்லோருக்கும் காட்டிய நேரான பாதையைக் காட்டியருள்வானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்…      

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.