இஸ்லாத்தில் அடைப்படைச் சித்தாந்தங்கள் இரண்டு. ஒன்று: இணைவைக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின் முறைகளை அல்லாஹ்வின் சட்டங்களிலிருந்தும், அவன் தூதர் காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் என்ற விதிகளிலிருந்தும் எடுத்து வழிபடுவது. தூதுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். அவ்வப்போதுள்ள நபிமார்களின் ஏவல்களுக்கொப்ப அல்லாஹ்வுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. யூதர்களின் தௌராத் வேதம் உறுதி குலையாமல் நேர்மையாக இருந்த காலத்தில் அதன் விதிப்படி வணக்கங்கள் புரிந்தவர்கள் முஸ்லிம்களாக மதிக்கப்பட்டனர். இன்ஜீலும் அப்படித்தான். அதாவது இவ்வேதங்களில் மனிதக்கரம் நுழைந்து அவற்றை மாற்றி மறிப்பதற்கு முன்னர் வேதங்களுக்கொப்ப வணங்கி வழிபட்டு வந்தவர்களையே முஸ்லிம்களென்று கூறமுடியும்.
இஸ்லாத்தின் தொடக்கத்தில் பைத்துல்முகத்தஸை நோக்கி நபியவர்கள் தொழுது வந்திருக்கிறார்கள். இந்த நாட்களில் பைத்துல் முகத்தஸின் பக்கம் திரும்பி நின்று முஸ்லிம்கள் நிறைவேற்றிய தொழுகை இஸ்லாமிய வணக்கமாக கருதப்பட்டது. எப்பொழுதிலிருந்து கஃபாவை நோக்கித் திரும்ப வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கஃபாவை நோக்கித் தொழுதார்கள். இதுவும் இஸ்லாமியத் தொழுகைதான். இனிமேல் கஃபாவை புறக்கணித்து விட்டு பைத்துல் முகத்தஸை நோக்கி எவன் தொழுகிறானோ அவனது தொழுகை இஸ்லாத்திற்கு மாறான தொழுகையாகும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு எவரெல்லாம் அவர்கள் காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் போன்ற சட்டங்களை ஒதுக்கி விட்டு அல்லாஹ்வும், ரஸூலும் சொல்லாத அமல்களை வணக்கமாக எண்ணி அவற்றைச் செய்து மனம் போன போக்கில் வழிபாடுகள் செய்கிறார்களோ அவர்களை முஸ்லிம்கள் என்று சொல்ல முடியாது. அத்துடன் மனிதன் செய்கின்ற வாஜிப், முஸ்தஹப் போன்ற சட்டத்துக்குட்பட்ட அமல்களையெல்லாம் அகில உலகைப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனைக் கருதிச் செய்ய வேண்டும். இதை அல்லாஹ்வே கூறுகிறான்:
“வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர்தான் மாறு செய்து வேறுபட்டனர். ஆனால் இறைவனுக்கு கலப்பற்ற மார்க்கத்தையே செய்ய வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றல்லாமல் வேறு எதையும் அவர்கள் ஏவப்படவில்லை”. (98:4-5)
“(நபியே!) நிச்சயமாக முற்றிலும் உண்மையான இவ்வேதத்தை நாம்தாம் உமக்கு இறக்கி வைத்திருக்கிறோம். எனவே நீர் முற்றிலும் பரிசுத்த மனதுடன் அல்லாஹ்வை வணங்கி வாரும். தூய வழிபாடு அல்லாஹ்வுக்கே சொந்தமானது”. (39:2-3)
அல்லாஹ்வைக் கொண்டும் ரஸூலைக் கொண்டும் ஈமான் கொள்ளுதல், ஏழை எளியோருக்குப் பொருளுதவி செய்தல், மற்றும் இதர தான-தர்மங்கள் வழிபாடுகள் புரிதல், அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசித்தல், மேலும் சகல முஸ்லிம்கள் அனைத்து வாஜிப்-முஸ்தஹப்பான ஆகியவையெல்லாம் அல்லாஹ் ஒருவனின் திருப்தியை மட்டுமே நாடிச் செய்யவேண்டுமென மனிதன் பணிக்கப்பட்டுள்ளான். இத்தகைய அமல்களுக்கு சிருஷ்டிகளிடம் கூலி கேட்கலாகாது. அவர்களிடம் துஆ வேண்டும் படியும், மற்ற எந்த விஷயங்களையும் முறையிடவோ வேண்டவோ கூடாது. படைப்பினங்களிடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்க கூடாது என்று இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கிறது. சிருஷ்டிகளிடம் கேட்க இஸ்லாம் அனுமதித்தவைக் கூட அவர்களிடம் கேட்பது வாஜிப், முஸ்தஹப்பான சட்டங்களுக்குட்பட்ட செய்கையொன்றும் அல்ல. அவை ஜாயிஸ் (அனுமதிக்கப் பட்டவை) தான். ஜாயிஸாக இருந்தும் கூட சில இடங்களில்தான் படைப்பினங்களிடம் கேட்பது ஜாயிஸாகும் (அனுமதிக்கப்படும்). மேலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருமனிதரிடம் பிறர் வந்து கெஞ்சிக் கேட்பதற்கு முன்னரே அவன் கொடுக்க வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கிறான். அவ்வாறெனின் கேட்டல் என்பது அடியோடு உலகிலிருந்து மாய்ந்து விட வேண்டுமல்லவா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்…