அல்லாஹ் எனும் சொல் இணை – துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் எனும் சொல்லே, தனித்துவமிக்க ஏக இறைவனின் மகாத்மியத்தை முன்னிறுத்துவதாக உள்ளது.
ஆக, உலக சமுதாயங்கள் பலவும் தத்தமது மொழிகளில் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்திலிருந்தும் இஸ்லாம் கூறும் அல்லாஹ் எனும் சொல் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கின்றது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை! இனியும் ஐயம் ஏற்பட இடமில்லை!
மேலும், முஸ்லிம் ஒருவனுடைய பார்வையில், அல்லாஹ் எனும் ஏக இறைவன் மட்டுமே அனைத்துக்கும் ஒருவன், அதிபதி, படைப்பாளன், பேரண்டம் முழுவதையும் தனது நிர்வாகக் குடையின் கீழ் வைத்திருப்பவன், எந்நிலையிலும் எதுவொன்றுக்கும் ஈடாக முடியாதவன். அதுபோல், அவனுக்கு ஈடாக எதுவொன்றும் இல்லாதவன். இறைவனின் இந்த ஏகத்துவத்தை பறைசாற்றும் விதமாக திருக்குர்ஆன் முழங்கும் சங்கநாதத்தைக் கேளுங்கள்:-
(நபியே!) நீர் கூறுவீராக!
அவன் அல்லாஹ், ஏகன்.
அல்லாஹ் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமில்லாதவன்.
அவன் யாருடைய சந்ததியுமில்லை.
அவனுக்கு யாரும் சந்ததி இல்லை! (மேலும்) அவனுக்கு நிகராக
எவரும் இலர்!
-திருக்குர்ஆன் அத்தியாயம்: 112.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.