அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து நாட்களைக் கழித்து பிறகு சமாதிகளில் புதைக்கப்பட்டவர்களின் உருவச் சிலையைக் கட்டி உயர்த்தி அந்தப் பிம்பங்களுக்கு கீழ்ப்படிந்து வழிபாடுகளைச் செலுத்தினார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகமோ இணைவைப்பதில் மற்றொரு வழியைக் கையாண்டார்கள். நட்சத்திரங்களை வணங்கினார்கள். சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்களுக்கெல்லாம் வணக்கங்களைச் செலுத்தினார்கள். அவற்றைக் கடவுளாகவும் மதித்தார்கள்.
இவ்விரு கூட்டத்தினரும் ஜின்களுக்கு வழிப்படுவதில் ஒன்றித்திருந்தார்கள். ஷைத்தான்கள் இவர்களுடன் நேரடி சம்பாஷணைகளை நடத்துவதுண்டு. பலதரப்பட்ட குற்றங்களைப் புரிவதற்கு ஷைத்தான் இவர்களுக்கு உறுதுணையாக நின்றான். உண்மையில் ஜின்களுக்கு கீழ்ப்படிந்து வணக்கங்களைச் செய்து வந்த இச்சமூகத்தார்கள் தங்களை மலக்குகளுக்கு வழிபடுகிறவர்கள் என நினைத்துக் கொண்டனர். ஜின்களும் இவர்களின் இப்பாவச் செயலுகளுக்கு உடந்தையாக இருந்தார்கள். இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: “(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்த) இம்மக்களை ஒன்று சேர்க்கப்படும் இந்நாளில் மலக்குகளை நோக்கி இவர்கள் தானே உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் என்று கேட்கப்படும். அதற்கவர்கள் நாயனே! நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இரட்சகன் (அவர்களல்ல). இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தார்கள். (எங்களையல்ல). இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களையே விசுவாசம் கொண்டுமிருந்தார்கள்”. (34:40-41).
மலக்குகள் ஒரு போதும் நிராகரித்தவர்களுடன் சேர மாட்டார்கள். இறைவனுக்கு இணைதுணை வைக்கும் விஷயத்தில் ஒத்தாசை புரிய மாட்டார்கள். இறந்தவர்களைக் கொண்டும் சரி, உயிருள்ளவர்களைக் கொண்டும் சரி எவரைக் கொண்டானாலும் இறைவனுக்கு துணை (பங்காளி) வைக்கும் விஷயத்தில் ஒருக்காலும் மலக்குகள் பொருந்தக் கூடியவர்களல்ல. ஆனால் ஷைத்தானோ மக்களுக்குப் பலமாதிரியான பேருதவிகளைச் செய்து கொடுக்கிறான். மனித உருவத்தில் வேடம் மாறி வந்து இணைவைப்பதற்குரிய எல்லா ஒத்தாசைகளையும் புரிந்து கொடுக்கிறான். சிலவேளைகளில் நான்தான் நூஹ் நபி, நானே இப்ராஹீம் நபி என்றெல்லாம் கூறுவான். தன்னை நபி ஹிள்ர் என்றும் அபூபக்கர், உமர் என்றெல்லாம் கூறி மக்களின் நம்பிக்கையைப் பறித்துக் கொண்டு ஓடி விடுகிறான். தன்னை நபியென்றும், ஸஹாபியென்றும், பெரிய ஷைகு என்றும் மக்கள் கருதுமளவுக்கு நடிக்கிறான். இந்த ஏமாற்று வித்தையை விளங்காத மக்கள் அவனுடைய ஜாலவித்தைகளைக் கண்கூடாகப் பார்த்து நம்பி நம் நபி வந்துள்ளார், பெருமைக்குரிய ஷைகு விஜயம் செய்திருக்கிறார் என்றெல்லாம் கூறி ஏமாந்து தமது திடகாத்திரமில்லாத நம்பிக்கையை இந்த ஷைத்தான்களுக்கும், ஜின்களுக்கும் பறிகொடுத்து விட்டுத் தத்தளிக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…