பிஸ்மில்லாஹ்
அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் (மகளிர் முகம் மேனி) மறைத்தல் திறத்தல் பற்றிய சட்டங்கள் என்ற நூலில் இருந்து:- நம்பிக்கை கொண்டவர்களுக்காக!
அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களில் நின்றும், முஸ்லிம்களில் இதனைக் கண்ணுறுவோர்பால் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பாக்கியமும் உண்டாவதாக! அல்லாஹ் என்னையும் அவர்களையும் துக்கமும், அவமானமுண்டாக்கும் காரணங்களிலிருந்து காப்பாற்றுவானாக! ஆமின்.
முஸ்லிம்களே! ‘பெண்கள் அன்னிய ஆடவருக்கு அழகையும், அலங்காரத்தையும் வெளிப்படுத்துவது ஹறாம்’ என்ற அல்லாஹ்வின் கட்டளையை அலட்சியஞ் செய்துவிட்டுப் பெரும்பாலான பெண்கள் ஆண்களிலிருந்து மறைந்து கொள்ளாமலும், வதன எழிலை வெளிப்படுத்தியும் கூச்சமின்றி நடமாடித் திரியும் கேவலநிலை அநேக ஊர்களில் பரவி வருவது உங்கள் பார்வையிலிருந்து மறைந்த விஷயமல்ல.
இவை மிகமோசமான வெறுப்பூட்டும் நிகழ்ச்சி என்பதிலும், அப்பட்டமான குற்ற செயல் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. வெளியில் நடமாடுவதும், அழகை வெளிப்படுத்துவதுமான இத்தீய செயல், குற்றங்களைத் தோற்றுவித்து, நாணத்தைப் போக்கிப் பிரச்சனைகள் பரவ ஏதுவாயிருப்பதோடு இறை தண்டனையும் சாபக்கேடும் இறங்குவதற்குப் பெருங்காரணமாயமைந்திருக்கிறது.
எனவே முஸ்லிம்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களிடையேயுள்ள அறிவீனரின் கரங்களைப் பற்றிப் பாவங்களில் தோய்த்து விடாது, தடுத்து நிறுத்துங்கள். உங்கள் பெண்களை அல்லாஹ் விரோதித்தவைகளிலிருந்து தடுத்து வையுங்கள். பர்தாவும், திரையும் போட்டுக் கொள்ளுமாறு அன்னாரை வலியுறுத்துங்கள். பரிசுத்த இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் அஞ்சுங்கள். ‘நிச்சயமாக மனிதர்கள் வெறுப்புக்குறியவற்றைக் கண்ணுற்றும் அதனை அவர்கள் வெறுத்துத் தடுக்க வில்லையானால், அல்லாஹ் அவனது தண்டனையைக் கொண்டு அவர்களை அழித்து விடுவான்’ என நபி (ஸல்) நவின்றார்கள்.
அல்லாஹ் அவனது சங்கை வாய்ந்த வேத நூலிலே “இஸ்ராயிலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் (நபி) தாவூது (அலை), (நபி) ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டேயிருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர். (அன்றி) அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் நிச்சயமாக மிகத் தீயவை” (5:78-79) என்று கூறியுள்ளான்.
முஸ்னத்திலும் மற்றும் வேறு கிரந்தங்களிலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வாயிலாக கூறப்பட்டுள்ளதாவது: நபி (ஸல்) இந்த ஆயத்தை ஓதிக் காட்டி விட்டு சொன்னார்கள்: “எனது ஆன்மா யார் வசமிருக்கிறதோ, அவன் மீது ஆணையாக, நன்மையான காரியங்களை நீங்கள் மற்றவர்களுக்கு ஏவ வேண்டும், தீயனவற்றைத் தடுக்க வேண்டும். குறைமதியாளர் கரங்களைப் பிடித்து நேர்வழியின் பால் அவர்களைத் திருப்பி விட வேண்டும். சத்திய வழியைச் சிறப்பாக கடைப்பிடித் தொழுக வேண்டும். இல்லையேல் உங்களில் சிலரின் உள்ளங்களைக் கொண்டு சிலருக்கு அடி கொடுக்க வேண்டிய நிலை வரும். பின்னர் (இஸ்ராயிலின் சந்ததிகளான) அவர்களைச் சபித்தது போன்று அல்லாஹ் உங்களையும் சபிப்பான்”. மற்றொரு ஹதீஸில், “உங்களில் எவராவது வெறுப்பூட்டும் செயலைக் கண்ணுற்றால், தனது கரத்தினால் அதனைத் தடுத்து விடட்டும். அங்ஙனம் செய்ய இயலாது போனால் நாவினால் தடுக்கட்டும். இல்லாவிட்டால் உள்ளத்தால் அதனை வெறுத்து விட வேண்டும். இதுவே மிகப் பலவீனமான ஈமான்” என்று நபி (ஸல்) விளக்கிக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் ஸூப்ஹானஹூவதஆலா சங்கை வாய்ந்த அவனது வேத நூலில் பெண்கள் திரையிட்டுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லங்களில் தரித்திருக்க வேண்டுமென்றும், வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், விரும்பத்தகாதன நிகழாது காத்துக் கொள்ளவும், பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் காரணங்களைத் தவிர்க்கவும், ஆடவரின் சொல்லுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்றும் ஆக்ஞாபித்துள்ளான். அல்லாஹ் கூறுவதாவது:- நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்றச் சாதாரண பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசுஞ் சமயத்தில்) நலினமாகப் பேசாதீர்கள். மோக நோய் பீடித்த இதயமுள்ளவன் தவறான விருப்பம் கொள்ளக் கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதிலும்) நேர்மையாகப் பேசி விடுங்கள்”. (33:32)
“(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் இல்லங்களில் தரித்திருங்கள். மௌட்டீகக் கால மாதர் (தங்களை அலங்கரித்துக் கொண்டு) வெளியில் நடமாடியது போல் நீங்களும் வெளியில் நடமாடாதீர்கள். தொழுகையை (க்கிரமமாக செவ்வனே) நிறைவேற்றுங்கள். ஏழைவரியை ஈயுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் வழிபட்டொழுகுங்கள்.” (33:33)
பரிசுத்த இறைவன் இவ்வேத வாக்கியங்கள் மூலம் விசுவாசிகளின் அன்னையர்களான, சங்கைக்குறிய நபியின் மனைவியருக்கு விலக்கல் கட்டளை பிறப்பித்துள்ளான். அவர்களோ மாதர் குலத்தில் மகா சிரேட்டமானவர்கள். ஆண்களின் பசப்பு வார்த்தைகளுக்குப் பணிந்து விடாத பரிசுத்த பத்தினிகள். மோக நோய் பிடித்த இதயத்தவர் இச்சை கொள்ளா வண்ணம் நேர்மையாகவும், தீர்க்கமாகவும் உரையாடுபவர்கள். அவர்களையே, வீடே இராச்சியமெனப் பற்றி வாழுமாறு கட்டளை பிறப்பித்துள்ளான். மௌட்டீகக் கால நடமாட்டத்தைத் தடை செய்துள்ளான். அதாவது:- முகம், கழுத்து, மார்பு, முன்கை,கெண்டைக்கால் ஆதியாம் கவர்ச்சியான உருப்புகளின் அழகையும், எழிலையும் வெளிப்படுத்துவதால் சச்சரவுகளும், மகாமோசமான பிரச்சனைகளும், விபச்சார உணர்ச்சியைத் தூண்டும் வண்ணம் ஆடவர் அகங்களை ஆகர்ஷித்தலும் விளையுமென்பதினாலேயே இங்ஙனம் தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் ஸூப்ஹானஹூவதஆலா விசுவாசிகளின் அன்னையருக்கு – அவர்களுமோ சீர்திருந்தியவர்களாக, சுத்த விசுவாசிகளாக, பரிசுத்த கற்புக்கரசிகளாக இருக்கும் போதே, இத்தகைய வெறுக்கத்தக்க காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுவதனால், மற்றச் சாதாரண பெண்மணிகள் தவிர்த்துக் கொள்வதும் வெறுப்பதும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் காரணங்களுக்கு அஞ்சுவதும் அவசியத்திலும் அவசியம் என்பதைக் கூறவும் வேண்டுமா?
மானஈனப் பிரச்சனைகளிலிருந்து எங்களையும் உங்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த வேதவாக்கிலே கூறப்படும், “தொழுகையை நிலைநாட்டுங்கள், ஏழைவரியை ஈயுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்” என்ற சட்டம் நபியின் மனைவியருக்கு மட்டுமன்றி மற்றும் ஏனைய பெண்டியருக்கும் பொதுவான விதி என்பது அறியப்படுகிறது.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:- “(நபியின் மனைவிகளாகிய) அவர்களிடம் ஏதாவது பொருளைக் கேட்க விரும்பினால் திரைக்குப் பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள், இங்ஙனம் செய்வது அவர்கள் உள்ளங்களையும், உங்கள் உள்ளங்களையும் தூய்மையாக்கும்.” இச்சங்கைக்குறிய வேதவாக்கானது, ஆண்களை விட்டு பெண்கள் மறைந்து கொள்வதும், திரையிட்டுக் கொள்வதும் அவசியம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளது. அன்றியும் இவ்வாயத்தில் பெண்கள் பர்தா அணிவது ஆண் பெண் இருபாலாரதும் இதயங்களைத் தூய்மைப்படுத்தும் என்றும், விரும்பத்தகாத தீயக்காரியங்களையும், அவற்றின் காரணங்களையும் அகற்றி விடுமென்றும் இறைவன் விளக்கிக் காட்டியுள்ளான். அன்றியும் வதன எழிலை வெளிக்காட்டுவதும் திரைமறைவின்றி இருத்தலும், அருவருப்பானதும் அசிங்கமானதும் என்றும், நிச்சயமாகத் திரைமறைவு சாந்தியும், தூய்மையுந்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளான்.
முஸ்லிம் பெருங்குடி மக்களே! அல்லாஹ் போதிக்கும் ஒழுக்க சீலங்களை ஒழுங்காகக் கடைபிடித்தொழுகி வாருங்கள். அல்லாஹ்வின் ஆக்ஞைபடி ஒழுகி உதாரணப் புருஷர்களாக விளங்குங்கள்; சாந்திக்கும், விமோசனத்திற்கும், கற்புடமைக்கும் காரணமாக விளங்கும் (பர்தா) திறையிடுதலை ஒழுங்காகக் கடைபிடிக்குமாறு உங்கள் பெண்மணிகளை வலியுறுத்துங்கள்.
சிறப்பும் மேன்மையும் தாங்கிய அல்லாஹ் கூறியுள்ளான்:- “நபியே! உம்முடைய மனைவிகளுக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை(த் தங்கள் முகங்களிலிருந்து) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது மிக சுலபமா(ன வழியா)கும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபை செய்வோனுமாக இருக்கின்றான்.” (33:59). முந்தானை (ஜில்பாப்) என்பது, ஒரு பெண் தனது அழகையும், அலங்காரத்தையும் மறைத்துக் கொள்வதற்காகத் தலைமீது போட்டுக் கொள்ளும் துணி. விசுவாசிகளின் பெண்கள் அனைவரும், அன்னார் கற்பை காத்துக் கொள்ளும் வண்ணம்கேசம், வதனம், மற்றும் கவர்ச்சியான பாகங்களின் எழிலை மறப்பான் வேண்டி அவர்கள் முந்தானையை முகத்தில் தொங்கவிட்டுக் கொள்ளும் படி அல்லாஹ் ஏவியுள்ளான். இவ்வாறு அவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளின், அவர்கள் பரிசுத்தமானவர்கள் என் அறியப்படுவார்கள். அம்மாதரின் தூய்மையும் பாதுகாக்கப்படும்.இதனை அனுசரிக்காவிட்டால், அவர்கள் சொல்லொணாத் துன்பத்துக்காளாவார்.
ஆசிரியர்.
அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ்
உப வேந்தர்,
அல்ஜாமியத்துல் இஸ்லாமியா,
அல்-மதீனத்துல் முனவ்வறா.
இன்னும் வரும்.