சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும்பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்று கொண்டோம்)” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்) வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் இறுதி நாளையையும் (நம்பாது) மறுத்தனர்.
(நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அனேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை-அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள்.
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு- அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களேஅவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) மீது தடுத்து (ஹராம்-அனுமதியில்லை) விட்டான்” என்றும் கூறுவார்கள்.
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.