பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

19:65. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”

13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

39:67. “அல்லாஹ்வின் மேலான தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் மறுமை நாளில் பூமி முழுவதும் அவனுடைய ஒரு கைப்பிடியிலும், வானங்கள் சுருட்டப்பட்டு அவனுடைய வலக்கரத்திலும் இருக்கும். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிக்க மேலானவன். மிகப் பரிசுத்தமானவன்”.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.