13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாக கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்கு சமமே).
13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள் – வான தூதர்கள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனை பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையை தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும், அல்லாஹ் ஒரு சமுதாயத்தவருக்குத் தீவினையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
13:12. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குறிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன் தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடைவனாக இருக்கின்றான்.
13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்:) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டிருப்பவனைப்போல் இருக்கிறது. (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் (நிராகரிப்பவரின்) பிராத்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.