அத்தியாயம்-11.முஹம்மத் (ஸல்) இறுதி இறைத்தூதர்

முஸ்லிம்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என நம்புகின்றார்கள். இதைப்பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அது குறித்து சில விளக்கங்களைத் தந்தாக வேண்டும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என நம்புவது, இறைவன் தனது கருணக் கதவுகளை அடைந்து விட்டான் என்றோ, தனது கருணையை குறைத்துக் கொண்டான் என்றோ பொருளாகாது. அதுபோலவே அது மார்க்கத்தில் அறிஞர்களும், சிந்தனையாளர்களும் தோன்றுவதைக் கட்டுப்படுத்துவதுமில்லை. அல்லது ஆன்மீகத் தலைவர்கள் தோன்றுவதைத் தடை செய்திடுவதுமில்லை. அல்லது இறையுணர்வும், இறையச்சமும் நிறைந்த சான்றோர்கள் உருவாகிடுவதை மட்டுப்படுத்துவதுமில்லை. பெருமானார் (ஸல்) அவர்களை இறுதி தூதர் என்றாக்கியதின் மூலம் அரபு மக்களின் மீது மட்டும் தனது கருணையைப் பொழிந்து ஏனையவர்களின் மீது கருணை காட்டுவதை இறைவன் நிறுத்திக்கொண்டான் என்றோ பொருளாகாது. இறைவன் எந்த இனத்தின் மீதும், எந்த நிறத்தார் மீதும் தனியான அன்பும் ஏனையவர்கள் மீதுபாரபட்சமும் பாராட்டுபவனல்ல. அதேபோல் இறைவன் ஒரு தலைமுறையினரிடம் தனியான அன்பும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடம் சிறப்பான கருணையையும் காட்டிவிட்டு ஏனையவரைப் புறக்கணிப்பவனுமல்ல.

இறைவனின் கருணை எல்லா மக்களுக்கும் எல்லா நேரத்திலேயும் கிடைக்கவே செய்யும். அவனது கருணை அவன் நாடியவர்களுக்கு நாடிய வண்ணத்தில் கிடைக்கும். இதில் அவன் பாரபட்சங்களைப் பாராட்டாத பெருங்குணம் கொண்டவன்.

இறைவன் மனிதனிடத்தில் மூன்று விதங்களில் பேசுகின்றான்.

1. ஆலோசனைகள் அல்லது சிந்தனைகள் இவற்றை இறையச்சமிக்கோர் மனதில் (அல்லது இதயத்தில்) உதிக்கச் செய்வதின் மூலம் இறைவன் மனிதனிடத்தில் பேசலாம்.

2. இறைச்செய்தியைப் பெற்றிடும் தகுதி படைத்தவர் தன் வயமிழந்த நிலையில் இருக்கும்போது அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது திரைக்கப்பாலிருந்து (தோற்றமாகவோ காட்சியாகவோ) பேசலாம்.

3. ஜிப்ரயீல் (அலை) அவர்களான வானவர் தலைவர் மூலம் தெளிவான இறைவசனங்களை இறக்கி மனிதருள் தூதராக தேர்ந்தெடுப்பவருக்கு அதை வெளிப்படுத்தலாம். (அல்குர்ஆன்: 42:51)

கடைசியாக குறிப்பிட்டுள்ள இந்த முறைதான் இறைவன் மனிதனோடு பேசும் முறைகளுள் மிகவும் உயர்ந்தது. சிறந்தது. இறைவன் தனது தூதர்களிடம் மட்டும்தான் இந்த முறையைக் கையாளுவான். அப்படி இந்த முறை மூலம் அவன் இறுதியாகப் பேசிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள். இதில் முடிவுற்றது என்பதன் அத்தாட்சியாகப் போடப்பட்ட முத்திரையும் அவர்களே ஆவார்கள்.

எனினும் இது முதல் இரண்டு முறைகளின் மூலம் இறைவன் மனிதனுடன் பேசிடும் சாத்தியங்களை இல்லாமற் செய்துவிடவில்லை. இறைவன் தான் விரும்புபவர்களிடம் இந்த முதல் இரண்டு முறைகளின் மூலம் பேசிடும் ஆற்றலும் அதிகாரமும் நிறைந்தவன்.

முஹம்மத் (ஸல்) அவர்களை நபிமார்களின் முத்திரையென அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் மூலம் இறைவன் மனிதனோடுடைய தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டான் அல்லது மனித நலனில் அக்கறை இழந்து விட்டான் என்று பொருளாகாது.

மாறாக, இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களை நபித்துவத்தின் முடிவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் மூலம், திருக்குர்ஆனை இறை வெளிப்பாடுகளில் நிறைவானது என்றாக்கி விட்டதன் மூலம் மனிதனுக்கும் தனக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிரந்தரக் கருவியை நிலைநாட்டி விட்டான். இதன் மூலம் மனித இனம் உள்ளவரை ஒளிபரப்பி வழிகாட்டும் ஒரு நிரந்தரத் தொடர்பை ஏற்படுத்தி விட்டான்.

இந்தப் பொதுவான அடிப்படைகளோடு பெருமானார் (ஸல்) அவர்கள்தான் இறுதி இறைத்தூதர் என்பதை நிலைநாட்டிட பல சான்றுகளில் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

1. முஹம்மத் (ஸல்) அவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக வந்தார்கள். அந்த இறைவனுக்கே வானமும், பூமியும் சொந்தமென்று ஈடு இணையற்ற வார்த்தைகளில் தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளது திருக்குர்ஆன்! (7:158). முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் அருட்கொடையாகவே மனிதர்களுக்கும் அதல்லாதவைகளுக்கும் அனுப்பப்பட்டார்கள் என்றும் திருமறை கூறுகின்றது. (21:107). அவரோ அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கின்றார். (33:40).

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையாகும். அது சொல்வதெல்லாம் இறைவனால் சொல்லப்பட்ட உண்மையாகும். அதனை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று வாழ்வில் செயல்படுத்தி வாழ்கின்றார்கள். முஸ்லிம்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதன் பக்கமே திரும்பிட வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இறைத்தூது ஒரு தேசத்திற்கு மட்டும் சொந்தமானதோ, ஒரு இனத்திற்கு மட்டும் உரித்தானதோ அன்று. அடிமைத்தனம், அநீதி ஆகியவைகளுக்கு எதிராக குரல்கொடுக்க வந்த தற்காலிக ஏற்பாடல்ல. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த புரட்சித்தூது உலக மக்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக சொந்தமானதாகும். அது ஒரு குறிப்பிட்ட குலத்தாருக்கோ, இனத்தாருக்கோ சொந்தமானல்ல. இந்த உலகம் உள்ளவரை அது அநீதிகளையும், அக்கிரமங்களையும் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும். வரலாற்றில் அது இப்படியே இருந்து வந்திருக்கின்றது. இருந்து கொண்டிருக்கின்றது. என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அருட்செய்தி அதற்கு முன்பு வந்த இறைச்செய்தியின் தொடர்ச்சியேயாகும். அது அந்த இறைச்செய்திகளின் நற்போதனைகளை தன்னகத்தே கொண்டது. அது குலம், நிறம், இனம், நாடு போன்ற எல்லைகளையெல்லாம் கடந்தது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் அந்தத் தூதின் புரட்சித்தன்மையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வளைத்து நிறுத்திவிட முடியாது. அது மனிதர்கள் அனைவரையும் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி தன்பால் அழைத்துப் பேசுவது. மனிதன் எதைத் தேடித் தவிக்கின்றானோ அது அத்தூதில் நிறைவாகவும், விரிவாகவும் இருக்கக் காணலாம். அந்தத்தூது இறுதியானது. அறுதியானது.

ஆகவே ஒரு முஸ்லிம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என உறுதியாக நம்புகிறார். ஏனெனில் திருக்குர்ஆன் அதற்கு முழுமையான அத்தாட்சியைக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே பெருமானார் (ஸல்) அவர்களின் தூது உண்மையான உலகத் தூதுக்கான தன்மைகளையும், முழுமையான நம்பிக்கைக்கான தகுதிகளையும் நிறைவாகப் பெற்றிருக்கின்றது.

2. முஹம்மத் (ஸல்) அவர்களேதான், நானே இறுதி இறைத்தூதர் என சொல்லியிருக்கின்றார்கள். முஸ்லிம்களும் சரி, ஏனையவர்களும் சரி முஹம்மத் ஸல்) அவர்களின் வார்த்தைகளைச் சந்தேகித்திட முடியாது. அவை தீர்க்கமானவை, முடிவானவை, உண்மையானவை. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பெருமானார் (ஸல்) அவர்கள் நேர்மைக்கும், உண்மைக்கும் இருப்பிடமாக இருந்தார்கள். அவர்களது நேர்மையையும், உண்மையையும் முஸ்லிம்கள் மட்டுமல்ல எதிரிகளும் போற்றினார்கள். அவர்களது உண்மைத் தன்மையை எவரும் எள்ளளவும் சந்தேகித்ததே இல்லை.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குணநலன்கள், ஆன்மீக ஈடுபாடுகள் இந்த உலகில் நிகழ்த்திக் காட்டிய மிகப்பெரும் புரட்சி. இவைகளுக்கு மனித வரலாற்றில் எங்கும் ஒப்புவமை இருந்ததேயில்லை. இவைகளுக்கு இன்றுவரை இணையாக எதுவுமில்லை. இனிமேல் அத்தகையதொரு புரட்சி இடம்பெறுமா என்பதும் சந்தேகமே!

பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னை இறுதி இறைத்தூதர் எனக் குறிப்பிட்டது தனக்குக் கிடைத்த கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்கு அல்ல. அல்லது வேறு சில இலாபங்களை மனதிற் கொண்டதல்ல. அவ்வாறு அவர்கள் சொன்னதற்கான காரணம், அதுதான் உண்மையென்பதே! அடுக்கடுகாய் அவர்கள் அடைந்த வெற்றி அணுவளவேனும் அவர்களிடம் செருக்கை ஏற்படுத்திடவோ, அவர்களை பலவீனப்படுத்திடவோ, அவர்களது உயர்ந்த பண்புகளை சற்றேனும் சலனப்படுத்திடவோ இல்லை. செருக்கு, சுயநலம், வீண்பெருமை, தற்புகழ்ச்சி இவைகள் இறைவனின் இறுதித் தூதரிடம் முற்றிலும் இல்லாதவைகளாகும். அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு சொல்லும் ஒரு நன்முத்து, அறிவுச் சுரங்கம், உண்மையின் உண்மையான வெளிப்பாடு.

3. தான் மேற்கொண்ட புனிதப் பணியை முழுமையாக தன்னுடைய வாழ்நாளிலே வெற்றிகரமாக முடித்த ஒரே இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களேயாவார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறக்கும் முன்னர் இறைவனின் மார்க்கமான இஸ்லாம் பூரணமாக்கப்பட்டு விட்டது. ஈமான் கொண்டவர்களின் மீது இறைவனின் கருணை நிறைவாக்கப்பட்டு விட்டது. இறைவன் வெளிப்படுத்திய உண்மைகள் முழுமையாக்கப்பட்டிருந்தது. பேணப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன்: 5:3, 10:9) பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்தபோது இஸ்லாம் என்ற இறைமார்க்கம் பூரணமாக்கப்பட்டிருந்தது. நம்பிக்கைக் கொண்டவர்களைக் கொண்ட ஒரு அரசு நிறுவப்பட்டிருந்தது. அந்த அரசு வலுவோடும் வல்லமையோடும் விளங்கியது.

பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே திருக்குர்ஆன் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

இவைகளெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இறைவனின் மார்க்கம் கொள்கையளவிலும், செயலளவிலும் நிறைவு செய்யப்பட்டு விட்டது என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இறைவனின் ஆட்சி இங்கேயே இந்த பூமியிலேயே நிலைநாட்டவும் பட்டுவிட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி, தன்னுடைய பணிகளைச் செவ்வனே நிறைவேற்றி அதில் அவர்கள் காட்டிய அழகிய செயற்பாட்டு முன்மாதிரி, இறை ஆட்சியை இந்த நீள் நிலத்திலே அவர்கள் நிலைநிறுத்திக் காட்டிய அற்புதமான அழகிய முன்மாதிரி இவைகளெல்லாம் இறையாட்சியை இவ்வுலகில் நிலைநாட்டுவதென்பது வெறும் கற்பனை கதையல்ல, செயல்படுத்திக் காட்டத்தக்கதே என்பதை பறையறிவித்துக் கூறுகின்றது. நம்பிக்கைக் கொண்டவர்கள் இதனைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் இதில் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆகவே இறையாட்சி, இறைச்சட்டம் என்பதெல்லாம் மறுமையிலே நடக்கக்கூடிய செயல்களே!

இந்தப் பின்னணிகளெல்லாம் வைத்துப் பார்த்திடும்போது இறுதி நபித்துவத்தின் இறுதியாக ஒரு மனிதர் இருக்க முடியுமென்றால் அது முஹம்மத் (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ஏதேனும் ஒரு இறைவேதம் இறுதியானதாக இருந்திட வேண்டும் என்றால் அது திருமறையாம் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

பெருமானார் (ஸல்) அவர்கள் பூரணமாகத் தன் புனிதப்பணியை செய்து முடித்தார்கள் என்பதும், திருக்குர்ஆன் நிறைவாக்கப்பட்டு விட்டது என்ற உண்மையையும், திருக்குர்ஆன் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே பதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதும், முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதி இறைத்தூதர் என்பதை உறுதிப்படுத்திடும் உண்மைகளாகும். உண்மைகளைப் புரிந்து கொள்வோர் எவரிடத்தும் இதில் எள்ளளவும் ஐயமிருக்க முடியாது.

4. முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் இறைவனின் இறுதித்தூதர் என்று இறைவன் தந்துவிட்ட இறுதித் தீர்ப்பு, திருக்குர்ஆனின் உண்மையான, தூய்மையான ஆதாரங்களின் அடிப்படைகளில் அமைந்ததாகும். இன்னும், பெருமானார் (ஸல்) அவர்கள் இறைப்பணியை பூரணமாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு நிறைவேற்றி வெற்றி கண்டதும், அவர்களே இறுதி இறைத்தூதர் என்பதை உறுதிச் செய்வதாக அமைகின்றது

இஸ்லாம் என்ற இறைமார்க்கம் இந்த உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் உற்ற வாழ்வில் வழிகாட்டவல்லது என்பதும், திருக்குர்ஆனின் போதனைகள் எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது என்ற அற்புதமான உண்மையும், இன்னொரு இறைவேதமோ, இறைத்தூதரோ தேவையில்லை என்பதை நிலைநாட்டுவதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதி இறைத்தூதர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.

இனம், நிலம், நிறம், குலம், காலம், செல்வம், பெருமை, புகழ்ச்சி இவைகளையெல்லாம் கடந்து, இவைகள் எப்பொழுதாவது மனிதனை பிளக்கும் சக்திகளாக செயல்பட்டால் அவற்றை அகற்றி நிலைத்து நிற்கும் இறைமார்க்கமாகும் இஸ்லாம். இந்த இறை மார்க்கமே மனிதர்கள் அனைவருக்கும் சமத்துவத்தையும், சுதந்திரத்தையும், கண்ணியத்தையும், அமைதியையும், நிம்மதியையும், வழிகாட்டுதலையும் பெற்றுத்தருவது.

பெருமானார் (ஸல்) அவர்களின் மூலம் இறைவன் பரிபூரணமாக்கி வைத்த இந்த இறைமார்க்கம் இதுவரை வந்த இறை மார்க்கங்களின் தூய்மையான இரத்தினச் சுருக்கமாகும். இதுவே மனித இனத்தின் ஆரம்பம் முதலே இறைவன் மனிதனுக்குக் காட்டிவரும் கருணையின் விளைவால் எழுந்த இறுதி வெளிப்பாடாகும்.

திருக்குர்ஆனோடும், முஹம்மத் (ஸல்) அவர்களோடும் மதத்தின் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது என்று சொல்வது மனிதனுக்கு இறை வழிகாட்டுதலின் தேவை இனிமேல் இல்லை என்ற பொருள் தராது. இது ஒரு புது அணுகுமுறையின் ஆரம்பமேயாகும். ஒரு புது யுகத்தின் ஆரம்பமேயாகும். இந்தப் புது உலகத்திற்குத் தேவைப்படும் புது அணுகுமுறைக்கு தேவையான வழிகாட்டுதல்கள் அனைத்தும் திருக்குர்ஆன் மூலம் வழங்கப்பட்டு விட்டன. அத்துடன் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய செயல்முறை முன்மாதிரியும் இருந்துகொண்டே இருக்கின்றது. இப்போது புதிதாக இன்னொரு வேதமும், ஒரு இறைத்தூதரும் வந்தால் அந்த இறைவேதம் திருமறையோடு இன்னும் ஏதேனும் அதிக உண்மைகளைச் சேர்க்கவோ, அந்த இறைத்தூதர் இறைத் தூதுவத்தோடு எதையேனும் அதிகமாக இணைக்கவோ ஏதேனும் விட்டு வைக்கப்பட்டுள்ளதா? அப்படி ஏதேனும் புதிய வேதம் வருவது இறைவனின் வேதத்தை காத்திடவே என்றோ அல்லது இறை வெளிப்பாட்டின் உண்மையைப் பேணிடவே என்றோ எவரேனும் கூறிடுவாரேயானால் இந்தப் பணிகளெல்லாம் திருமறையின் மூலம் நிறைவாக்கப்பட்டு விட்டன என்பதே தீர்க்கமான பதிலாகும். அல்லது இன்னொரு இறைத்தூதர் வருவது இறைவேதத்தை மெய்ப்பித்து இறை ஆட்சியை நிலைநிறுத்தவே என எவரேனும் கூறிட்டால், இந்தப் பெரும்பணி முஹம்மத் (ஸல்) அவர்கள் வழியாக நிறைவாக நிறைவேறி விட்டது என்ற உண்மையைச் சொல்வோம்.

இன்னொரு வேதமும், இன்னொரு இறைத்தூதரும் வருவது மனிதனுக்கு நேர்வழிக்காட்டி வாழச் செய்வதற்கே என்றால் திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களும் இதனை நிலைநாட்டி விட்டார்கள் என்பதே பதில்.

இனிமேல் மனிதனுக்கு ஒரு புது வேதமோ, ஒரு புது இறைத்தூதரோ தேவையில்லை. மனிதனுக்கு இப்போது தேவைகளெல்லாம் அவன் தனது ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழ வேண்டும், திருமறை வழி வாழ வேண்டும் என்பதுதான். அவன் தன்னைச்சுற்றிப் போட்டிருக்கும் தடைகளை உடைத்தெரிந்து விட்டு வெளியேறி ஏற்கனவே இருக்கும் இறைவேதத்தைப் பின்பற்றிட வேண்டும். முழுமையாகவும், தூய்மையாகவும் காக்கப்பட்டு வைத்திருக்கும் இஸ்லாம் எனும் கருவூலத்திலிருந்து பலன்பெற வேண்டும். இதை விடுத்து அவன் வேறு விவாதங்களில் காலத்தை விரையம் செய்ய வேண்டாம்.

5. முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் இறுதி இறைத்தூதர் என இறைவன் தீர்ப்பளித்து விட்டான். ஆகவே அவர்கள் இறுதி இறைத்தூதராவார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்வந்த இறைத்தூதர்களில் எவர்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் அளவிற்கு அதிகமாக சாதித்ததில்லை. அவர்களுக்குப்பின் இறைவனின் தூதர் என்று தங்களை அறிமுகப்படுத்திட விழைந்தவர்கள் எவரும் பெருமானார் (ஸல்) அவர்களின் பெரும்பணிகளில் சிறிய அளவுக்கூட நிறைவு செய்திடவில்லை. எனினும் இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களே இறுதித்தூதர் எனக்கூறிய பின்னால் தொடர்ந்து நிகழவிருந்த வரலாற்றுச் சம்பவங்களை எதிர்பார்த்துத் தரப்பட்ட தீர்ப்பேயாகும்.

மனிதன் ஒரு புது யுகத்திற்குள் புகுந்து, ஒரு புது அறிவுப்பாதையில் பயணம் செய்து, ஒரு புது ஆன்மீகப் பேரொளியைப் பெற்று, பெருமானார் (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களுக்கும் தந்திருக்கின்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்ந்து வெற்றிபெற வேண்டும் என இறைவன் மனிதனை அழைக்கின்றான். இந்த அழைப்பினை மனிதன் ஏற்றுச் செயல்படுவான் என இறைவன் எதிர்பார்த்தான்.

இந்த உலகிலிருக்கும் பல்வேறு பண்பாடுகளும், சமுதாயங்களும் ஒன்றோடொன்று மிகவும் அருகாமையில் வரும் என இறைவன் எதிர்பார்த்தான். அத்தோடு பல்வேறு இடங்களுக்கும் இடையேயுள்ள தூரம் (வேகத்தால்) குறைந்து போகும், ஆகவே உலகின் பல்வேறு பாகங்களுக்கும் இடையே நிலையான தொடர்புகள் நிலைநாட்டப்பட்டுவிடும். இதன் மூலம் மனித இனம் முற்றாக ஒரே இறை வேதத்தைப் பின்பற்றி வாழ்ந்திட முடியும். இறைவனும் அவனுக்கேயுரிய இடத்தைப் பெற்றிடுவான். மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடுவான் என்பதையெல்லாம் இறைவன் எதிர்பார்த்தான். அறிவுத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் மனிதனை இறைவனின் பக்கம் கொண்டு சென்றிடும் என்பதற்கான புனிதமான அத்தாட்சியே இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதித்தூத்ர் என அறிவித்தது. இது உண்மையுமாகும். மனிதர்கள் தன்னுடைய அறிவின் கூர்மையை, திருக்குர்ஆன் தரும் ஆன்மீக ஒழுக்க போதனைகளுடன் இணைத்து செயல்படுத்திடுவார்களேயானால் அவர்கள் இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்திடவோ, அவனுடைய சட்டங்களை பின்பற்றி நடந்திடவோ தவற மாட்டார்கள்.

மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலமே பரிபக்குவத்தை அடைந்திட முடியும் என்பதை எடுத்துக்காட்டவும், விஞ்ஞானம் தனது ஆராய்ச்சியை விசாலப்படுத்தி இறைவன் உலகத்தில் நடத்தியிருக்கும் அதிசயங்களைக் கண்டுகொள்ள, விஞ்ஞானத்திற்கு ஒரு வாய்ப்பினை அளித்திடவும், சிந்தனையில் மூழ்கி உண்மைகளை கண்டுகொள்ளும் ஒரு வாய்ப்பை மனதிற்கு தந்திடவுமே நபித்துவம் முஹம்மத் (ஸல்) அவர்களோடு ஒரு முடிவுக்கு வந்தது. இஸ்லாத்தின் தனித்தன்மைகளுள் ஒன்று அது எல்லாவிதமான சூழ்நிலைகளோடும் பொருந்திப் போவதேயாகும். திருக்குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும் வந்ததேயாகும். அது எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டே இருப்பதாகும். அதனுடைய வழிகாட்டுதல்கள் தீர்க்கமானவை. தெளிவானவை. முடிவானவை. ஐயங்களுக்கு அப்பாற்பட்டவை. முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைச்செய்தி மனிதர்கள் அனைவரையும் தன் பக்கம் அழைப்பது. அத்துடன் எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்புடையது. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட குலத்தின் தலைவருமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தவரை மட்டும் அடிமைதனத்திலிருந்து விடுவிக்க வந்தவருமல்ல. அவர்கள் இறைவழியை நாடி அதன் வழி வாழ விரும்புபவர்கள் அனைவருக்கும் எப்போதும் ஒரு அழகிய முன்மாதிரியாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடத்தில் ஒவ்வோரு மனிதனும் தான் கற்றுக்கொள்ள வேண்டியதொன்று இருக்கின்றது என்பதைக் கண்டான். அவர்களிடத்தில் நன்மைகளின் இணையற்ற எடுத்துக்காட்டும், இறையச்சத்தின் ஈடில்லா முன்மாதிரியும் இருப்பதை ஒவ்வொருவரும் கண்டு கொள்ளலாம். பின்பற்றத்தக்கதொரு முன்மாதிரி அவர்களிடம் இருப்பதை மாச்சரியங்களுக்கு அப்பால் நின்று பார்ப்பவர்கள் அனைவரும் கண்டுகொள்வர். ஒவ்வோரு தலைமுறையின் ஈடேற்றத்திற்கும் அவர்களே தான் இறை நம்பிக்கை. எல்லா பிரச்சனைகளும் இறுதியாக தீர்ப்புப்பெற அவர்களிடமே வந்தாக வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்

இனிதே முடிவுற்றது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.