அத்தியாயம்-4. உலகளாவிய வாழ்க்கை (INTERNATINAL LIFE)

இஸ்லாத்தில் சர்வதேசிய வாழ்க்கை என்பது இஸ்லாமிய அரசுக்கும் அல்லது இஸ்லாமிய நாட்டிற்கும் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள அரசுகளுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவின் முறையாகும். இஸ்லாமிய சமுதாய வாழ்வின் ஏனைய பாகங்களைப்போல் இந்த உறவும் இறைவனின் வழிகாட்டுதலில் உருவாவதேயாகும். இந்த வெளிநாட்டு உறவு பின்வரும் அடிப்படைகளின் கீழ் அமைவதாகும்.

1. மனிதர்கள் அனைவரும் பிறப்பு, அந்தஸ்து, வாழ்வின் இலக்கு இவைகளால் ஒன்றானவர்களே! என்ற மனித இனத்தின் ஒற்றுமையில் அசைக்கமுடியாத நம்பிக்கை. (திருக்குர்ஆன்: 4:1, 7:189, 49:13)

2. அடுத்தவர்களின் நல்வாழ்வு, கண்ணியம், உயிர், உடைமை, உரிமைகள் ஆகியவற்றை மதித்து நடத்தல். ஆனால் அடுத்தவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளில் தலியிடாதிருக்கும் வரையில்தான் அடுத்தவர்களின் உரிமை மதிக்கப்படும். ஏனெனில் அடுத்தவர்களின் உரிமைகளை அவமதிப்பது அல்லது பறிப்பது, வரம்புகளை மீறுவது இன்னும் இதுபோன்ற தவறுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டவையாகும். (சான்றாக 2:190-193, 42:42 ஆகிய திருமறை வசனங்களைக் காணவும்.)

3. அமைதியையே சாதாரண உறவுகளை வழிநடத்தும் கொள்கையாகக் கொள்ளுதல். நம்பிக்கையின் பரிமாற்றம் மனித இனத்தின் நல்வாழ்வுக்காக அனைவரும் நேர்மையாக முயற்சி செய்தல். இதில் எல்லா நாட்டு மக்களுக்கும் சம அளவில் பொறுப்புண்டு. (சான்றாக திருமறையின் 8:61 வசனத்தைப் பார்க்கவும்.)

4. அடுத்தவர்கள் உரிமையை அத்துமீறுவதை அனுமதியாதிருத்தல். யாரேனும் இஸ்லாமிய நாட்டின் அல்லது சமுதாயத்தின் உரிமைகளை மீறினால் அல்லது அதன் அமைதியைக் குலைக்கும் வேளைகளில் இறங்கினால், அல்லது அதன் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவித்தால் அல்லது இஸ்லாமிய அரசு கொண்டிருக்கும் நேர்மையான கொள்கையை அதன் கையாலாகாத்தனம் என எண்ணி அதில் இலாபம் தேட முயன்றால், இஸ்லாமிய அரசு விரைந்து தன்னைக் காப்பாற்றிடும் முயற்சிகளில் இறங்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மட்டுமே இஸ்லாம் யுத்தத்தில் இறங்குவதை அனுமதிக்கின்றது. யுத்தத்தில் இறங்கினால் அதிலும் வரையறைகளும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளும் ஏராளமுண்டு. யுத்தங்கள் எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்கே மேற்கொள்ளப்படும். போர் பற்றிய இஸ்லாத்தின் நியதிகள் தனித்தன்மை வாய்ந்தவை, முழுமையானவை, வலுவானவை. சட்ட வல்லுனர்களும், ஒழுக்கவியல் நிபுணர்களும் ஆராய்ச்சி நடத்திட வேண்டிய அளவிற்கு அற்புதமானவை. அதாவது இதுபோன்ற சிறிய அளவில் அல்லாமல் பெரிய அளவில் விவாதித்திட வேண்டிய பொருளாகும். ஆனால் இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். இஸ்லாம் வேண்டுமென்றே ஆக்கிரமிப்பாகத் தொடுக்கப்படும் போர்களை ஒருபோதும் நியாயப்படுத்துவதில்லை. போர்களில் பயிர்களை நாசம் செய்வது, ஆவினங்களை அழித்தல், மனிதர்கள் வசிக்குமிடங்களைத் தகர்த்தல் போன்றவற்றை இலக்காகக் கொள்ளுவதில்லை. அதுபோலவே போரில் ஈடுபடாத பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் ஆகியோரைக் கொல்லுவதை அனுமதிப்பதுமில்லை. போர்க்கைதிகளை கடுமையாக நடத்துவதையோ, தோற்றுப்போனவர்களிடம் தன்னுடைய போதனைகளைத் திணிப்பதையோ இஸ்லாம் சகித்துக் கொள்வதுமில்லை. போர்கள் தற்காப்புக்காக மேற்கொள்ளப்படுபவைகளே ஆகும். ஆக்கிரமிப்பு, அநீதி, தீங்கிழைத்தல் இவைகள் இந்த உலகில் இருக்கும்வரை இஸ்லாத்தின் நடைமுறைச் சட்டங்களால் அனுமதிக்கப்பட்டவைகளே போர்கள். (சான்றாக திருமறையின் 2:190-195 216 218, 22:39-41 ஆகிய வசனங்களையும் ஜிகாத் என்ற தலைப்பின் கீழ் அடுத்துவரும் விவாதத்தையும் காணவும்)

5. வாக்களித்த கடமைகளை நிறைவேற்றிடுதல். செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்து நடத்தல்.

இஸ்லாமிய அரசு தான் ஏனைய அரசுகளோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்து நடந்திட வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஏனைய அரசுகள் ஒப்பந்தத்தை மதித்து நடந்திடும் வரைதான் இஸ்லாமிய அரசும் தனது பங்கை செவ்வனே செய்யும். ஏனைய அரசுகள் இதை செய்யத் தவறினால் ஒப்பந்தத்தின்படி நடந்திட வேண்டியது இஸ்லாமிய அரசின் மீது கடமையாகாது. (சான்றாக திருமறையின் 5:1, 8:56-58, 9:3-4 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

6. உள்நாட்டில் அமைதியைப் பாதுகாத்தல். மனித இனத்தின் ஒற்றுமைக்கும் உலகளாவிய சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தல்.

இஸ்லாமிய சமுதாயத்தின் உலகளாவிய வாழ்வின் மூலாதாரம் இவைதாம். இஸ்லாமிய அரசும், இஸ்லாமிய பெருங்குடி மக்களும் தங்களுக்காகவும் தங்கள் நாட்டு மக்களுக்காகவும் மட்டுமே வாழ்பவர்கள் அல்ல. அவர்களின் நோக்கம் விரிவானது. உலக அளவில் அவர்களுக்கென சிறப்பான சில பணிகள் உண்டு.

இஸ்லாத்தின் கட்டளைகளின்படி இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய சமுதாயமும் தங்களுடைய மக்களின் வாழ்வுக்கும் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தீவிரமாக உழைத்திட வேண்டும். அதே கட்டளைகளின்படி இஸ்லாமிய சமுதாயம் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்றவைகள் அனைத்தையும் செய்திட வேண்டும். இதனால் முஸ்லிம்கள் ஏனைய மக்களோடு விசாலமான நட்பினை வளர்த்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. உலக அரசியலில், உலக மக்களின் கல்வியில், தொழில் வளர்ச்சியில், பொருளாதார முன்னேற்றத்தில் முஸ்லிம்கள் அக்கறைச் செலுத்திட வேண்டியது அவசியமாகின்றது. உலக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறைக் கொள்வது என்ற இந்தக் கொள்கை முஹம்மத் (ஸல்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களைப் பின்பற்றி வந்த அத்தனை முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். நாம் இங்கே குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் உண்மையான, வலுவான இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவைகளே! அதாவது இவை திருக்குர்ஆன், முஹம்மத் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவைகளேயாகும். இதுதான் இஸ்லாம், இதைத்தான் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களை உண்மையாகப் பின்பற்றி நடந்தவர்களும் மிகச்சீரிய முறையில் செயல்படுத்திக் காட்டினார்கள். இங்கே குறிப்பிட்டிருப்பவை ஒரு வேதாந்தியின் இஸ்லாமுமல்ல, சில குறிப்பிட்ட ஆட்சியாளர்களின் இஸ்லாமுமல்ல. இந்த நூலை எழுதிய என்னுடைய கருத்தின்படி இதுவே இஸ்லாம். இறைவனால் வெளிப்படுத்தப்பட்டு இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களாலும் அவர்களை உண்மையாகப் பின்பற்றியவர்களாலும் செயல்படுத்தப்பட்டு மனித இனத்தின் உயர்வுக்கு இட்டுச் சென்ற இஸ்லாம் இதுவேயாகும்.

இங்கே இன்னொன்றையும் கவனித்திட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஏனைய வாழ்க்கை நெறிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனித்தன்மையானது. ஆன்மீகம், ஒழுக்கம், அறிவு, கலை, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகிய எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இதனை தெளிவுபடுத்த பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ளலாம்.

1. இஸ்லாமியக் கொள்கைகளின் பிறப்பிடம் தனியானது. அவை அண்டிப்பிழைக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் பிறந்தவையல்ல. அல்லது பழிவாங்கும் போக்கினைக்கொண்ட பொருளாதார நிபுணர்களின் படைப்புமல்ல. சுயநலம் மிகுந்த தொழிலதிபர்களின் சிந்தனையில் வளர்ந்தவையுமல்ல. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒழுக்க வல்லுனர்களின் படைப்புமல்ல அவை. அவை இறைவனால் அருளப்பட்டவை. இந்த உலகத்தையும் அதில் இருப்பனவற்றையும் படைத்து, பரிபாலித்து, போஷித்துவரும் இறைவனால் மனிதனின் நலனுக்காக அருளப்பட்டவை அவை. அவற்றின் இயல்பால் எல்லா மனிதர்களையும் பின்பற்றச் செய்பவைகள், நம்பிக்கைக் கொண்டவர்களால் உண்மையாக பின்பற்றப்பட்டு வருபவையுமாகும். அவை ஏமாற்றங்களை உண்டுபண்ணும் வாக்குறுதிகளைக் கொண்டவையல்ல. அவை பகுத்தறிவுக்கு பொருத்தமானவை. அறிவுகூர்மைப் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவை ஏற்புடையவையாகும். சிந்திக்கும் மனிதர்கள் அவற்றை எந்தத் தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வர்.

2. இஸ்லாமியக் கொள்கைகளின் நோக்கங்கள் வித்தியாசமானவை. உலகில் ஆட்சியைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்பது அவற்றின் நோக்கமல்ல. அல்லது தனது ஆதிக்கத்தின் எல்லையை விரிவடையச் செய்திட வேண்டும் என்பதும் அவற்றின் நோக்கமல்ல. மாறாக இறைவனின் விருப்பத்திற்கும் இறைவனின் சட்டங்களுக்கும் உலகத்தைப் பணிந்து நடந்திடச் செய்வதே அவற்றின் நோக்கமாகும்.

முஸ்லிம்கள் தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொள்வது இறைவனின் திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெறுவதேயாகும். இந்த இலக்கை அடைவதற்குத் தகுந்தாற்போல் இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவி நிற்கின்றது. இதில் அது மனிதனுள் தூய்மையான மனம், பரிசுத்தமான ஆன்மா, உயிருள்ளதொரு மனசாட்சி, ஆரோக்கியமான உடற்கட்டு, தூய்மையான உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்திட முனைகின்றது. இவற்றை ஒரு மனிதன் பெற்றுவிட்டால் அவன் இறைவனது சட்டங்களை வாழ்வில் ஏற்று வாழ்ந்திட கிஞ்சிற்றும் தயங்க மாட்டான். ஏனெனில் இறைவனது வழிகாட்டுதலே மிகவும் சிறந்ததாகும். ஆகவே இஸ்லாமியக் கொள்கைகளின் நோக்கம் தற்காலிகமானதுமல்ல, அது இவ்வுலகில் பெறும் சில வெற்றிகளை மனதிற் கொண்டதுமல்ல.

3. இஸ்லாமியக் கொள்கைகள் முழுமையானவையாகவும், நடைமுறைப்படுத்த தகுந்தவையாகவும், புதிய மாற்றங்களுக்கு ஏற்ப நல்ல தீர்வுகளைத் தருபவையாகவும் அமைந்திடத் தேவையான எல்லா மூலக்கூறுகளையும் பெற்றவை. இறைவன் வழங்கிய வழிகாட்டுதல்கள் மிகவும் அடிப்படையானவை. இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு மனிதன் தன் வாழ்வில் எழும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதுபோலவே எல்லாச் சூழ்நிலைகளிலேயும் எழும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அடிப்படைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது இஸ்லாம். அவற்றை அடியொற்றி பிரச்சினைகளைத் தீர்த்திட வேண்டியது மனித அறிவின் பாற்பட்டதே!

எந்தக் கோணத்திலிருந்து ஒருவர் இஸ்லாத்தை அணுகினாலும் அவர் அது நடைமுறைக்கு ஏற்றவகையில் அமைந்திருப்பதைக் காண்பார்.

இஸ்லாத்தின் போதனைகள் முழுமையானவை. ஏனெனில் அவை வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியவை.

இஸ்லாத்தின் போதனைகள் நடைமுறைக்கு ஏற்றவை. ஏனெனில் அவை ஒருகாலத்தில் முழுமையாகச் செயல்படுத்திக் காட்டப்பட்டவை. இன்னும், இன்றும் செயல்படுத்தப்பட்டு வருபவை. இஸ்லாத்தின் போதனைகள் நடுநிலையானவை. ஏனெனில் அவை முதலாளிகளின் பக்கமோ அல்லது தொழிலாளிகளின் பக்கமோ முற்றாக சாய்ந்து நிற்காமல் ஒரு நடுநிலையில் நிற்பவை.

அவை நடுநிலையானவை. ஏனெனில் அவை வெறும் உலகியலைப் பற்றியோ அல்லது வெறும் ஆன்மீகத்தைப் பற்றியோ பேசுவனவல்ல. அவை, இவை இரண்டிற்கும் உரிய மதிப்பளித்து, இவை இரண்டிற்கும் நிறைவான வழியைக் காட்டுகின்றன.

இஸ்லாத்தின் போதனைகள் நடுநிலையானவை. ஏனெனில் அவை ஒரேயடியாக இந்த உலகத்தைப் பற்றியும் பேசுவதில்லை. அதேபோல் ஒரேயடியாக மறு உலகத்தைப் போதிப்பதுமில்லை. அவை இந்த இரண்டு உலகின் சிறப்புக்களையும் நன்கறிந்து அவைகளுக்கு வேண்டிய உரிய முக்கியத்துவத்தைத் தருகின்றன.

எந்த விஷயத்திலும் இஸ்லாத்தின் போதனைகள் ஒரேயடியாக அந்தப்பக்கமோ, இந்தப்பக்கமோ சாய்ந்திடாமல் ஒருநடுநிலையைப் போற்றுகின்றன. நிதான நிலையைப் பேணி பாதுகாக்கின்றன.

இஸ்லாத்தின் போதனைகள் அத்தனை பிரச்சினைகளிலும் தெளிவான அடிப்படைகளைத் தந்து விடுவதனால் அவற்றை வைத்துக்கொண்டு எக்காலத்திற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவையா தீர்வுகளை எளிதில் கண்டிடலாம்.

இஸ்லாத்தின் போதனைகள் இறைவனுடையவை. அவை எப்போதும் மனிதனின் மனதுக்கும் மூளைக்கும் பயிற்சி தந்த வண்ணமே இருக்கும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.