அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.

இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை.

நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம்.

வாழ்வின் அனைத்து துறைகளிலும், அவற்றில் எழும் பிரச்சனைகளிலும், நிறைவானத் தீர்வினைத் தரும் ஒரு நிரந்தர வழிகாட்டியே இஸ்லாம். அது முஸ்லிம்களின் ஊனோடும் உயிரோடும் ஒட்டி உறவாடி இரண்டரக் கலந்து நிற்கும் அறிவியல் கொள்கை. இந்த அடிப்படையிலே தான் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றிடுகின்றார்கள்.

எந்தவொரு கொள்கையும் செயல்படுத்துவதில் – நித்திய வாழ்வில் நடத்திக் காட்டுவதில் தனி மனிதனே மிகவும் முக்கியமானவன். இதனால்தான் இஸ்லாம் எப்போதும் தனி மனிதனுக்கு முக்கியத்துவம் தந்து அவனை உருவாக்கிடுவதில் கவனம் செலுத்துகின்றது. இஸ்லாம் தனது கொள்கைகளை முதலில் ‘தனி மனிதன்’ என்ற அளவிலேயே துவங்குகின்றது.

இங்கே நாம், நமது விவாதத்தை, இஸ்லாம் எதிலிருந்து ஆரம்பிக்கின்றதோ அதிலிருந்தே ஆரம்பிப்போம். இஸ்லாம் தனி மனிதனிலிருந்து ஆரம்பிப்பதால் நாமும் தனி மனிதனிலிருந்தே ஆரம்பிப்போம். இந்த வகையில் நாம் தனி மனிதனின் இயல்புகள் என்னென்ன என்பதை ஆராய்வோம். பின்னர் இந்த இயல்புகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறை என்னவென்பதையும் பார்த்திடுவோம்.

மனிதன் இரண்டு விதமான இயல்புகளைக் கொண்டவன் எனக் கொள்ளலாம். இந்த இரண்டு இயல்புகளுமே ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியத் தொடர்பினைக் கொண்டவைகள். அவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுபவைகளுமாகும்.

இவைகள்:

1. மனிதனின் அக இயல்புகள்

2. மனிதனின் புற இயல்புகள்

என்பவையாகும்.

மனிதனின் அக இயல்புகள் இரண்டு அம்சங்களைக் கொண்டது.

(அ) ரூஹ்: (ஆன்மா அல்லது அகம் அல்லது உள்ளம்)

(ஆ) அபப்குல்: (மனம் அல்லது பகுத்தறியும் தன்மைப் படைத்த மதிநுட்பம்)

மனிதனின் அக இயல்புகளைப் பொறுத்தவரை நாம் இரண்டு பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டியதிருக்கின்றது.

1. மனிதனின் ஆன்மீகம் அல்லது ஒழுக்கம் பற்றிய விஷயங்கள். (அதாவது) மனிதனின் ஆன்மீக வாழ்க்கை.

2. அறிவின் நுட்பம் பற்றிய விஷயங்கள். (அதாவது) அறிவுத்துறையில் மனித வாழ்க்கை.

இவை இரண்டையும் தவிர ஏனைய மனித இயல்புகளைப் புற இயல்புகள் எனக் கொள்ளலாம்.

இறை உணர்வு, இறையச்சம், பக்தி, நேர்மை, நன்நடத்தை, அமைதி ஆகியவற்றிற்குத் தேவையான ஆன்மீக ஊட்டங்களைத் தந்து மனிதனின் ஆன்மீக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்றது இஸ்லாம்.

இஸ்லாம் மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்காக ஏற்படுத்தித் தந்திருக்கும் நியதிகள், அவைகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் மிகவும் சீரிய பலன்களை மிகவும் நேரடியாகத் தருவனவாகும். அவை மனிதனின் ஆன்மீக வாழ்க்கை வளத்திற்கு நிறைவாக வழிகாட்ட வல்லதாகும். இதற்காக இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள நியதிகள் பின்வருமாறு:

1. தொழுகை – ஸலாத்.

2. ஏழைவரி – ஜகாத்.

3. நோன்பு – ஸவ்ம்.

4. புனிதப்பயணம் – ஹஜ்.

5. இறைவன் மீது அன்பு செலுத்துவது, அவனது தூதர் மீது அன்பு செலுத்துவது, உண்மையையும், ஏனைய மனிதர்களையும் இறைவனுக்காக மட்டும் நேசிப்பது.

6. எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனையே நம்பியிருத்தல், அவனையே சார்ந்திருத்தல்.

7. இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராய் இருத்தல்.

மேலே தந்துள்ள ஏழு நியதிகள் குறித்த விளக்கங்களை நாம் இதற்கு முன்னமேயே தந்து விட்டோம். இவைகள் இல்லையென்றால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நம்பிக்கை என்பது வெற்று நடிப்பேயாகும். வாசகர்கள் இது குறித்து நாம் ஏற்கனவே தந்துள்ள விளக்கங்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்திட வேண்டுகிறோம்.

அறிவுத்துறையில் மனித வாழ்க்கை.

அறிவுத்துறையில் மனித வாழ்க்கை மனம் அல்லது மதிநுட்பம் அல்லது பகுத்து அறியும் அறிவு ஆகியவற்றால் ஆனதாகும். மனித வாழ்வின் இந்தப் பகுதிக்கு இஸ்லாம் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது. மனிதனின் அறிவு மிகவும் ஆழமான, அழுத்தமான அடிப்படையில் அமைந்திருக்கின்றது இஸ்லாம். இந்த அடிப்படைகளைப் பின்வருமாறு பிரித்தறியலாம்.

1. உண்மையான அறிவு என்பது தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டது. அத்துடன் ஐயங்களுக்கு அப்பாற்ப்பட்ட நிரூபணங்களைக் கொண்டதாகும். இந்த அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த அடிப்படையில் திருக்குர்ஆனே அத்தனை அறிவும் அடங்கிய அறிவுப் பேழை என துணிந்து கூறலாம். அறிவுத் தாகத்தை மனிதனிடம் முதன்முதலில் ஏற்படுத்தியது திருக்குர்ஆனே என்றால் அது மிகையாகாது.

ஆணும், பெண்ணும் அறிவை அதன் எல்லா விசாலத்தோடும், உண்மையை அதன் எல்லா ஆதாரங்களோடும் தேடிப்பிடித்திட வேண்டும் என்பது இறைவனின் கட்டாயக் கட்டளையாகும்.

அனுபவம், ஆராய்ச்சி, சிந்தனை, இறைபக்தி, இறைவணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெளிவான அறிவைத் தருவது திருகுர்ஆனேயாகும்.

இயற்கையும், இந்த உலகின் அமைப்பும் ஓயாது அறிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அறிவுச் சுரங்கங்களாகும். உண்மையின் உண்மையான அத்தாட்சிகளும் இவைகளேயாகும்.

திருக்குர்ஆனே அறிவின் விளைநிலமான இந்த ஆதாரங்களை உணர்த்திக் காட்டிய வழிகாட்டியாகும்.

‘பரம்பரைக் கூற்று – ஆகவே இது வாய்மை, வாய்திறக்காமல் ஏற்றுக்கொள்’ என்று பலவந்தமாகத் திணிக்கப்படும் “உண்மைகளை” இஸ்லாம் ஒருபோதும் உண்மையென ஏற்றுக் கொள்வதில்லை. ஆதாரமற்ற வதந்திகளை இஸ்லாம் வாதத்திற்காகக்கூட  ஒத்துக் கொள்வதில்லை. ‘நம்பிக்கைகளையும், நடப்புகளையும் ஏன்? என்று கேள்’ என்ற உணர்வை ஊட்டிய அறிவுக் கருவூலம் மனித அறிவுக்கு எட்டியவரை திருகுர்ஆனேயாகும். (பார்க்க: அல்குர்ஆன்: 2:111 – 21:24)

திருமறையே தன்னலவில் அறிவுக்கூர்மை படைத்தவர்களுக்கு ஓர் அறைகூவலாகும். மனிதன் திருமறைக் கூறும் உண்மைகளில் எதை வேண்டுமானாலும் ஒரு சவாலாகக் கொண்டு பரீட்சித்துப் பார்க்கலாம். அதுபோலவே திருமறைக்கு இணையானதொரு அத்தியாயத்தையேனும் ஆக்கிக்காட்டிட முடியுமா? முடிந்தால் பாருங்கள், என அறைகூவி அழைக்கின்றது திருகுர்ஆன்.

திருகுர்ஆனின் எந்தப்பகுதியை புரட்டினாலும் அங்கே இயற்கையை சுட்டிக்காட்டி ஓடுங்கள் அங்கே தேடுங்கள் உண்மையை – அறிவை  –  என அறிவுறுத்தும் அறிவுரைகளைக் காணலாம். உண்மையை – அறிவைத் தேடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர், இறைப்பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராகக் கருதப்படுவார், எனக்கூறி அறிவைத் தேடுவோரை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்துகின்றது திருமறை.

2. உண்மை அறிவின் இரண்டாவது பகுதி இறைவன் மீது கொள்ளப்படும் நம்பிக்கையாகும். இது அறிவின் அகக்கண்களைத் திறந்துவிடும் அற்புதமான திறவுகோலாகும். அத்துடன் எண்ணற்ற சிந்தனை ஊற்றுக்களை அகழ்ந்திடும் ஆன்மீக அகஞானமாகும்.

இறைவன் மீது கொள்ளப்படும் நம்பிக்கையே இஸ்லாம் எனும் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் அடித்தளமாகும்.

இறை நம்பிக்கை பூரணமாக வேண்டுமானால், அது அழுத்தமான அடிப்படையில்  – ஐயமற்றுச், சிந்தனைத் தெளிவில் அமைந்ததாக இருந்திட வேண்டும். இறை நம்பிக்கை அழுத்தமான அடிப்படையில் அமைந்திட, சிந்தனைத் தெளிவில் பிறந்திட அறிவின் ஆற்றல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாக  வேண்டும்.

அறிவு, ஆராய்ச்சி இவற்றின் அடிப்படையில் தான் இறை நம்பிக்கையை உறுதிப்படுத்திட வேண்டும். ஆகவே இங்கே அறிவை மிகுதியாகப் பயன்படுத்திட வேண்டியுள்ளது. சிந்தனைக் கண்களைக் குருடாக்கிக் கொண்டவர்கள், இந்த உலகின் மிகப்பெரிய ‘உண்மையைக்’ கண்டுகொள்ள முடியாதவர்களாகி விடுகின்றனர். அவர்களின் நம்பிக்கையும் அழுத்தமான அடிப்படையில் அமைந்ததாக இருந்திட முடியாது.

கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவர்களைப் பார்த்து, எந்த அடிப்படையும் இல்லாமல் வைத்துக்கொள்ளும் நம்பிக்கையை இஸ்லாம் அங்கீகரிப்பதே இல்லை. அறிவுத்துறையில் மனிதனின் வாழ்வை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகும். இஸ்லாம் இறைவனை நம்பவேண்டும் என வேண்டுகின்றது. இறைவனின் அருள்மறையாம் திருமறை இறைவன் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும் எனக் கூவிடும் எண்ணற்ற வசனங்களைக் கொண்டது. இந்த வசனங்கள் மனிதர்களை நூல்கள் நிறைந்த படிப்பகங்களில் பூட்டி வைப்பவையோ, அவர்களை மனச்சிறையில் மாட்டி வைப்பவையோ அல்ல. அவைகள் அறிவுப் பலம் படைத்தவர்களைத் தட்டியெழுப்பி அவர்களின் சோம்பலைக் குலைத்து, தூக்கத்தை இடறி சிந்திக்கத் தூண்டுபவைகளேயாகும். சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு ஏற்புடையக் கருத்துக்களைத் தருபவை அவை. இவற்றிலேதான் திருமறை வசனங்களின் சிறப்பும், உயர்வும் அடங்கியுள்ளது.

திருக்குர்ஆன் இறைவனைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றது. அதேநேரத்தில் அது மனிதர்கள் சோம்பிக் கிடந்திடுவதையும் விரும்பவில்லை. மனிதர்கள் தங்களது அறிவு செல்வத்தை உண்மையான, தீவிரமான, தொடரான முயற்சிகளின் மூலம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றது திருக்குர்ஆன். இதன் மூலம் மனிதன் அறிவு பலம் நிறைந்தவனாக விளங்கிட வேண்டும் எனவும் திருமறை விழைகின்றது. அடிப்படைகள் ஏதுமின்றி வேகமாக வரும் நம்பிக்கை அது வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விடும். இஸ்லாம் இதுபோன்ற நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதே இல்லை. நம்பிக்கைத் தெளிவானதாகவும், வலுவானதாகவும், நிறைவானதாகவும், நிரந்தரமானதாகவும் இருந்திட வேண்டுமென விரும்புகின்றது இஸ்லாம்.

(இறை) நம்பிக்கை மனிதனின் இதயத்தில் இருள் போக்கி, தெளிவுதந்து, ஒளியூட்ட வேண்டும். இந்த நம்பிக்கை நித்திய வாழ்வின் நடப்பில் எல்லாத் துறைகளிலும் பூரணமாகப் பிரதிபலித்திட வேண்டும் என அவாவுறுகின்றது இஸ்லாம். கண்மூடித்தனமாக வைத்துக் கொள்ளும் நம்பிக்கை நித்திய வாழ்வின் போக்கை மாற்றியமைத்திடும் சக்தியற்றது.

இஸ்லாம் இறைவன் மீதான நம்பிக்கையை பகுத்தறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறிடும் போது, அது சிந்தனையில் அத்தனை வாசல்களையும் திறந்து விடுகின்றது. எவ்வளவு தூரம் மனிதனின் அறிவு பாய்ந்திட முடியுமோ அவ்வளவு தூரம் அது பாயட்டும் எனப் பணிக்கின்றது இஸ்லாம்.

தனது சிந்தனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு மனிதன் அறவுலகின் ஆகாயத்தில் உயர, உயரப் பறந்து எட்டுவதையெல்லாம் எட்டிப்பிடித்திட வேண்டும். அதுபோலவே மனிதன் தனது மனக்கண்ணைத் திறந்து உலகம் என்ற பெரிய புத்தகத்தில் புகுந்து தனது மனதை – மனப்பக்குவத்தை எவ்வளவு விசாலப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு விசாலப்படுத்திக் கொள்ளலாம் என்றும் விட்டுவிடுகின்றது இஸ்லாம். இதில் இஸ்லாம் எந்தத் தடைகளையும் போடுவதில்லை. எந்த நிபந்தனைகளையும் போடுவதில்லை.

அறிவைத்தேடிட என்னென்ன உபாயங்கள் உண்டோ அவை அனைத்தையும் மேற்கொள்ளும்படி கட்டளையிடுகின்றது இஸ்லாம். அது ஆராய்ச்சி அறிவாக இருப்பினும் சரி அல்லது அனுபவ அறிவாக இருப்பினும் சரியே!

இப்படி மனிதனின் அறிவை வளப்படுத்திட ஊக்கம் தருவதின் மூலம், இஸ்லாம் மனிதனின் அறிவுக் கூர்மையிலும், அவனது அறிவின் ஆற்றலிலும், தனக்கிருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றது. அத்துடன் மனிதனின் மனதைச் சுற்றிப் போட்டிருக்கும் தடைகளையும் தகர்த்தெறிகின்றது.

இஸ்லாம் மனிதனின் நிலையை உயர்த்துவதுடன் அவனை தன்னம்பிக்கை நிறைந்தவனாகவும் ஆக்கி விடுகின்றது. அத்துடன் அவனது அறிவும் மனமும் அறிவுத்துறைகள் அத்தனையிலும் உயர்வுற வேண்டும் என விழைகின்றது இஸ்லாம்.

இவ்வாறு இறைவன் மீது கொள்ளப்படும் நம்பிக்கை அறிவுக்கு ஊட்டம் தருகின்றது. அத்துடன் அறிவை வளர்ப்பதற்கும் அதை பயனுள்ளதாக ஆக்கிடவும் துணை நிற்கின்றது.

மேலே கூறியுள்ளபடி மனிதனின் ஆன்மீக வாழ்வும், அறிவின் அடிப்படையிலான வாழ்வும் இஸ்லாம் காட்டிய வழியில் நடத்தப்படுமேயானால் மனிதனின் அகஇயல்பும் அகவாழ்வும் பலம் நிறைந்ததாகவும் திண்மைப் பெற்றதாகவும் ஆகுகின்றது. மனிதனின் அகவாழ்வு வலுப்பெறும்போது அவனது புறவாழ்வும் புதுமைப்பெற்று பூத்துக் குலுங்கும்.

மனிதனின் புற இயல்புகள்.

மனிதனின் புற இயல்புகள், அக இயல்புகளைப் போலவே விரிவானதும் விசாலமானதுமாகும். மனிதனின் அக இயல்புகளின் வலிமையைப் பொறுத்துத்தான் மனிதனின் புற இயல்புகளின் வலிமை அமையும். அதுபோலவே மனிதனின் புற இயல்புகளின் வலிவைப் பொறுத்துத்தான் மனிதனின் அக இயல்புகளின் வலிவு அமையும். ஏனெனில் மனிதனின் பொதுவான இயல்புகள் இந்த இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கியதேயாகும்.

மனிதனின் புற இயல்புகளைத் தெளிவாக விளக்கிடவும், புரிந்திடவும் மனிதனின் புற இயல்புகளை நாம் சில கூறுகளாகப் பிரித்திட வேண்டும்.

[அதாவது;

A. மனிதனது தனிவாழ்வு

B. மனிதனது குடும்ப வாழ்க்கை

C. மனிதனது சமுதாய வாழ்க்கை

D. மனிதனது பொருளாதார வாழ்க்கை

E. மனிதனது அரசியல் வாழ்க்கை, அவனது சர்வதேச வாழ்க்கை.

என்ற பிரிவுகளாக மனித வாழ்க்கையைப் பிரித்து ஆராய வேண்டியுள்ளது]

மனிதனது இந்த இரண்டு இயல்புகளுக்கிடையேயும் இருந்திட வேண்டிய சமநிலையில் ஏதேனும் தடுமாற்றங்கள் நிகழ்ந்தால், அது மிகவும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனிதனது அக இயல்புகளும் புற இயல்புகளும் மிகவும் சீரிய முறையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டிட வேண்டும். மனிதனது இந்த இரண்டு இயல்புகளும் இணைந்து செயல்பட்டிடும் விதத்திலேதான் இஸ்லாம் தனது வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.