அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.

1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும்.

2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு பாங்கு சொல்லவோ இகாமத் சொல்லவோ தேவையில்லை. பெருநாள் தொழுகைக்கு இரண்டு ரக்அத்களே உண்டு. ஒவ்வொரு ஸூராவிலும் இமாம் பாத்திஹா ஸூராவையும் குர்ஆனின் ஒரு பகுதியையும் உரக்க ஓதுவார். 

3. தொழுகையை அல்லாஹு அக்பர் (இறைவனே மிகப் பெரியவன்) என்ற தக்பீருடன் இமாம் ஆரம்பிக்கிறார். இவ்வாறு மூன்று முறை ஓதுவார். ஒவ்வொரு முறையும் அல்லாஹு அக்பர் என்று கூறும்போது கைகளை காதுகள் வரையிலும் உயர்த்தி, தொங்கவிட வேண்டும். மூன்றாவது முறை தக்பீர் சொல்லி முடித்தவுடன் தொப்புழுக்கு கீழே இடது கரத்தின் மீது வலது கரத்தை வைத்துக்கட்டி நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர்கள் இமாமை அப்படியே பின்பற்ற வேண்டும்.

4. முதலாவது ரக்அத் முடிந்தவுடன் இமாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லி இரண்டாவது ரக்அத்தை ஆரம்பிப்பார்முந்திய ரக்அத்தைப் போலவே இந்த ரக்அத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

5. இரண்டு ரக்அத் தொழுகை முடிந்த பிறகு, இமாம் ஒரு சொற்பொழிவாற்றுவார் (குத்பா). இச்சொற்பொழிவில் இரண்டு பாகங்கள் உண்டு. முதல் பாகத்தை முடித்து சற்று இடைவெளிக்குப்பின் இரண்டாவது பாகத்தை ஆரம்பிப்பார். முதலாவது பகுதியை ஒன்பது முறைகள் அல்லாஹு அக்பர் என்று சொல்லி ஆரம்பிப்பார். இந்தச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை சொற்பொழிவைப் போன்று நல்லுரைகளும், அறிவுரைகளும் கொண்டதாக இருக்கும்.

6. நோன்பு பெருநாள் சொற்பொழிவில் பித்ராவைப் பற்றி, அதாவது நோன்பிற்கு பிறகு செய்யவேண்டிய தர்மத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ‘பித்ரா’ கட்டாயம் செலுத்த வேண்டிய வரியைப் போன்றதாகும். வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ஏழைக்கு திருப்திகரமான சாப்பாட்டையோ அல்லது அதற்கு சமமான தொகையையோ கொடுக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும் இதே அளவு தானம் செய்ய வேண்டும். உதாரணமாக தன்னைச் சார்ந்துள்ளவர்கள் மூன்று பேர் இருந்தால் தனக்கும் அவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக நான்கு பேர்களின் சார்பில் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு தரப்படும் தர்மங்களை தொழுகைக்கு முன்னரே வழங்கி விடுவது சிறப்பாகும். ஏனெனில் இதைப்பெறும் ஏழைகள் பெருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் வரவேற்பார்கள்.

7. ஹஜ்ஜுப் பெருநாள் சொற்பொழிவின்போது ‘குர்பான்’ கொடுப்பதன் அவசியத்தை எடுத்து சொல்ல வேண்டும். வசதி படைத்தவர்கள் குர்பான் கொடுப்பது கடமையாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வெள்ளாடு அல்லது செம்மறியாடு கொடுத்தால் போதுமானது. ஏழு குடும்பங்களுக்கு ஒரு மாடு அல்லது ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மான் கொடுத்தால் போதுமானதாகும். பெருநாள் தொழுகை முடிந்தவுடன் இவற்றை அறுத்துக் கொடுப்பது விரும்பத்தக்கதாகும். ஆனாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் அறுத்துக் கொடுத்தாலும் அது ஏற்புடையதாகும். ‘குர்பான்’ செய்யப்பட்ட இறைச்சியை பற்றி புனித குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: “அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள். ஏழைகளுக்கும், இரப்பவர்களுக்கும் அதனைக் கொடுங்கள்.” (22:36) அதே பகுதியில் புனித குர்ஆன் மேலும் பின்வருமாறு கூறுகிறது:

”குர்பான் கொடுக்கப்பட்ட இறைச்சியோ அதன் குருதியோ இறைவனைப் போய் சேருவதில்லை. அடியார்களின் பக்தி தான் அவனைப் போய்ச் சேரும்”

‘தக்பீர்’ என்ற இறைவனைப் புகழும் முழக்கம் இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன்பும் ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்த மூன்று நாட்களிலும் முழங்கப்படுகின்றது. இது தக்பீருத் தஷ்ரீக் என்று அழைக்கப்படுகின்றது.

தக்பீர் பின்வருமாறு:

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,

லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து

அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்துலில்லாஹி கஸீரா

வ ஸுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், ஸதக்க வஃதஹ்

வ நஸர அப்தஹ், வ அஅஸ்ஸ ஜுன்தஹ்,

வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்

லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு

முஃலிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதின்

வஅலாஆலி சையிதினா முஹம்மதின்,

வஅலா அஸ்ஹாபி சையிதினா முஹம்மதின்

வஅலா அன்சாரி சையிதினா முஹம்மதின்

வஅலா அஜ்வாஜி சையிதினா முஹம்மதின்

வஅலா துர்ரிய்யத்தி சையிதினா முஹம்மதின்

வஸல்லிம் தஸ்லீமன் கஸீரா.

தக்பீரின் பொருள்.

இறைவனே உயர்ந்தவன் (மூன்று முறை)

இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

இறைவன் உயர்ந்தவன்! (இரண்டு முறை) எல்லாப்புகழும் இறைவனுக்கே! நிச்சயமாக இறைவன் உயர்ந்தவன்.

எல்லாப்புகழும் அவனுக்கே உரியன.

அல்லும் பகலும் அவனுக்கே புகழ்! இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை! அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான்.

தனது அடியாரான முஹம்மதை ஆதரித்தான். தன்னுடைய வீரர்களுக்கு முழுமையான வெற்றியை நல்கினான்.

பகைவர்களை நிச்சயமாக தோல்வியடையச் செய்தான். ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை!

நிராகரிப்போர்கள் வெறுத்தபோதிலும் அவனையே நாங்கள் உண்மையான பக்தியோடு வணங்குவோம்.

இறைவனே! எங்கள் தலைவர் முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் மீதும்,

எங்கள் தலைவர் முஹம்மதுவின் தோழர்கள் மீதும்,

எங்கள் தலைவர் முஹம்மதுவின் ஆதரவாளர்கள் மீதும்,

எங்கள் தலைவர் முஹம்மதுவின் பிராட்டியார்கள் மீதும்,

எங்கள் தலைவர் முஹம்மதுவின் கிளைஞர்கள் மீதும், மேன்மைகளையும், பாக்கியங்களையும் பொழிந்தருள்வாயாக!

அவர்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அருள்வாயாக!

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.