அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.

ஒளு, பாங்கு, இகாமத் ஆகியவை முடிந்தவுடன் தொழுகை பின்வருமாறு தொடங்குகின்றது.

1. பஜ்ருத் தொழுகை

இந்தத் தொழுகையில் சுன்னத் தொழுகையாக இரண்டு ரக்அத்களும் பின்னர் பர்ளுத் தொழுகையாக (கட்டாயத் தொழுகையாக) இரண்டு ரக்அத்களும் தொழ வேண்டும்.

தொழும் முறைகள் இரண்டிற்குமே ஒன்றுதான். நிய்யத் வைப்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது.

தொழுகையின் முறைகள் பின்வருமாறு:

நிலை-1

பக்தியோடும் பணிவோடும் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு செவிகள் வரைக்கும் கைகளை உயர்த்தி,

“நவைத்து உஸல்லி சுன்னத்த ஸலாத்தல் பஜ்ரி அல்லாஹு அக்பர்” (நான் இந்தப் பஜ்ருத் தொழுகைக்கான சுன்னத் தொழுகையை தொழுகின்றேன். இறைவனே பெரியவன்) என்று நினைத்து தொழுகையை தொடங்க வேண்டும்.

பர்ளு தொழுகையை தொடங்கும்போது “நவைத்து உஸல்லி பர்ள ஸலாத்தல் பஜ்ரி அல்லாஹு அக்பர்” (நான் இந்த பஜ்ருத் தொழுகைக்கான பர்ளுத் தொழுகையைத் தொழுகின்றேன். இறைவனே பெரியவன்) என்று நினைத்து தொழுகையை தொடங்க வேண்டும்.

பிறகு வலக்கரங்களைத் தாழ்த்தி தொப்புழுக்குக் கீழே * இடக்கரத்தின் மீது வலக்கரத்தை வைத்தல் வேண்டும்.  ( * இவ்வாறு (தக்பீர் கட்டுதல்) கை கட்டுதல் ஒரு மத்ஹபின்படி உள்ள முறையாகும். இதில் மற்ற மத்ஹபுகளின்படி சில சிறிய வேறுபாடுகள் உள்ளன. இவை தொழுகையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த சிறு வேறுபாடுகள் தடைகளோ, கட்டுப்பாடுகளோ அல்ல. மாறாக நமது வசதிக்காகவேயாகும்.)

நிலை-2

பிறகு மெல்லிய குரலில் பின்வருமாறு சொல்ல வேண்டும்.

“சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாயிலாஹ கைருக. அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

இதன் பொருள்: இறைவனே நீயே தூயவன். உனக்கே புகழ் அனைத்தும் உரியதாகும். உனது திருநாமம் மகிமை மிக்கது. உனது மாண்பு உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அளவற்ற அருளாளனும், அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால். * ( * இவ்வாறு சொல்வது விரும்பத்தக்கது. ஆனால் தொழுகை முழுமையாவதற்கு இது முற்றிலும் அவசியமில்லை.)

நிலை-3

பிறகு மெதுவான குரலில் திருக்குர்ஆனின் தோற்றுவாயான பாத்திஹா ஸூராவை ஓத வேண்டும். அதை ஓதி முடித்தவுடன் திருக்குர்ஆனின் ஏதேனும் சில வசனங்களை ஓத வேண்டும்.

நிலை-4

பிறகு அல்லாஹு அக்பர் என்று சொல்லி குனிந்து உள்ளங்கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது.

“சுப்ஹான ரப்பியல் அளீம்” (மிகப் பெரியவனாகிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்) என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.

இந்த நிலை ருகூஉ என்று அழைக்கப்படுகின்றது. இதன் பிறகு,

“ஸமிஅல்லாஹு லிமன் ஹமித; ரப்பனா லக்கல் ஹம்து (தன்னிடம் நன்றியுடையவர்களாய் இருப்பவர்களை இறைவன் ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! உனக்கே எல்லா புகழும்) என்று சொல்லி மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும். இவ்வாறு சொல்லும்போது கைகள் இரண்டும் பக்கங்களிலேயே இருக்க வேண்டும்.

நிலை-5

பின்னர் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டு கால் பெருவிரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், நெற்றி ஆகியவை தரையில் படுமாறு தாழ்ந்து தொழுதல் வேண்டும். இந்நிலை ஸுஜூது எனப்படும், அப்பொழுது,

”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” (உன்னதமான இறைவனுக்கே புகழ் அனைத்தும்) என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.

நிலை-6

பிறகு அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டு இருப்பு நிலைக்கு (ஜூலூஸ்) வர வேண்டும்.

இடது பாதத்தின் வெளிப்பகுதியும், வலது கால்களின் விரல்கள் தரையில் படுமாறு அமர்ந்து இரு கைகளையும் முழங்கால்கள் மீது வைத்து அமர வேண்டும். இதன் பிறகு இன்னொரு முறை ஸுஜூது செய்ய வேண்டும். இதோடு தொழுகையின் ஒரு ரக்அத் முடிகிறது.

நிலை-7

பிறகு அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டு எழுந்து நின்று இரண்டாவது ரக்அத்துக்காக பாத்திஹா ஸூராவையும் பின்னர் குர்ஆனின் சில வசனங்களையும் ஓத வேண்டும்.

நிலை-8

பிறகு (முன் சொன்னதுபோல்) ருகூவையும், இரண்டு ஸுஜூதுகளையும் முடித்து விட்டு மீண்டும் இருப்பு நிலைக்கு வர வேண்டும். இந்நிலையில் தஷஹ்ஹுத்-ஐ இரண்டு பாகங்களாக ஓத வேண்டும்.

(இவை இப்பகுதியின் இறுதியில் தரப்பட்டுள்ளன.)

நிலை-9

கடைசியாக முகத்தை வலது பக்கம் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் (இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக) என்று சொல்ல வேண்டும். இதேபோல் இடது பக்கம் திரும்பியும் சொல்ல வேண்டும்.

இதேபோல்தான் இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அது சுன்னத்தானாலும் சரி, பர்ளாயினும் சரியே.

தொழுகையின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு சொல்லும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பொருள் பொதிந்தவை.

2. லுஹர் தொழுகை:

இதற்கு முந்தின சுன்னத் தொழுகை (4) நான்கு ரக்அத்துகள்

பர்ளு தொழுகை (4) நான்கு ரக்அத்துகள்.

பிந்திய சுன்னத் தொழுகை (2) இரண்டு ரக்அத்துகள்.

பர்ளு தொழுகை பின்வருமாறு நிறைவேற்றப்படுகின்றது.

() முதல் இரண்டு ரக்அத்துகளும் பஜ்ருத் தொழுகையில் நிறைவேற்றப்பட்டதைப்போல் நிறைவேற்ற வேண்டும். பாத்திஹா ஸூராவையும் குர்ஆனின் சில வசனங்களையும் மெதுவான குரலில் ஓத வேண்டும். ருகூஉ, ஸுஜூது நிலைகள் முன்போலவே செய்யப்பட வேண்டும்.

() இரண்டாவது ரக்அத்திற்குப் பிறகு தஷஹ்ஹுத் ஓதும்போது அதனுடைய முதற்பாகத்திலேயே நிறுத்திவிட்டு ஸலாம் சொல்லாமல் எழுந்து நிற்க வேண்டும்.

() மூன்றாவது ரக்அத்தில் பாத்திஹா ஸூராவை மட்டும் ஓத வேண்டும்.

() மூன்றாவது ரக்அத் முடிந்து எழுந்தவுடன் நான்காவது ரக்அத்திலும் பாத்திஹா ஸூராவை மட்டும் ஓத வேண்டும்.

() ருகூஉ, ஸுஜூது நிலைகளுக்குப் பின்னர் இருப்பு நிலைக்கு வந்து தஷஹ்ஹுதின் இரு பாகங்களையும் முழுமையாக ஓத வேண்டும்.

() பிறகு வலது பக்கமும், இடது பக்கமும் திரும்பி ஸலாம் கூற வேண்டும்.

() பிந்தின சுன்னத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் பஜ்ருத் தொழுகையைப் போலவே நிறைவேற்ற வேண்டும். ஆனால் மெதுவான குரலில் ஓத வேண்டும்.

3. அஸர் தொழுகை:

1. இதன் முந்தின சுன்னத் நான்கு (4) ரகஅத்துகளாகும். இவற்றை லுஹர் தொழுகையைப் போன்று நிறைவேற்ற வேண்டும். இதிலும் ஓதுபவற்றை மெதுவான குரலில் ஓத வேண்டும்.

2. இதன் பர்ளு தொழுகை நான்கு (4) ரக்அக்களைக் கொண்டதாகும். இவற்றையும் லுஹர் தொழுகையைப் போலவே நிறைவேற்ற வேண்டும்.

4. மஃக்ரிப் தொழுகை:

இதனை மூன்று (3) ரக்அத்துகள் பர்ளாகவும் தொடர்ந்து இரண்டு ரக்அத்துகள் சுன்னத்தாகவும் தொழ வேண்டும்.

பர்ளுத் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளையும் ஏனைய தொழுகைகளைப் போல நிறைவேற்ற வேண்டும். மூன்றாவது ரக்அத்தின் முடிவில் தஷஹ்ஹுத் ஓதி இரு பக்கங்களிலும் ஸலாம் சொல்லி தொழுகையை முடித்து விட வேண்டும்.

5. இஷாத் தொழுகை:

இதில் பர்ளான நான்கு (4) ரக்அத்துகளும் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளும் அடங்கியுள்ளன. அதோடு மூன்று ரக்அத் வித்ருத் * தொழுகையும் உண்டு. ( * இது சம்பந்தமாக மத்ஹபுகளுக்கிடையே சில வேறுபாடுகள் உள்ளன.)

(வித்ருத் தொழுகை சுன்னத் தொழுகையை விட மேலானது. ஆனால் பர்ளுத் தொழுகையை விட குறைவானது)

இஷாத் தொழுகையை லுஹர் அல்லது அஸர் தொழுகையை போலவே நிறைவேற்ற வேண்டும்.

இதன் சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்தையும் பஜ்ருத் தொழுகையைப் போலவே நிறைவேற்ற வேண்டும்.

வித்ருத் தொழுகையின் மூன்று ரக்அத்துகளையும் சுன்னத் தொழுகையைப் போலவே நிறைவேற்ற வேண்டும். ஆனால் இரு வேறுபாடுகள் உண்டு.

1. மூன்றாவது ரக்அத்தில் பாத்திஹா ஸூராவை ஓதிவிட்டு குர்ஆனின் ஒரு பகுதியை ஓத வேண்டும்.

2. ருகூஉ நிலைக்கு சென்று நிற்கும் நிலைக்கு வந்து ஸுஜூது நிலைக்கு செல்வதற்கு முன்பு பின்வருபவற்றை ஓதுதல் வேண்டும்.

“அல்லாஹும்ம இன்னா நஸ்தயீனுக்க வ நஸ்தஹ்தீக வ நஸ்தஃ(F)பிருக்க வ நதூபு இலைக்க. வ நுஃமினுபிக வ நதவக்கலு அலைக்க. வ நுஷ்னீ அலைக்கல் ஹைர குல்லஹு. நஸ்குருக்க வலா நக்(F)புருக்க வ நஹ்லஹு வ நத்ருக்க மன் ய(F)ப்ஜுருக்க. அல்லாஹும்ம இய்யாக்க நஃபுது வலக்க நுஸல்லி வநஸ்ஜுது வ இலைக்க நஸ்ஆ வ நஃ(F)பிது. நர்ஜூவ் ரஹ்மதக்க வ நஹ்ஸா அதாபக்க இன்ன அதாபக்க பில்கு(F)ப்(F)பாரி முல்ஹிக். வஸல்லி அல்லாஹும்ம அலா ஸையிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லிம்.”

இது குனூத் என்று அழைக்கப்படுகின்றது. இதன் பொருள்:

“இறைவனே! உன்னுடைய உதவியையும், வழிகாட்டுதலையும் வேண்டி நாங்கள் இறைஞ்சுகின்றோம். மேலும், உன்னுடைய பாதுகாப்பை நாடுகின்றோம். அதோடு உன்னையே நம்புகின்றோம். உன்னையே சார்ந்திருக்கின்றோம். மேலும் உன்னையே நாங்கள் போற்றி உனக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம். நாங்கள் நன்றி மறந்தவர்களாக இருக்க மாட்டோம். மேலும் உனக்கு கீழ்படியாதவர்களைப் புறக்கணித்து அவர்களை விட்டு விலகியே இருக்கின்றோம்.

இறைவனே! உன்னையே தொழுது உனக்கே நாங்கள் கீழ்படிகிறோம். மேலும் உன்னையே நாங்கள் நாடுகிறோம். உனக்கு நாங்கள் விரைந்து கீழ்படிகிறோம். உன்னுடைய கருணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உன்னுடைய தண்டனையை நாங்கள் அஞ்சுகிறோம். உன்னுடைய தண்டனை நம்பிக்கை கொள்ளாதவருக்கே!

இறைவனே! எங்கள் தலைவர் முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும், அவர்களை உண்மையாகப் பின்பற்றுபவர்களையும் மேன்மையுறச் செய்வாயாக!

பொதுவாக சுன்னத் தொழுகைகளை தனித்தனியாகவே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகைகளும் ரமளான் மாதத்தில் வித்ருத் தொழுகைகளும் கூடாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

பர்ளு தொழுகைகளை தவறவிட்டவர்கள் சுன்னத் தொழுகைகளை தொழுவது அவசியமில்லை. அதற்குப் பதிலாக தவறவிட்ட பர்ளுத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். பர்ளுத் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் அத்தொழுகையோடு நிறைவேற்ற வேண்டிய சுன்னத் தொழுகைகளை ஈடு செய்ய வேண்டிய அவசியமில்லை. தொழுகை முழுவதையும் அரபி மொழியில்தான் நிறைவேற்ற வேண்டும். அரபி மொழி தெரியாதவர்கள் அதனைக் கற்றுக் கொள்ளும்வரை (அரபு மொழி உச்சரிப்புகளை) தனது மொழியில் (கூறி தொழுகையை) நிறைவேற்றலாம். * ( * இது ஒரு குறுகிய கால ஏற்பாடே. அதற்குள் அரபு மொழியைக் கற்று அதிலேயே தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.)

பர்ளுத் தொழுகைகளை கூட்டாக தொழுவதே நல்லதாகும். ஜமாஅத் தொழுகை பள்ளிவாசலில் நடத்தப்படுவதே மிகச் சிறப்புடையதாகும்.

Leave a Reply