அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில:

1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே!

2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.

3). வானங்களிலும், பூமியிலும் இருப்பவைகள் அனைத்தையும் மனிதனுக்கு சேவை செய்வதற்காகவே இறைவன் படைத்திருக்கின்றான்.

4). இறைவன் கருணை நிறைந்தவன். ஆதலால் அவன் மனிதனிடம், மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டவைகள் எதையும் செய்யும்படி பணிப்பதில்லை.

அதுபோலவே மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டவற்றை செய்யாததற்கு மனிதனை, இறைவன் கணக்கு கேட்பதுமில்லை – தண்டிப்பதுமில்லை.

இறைவன் மனிதனை, இந்த உலக சுகங்களை அனுபவிக்க வேண்டாம் எனத் தடுப்பதுமில்லை.

5). நிதானத்துடன் நடந்து கொள்வது, நடைமுறை சாத்தியங்களை மனதில் கொண்டு செயல்படுவது, நடுநிலை நழுவாமல் இருப்பது இவைகள் அனைத்தும் நல்ல ஒழுக்கத்திற்கு உறுதுணையாக அமையும்.

6). கொள்கையளவில், எல்லாப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டவைகளே! ஆனால், வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டாக வேண்டும். கடமைகள் என்று விதிக்கப்பட்டவைகள் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும்.

7). மனிதன் இறுதியாக பதில் சொல்லிட வேண்டியது இறைவனுக்கே! மனித வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியம் இறைவனின் திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெறுவதே!

இஸ்லாம் சொல்லும் ஒழுக்கத்திற்கு பல்வேறு நிலைகள் உள்ளன. அவைகள் எல்லா நற்செயல்களையும் உள்ளடக்கியவைகள். இஸ்லாம் வழங்கும் ஒழுக்க நெறிகள் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவினை விளக்குவதாகும். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள பிணைப்புகளையும் அது உறுதிப்படுத்திடும். மனிதனுக்கும், இறைவனின் ஏனைய படைப்புகளுக்கும் இடையேயுள்ள உறவினையும் அது எடுத்துச் சொல்லும். மனிதனுக்கும் அவனின் உள்ளிருக்கும் ஆன்மாவுக்கும் இடையே உள்ள தொடர்பையும் அது தழுவி நிற்கும். முஸ்லிம்கள் தங்களுடைய புறச்செயல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் வார்த்தைகளை அளந்து பறிமாற வேண்டும். அவருடைய உணர்வுகள், சிந்தனை, செயல் இவைகள் அனைத்தும் தூய்மையானதாக இருந்திட வேண்டும். பொதுவாகச் சொன்னால் அவரது பணி நன்மையை ஏவி தீமையை எதிர்த்து போராடுவதாகும். அவர் உண்மையை நாடவேண்டும். பொய்யை நாண வேண்டும். அழகானவைகளையும், பூரணமானவைகளையும் வளர்க்க வேண்டும். தூய்மையற்றவைகளை அவர் தவிர்க்க வேண்டும். உண்மையும், நன்மையுமே அவர் இலட்சியமாக அமைந்திட வேண்டும். பணிவு, எளிமை, நன்றி, இரக்கம் இவைகள் அவரது இயல்பாக அமைந்திட வேண்டும். ஆணவம், அகந்தை, கடினமான பண்பு, பிறர் மணம் புண்படும்படி பேசுதல் அல்லது நடத்தல், பொறுப்பற்ற முறையில் காரியமாற்றுதல் இவைகள் முஸ்லிம்களின் பரம வைரியாகும். இறைவன் இவற்றை விரும்புவதில்லை. ஆகவே முஸ்லிம்களும் இவைகளை விரும்புவதில்லை.

இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஒரு முஸ்லிம் இறைவனோடு கொள்ளும் தொடர்பு அன்பு, கீழ்படிதல், முழுமையான நம்பிக்கை, உறுதி தளராமை, சாந்தம், நல்லவைகளை இறைவனுக்காக செயல்படுத்துவது ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த உயர்ந்த ஒழுக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர்ந்ததொரு ஒழுக்கத்தை – நன்னடத்தையை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு முஸ்லிம் தான் ஏனைய மனிதர்களோடு கொள்ளும் உறவில் அன்பு, அனுதாபம், இரக்கம் இவைகள் இழையோடிட வேண்டும். இந்த வகையில் ஒரு முஸ்லிம் தனது உறவினர்களோடு அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டாரின் துயரங்களில் பங்கேற்க வேண்டும். வயதில் முதிர்ந்தவர்களை மதிக்க வேண்டும். இளைஞர்களிடம் பரிவும், பாசமும் கலக்க பழகிட வேண்டும். நோயுற்றவர்களை கவனிப்பதில் துணைபுரிய வேண்டும். தேவைகளை பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்திட வேண்டும். அல்லலில் அகப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்கிட வேண்டும். சமுதாயத்தில் பிற்பட்டவர்களை உயர்த்திட முன்வர வேண்டும். நல்லவைகளை செய்து நன்றாக வாழ்ந்திடுபவர்களுடன் கலந்து மகிழ்ந்திட வேண்டும். தவறான வழியில் செல்பவர்களிடம் பொறுமையைக் கைக்கொண்டு அவர்களைத் திருத்தி நேர்வழிபடுத்திட வேண்டும். அறியாமையில் உழல்பவர்களிடையே சகிப்புத் தன்மையைக் கைக்கொண்டு அறிவைத் தந்திட வேண்டும். தீங்கிழைத்து விட்டு மீளும் வழி தெரியாமல் திண்டாடுபவர்களை மன்னித்து, இறைவனிடம் அவர்களை மன்னிக்கக் கோரிட வேண்டும். தவறுகளை கண்ட இடத்தில் அதை கண்டித்திட வேண்டும். தவறுகளை ஒருபோதும் அங்கீகரித்திடக் கூடாது. அடக்கி ஒடுக்க முயல்பவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நின்று போராடிட வேண்டும்.

இவைகளோடு ஒரு முஸ்லிம் – ஏனைய முஸ்லிம்கலின் நியாயமான உரிமைகளை மதித்திட வேண்டும். அவர் தனது உரிமைகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருவாரோ அதே அளவு முக்கியத்துவத்தை அடுத்தவர்களின் உரிமைக்கும் தந்திட வேண்டும். அவருடைய மனம் உருப்படியான திட்டங்களோடு அவற்றை நிறைவேற்றுவதில் உண்மையான முயற்சியை உடையதாகவும் இருந்திட வேண்டும். அவரது இதயம் அன்பாலும், அருளாலும் நிரம்பி நின்றிட வேண்டும். அவரது ஆன்மா அமைதி நிறைந்ததாக அமைந்திட வேண்டும்.

ஒரு முஸ்லிமின் ஒழுக்கக் கடமைகள் நேர்மை, கண்ணியம் இவற்ரின் இருப்பிடமாக இருந்திட வேண்டும். அவர் தனது கடமைகளை கனிவோடு நிறைவேற்றிட வேண்டும். செய்வேன் என வாக்களித்தவைகளை வகையாக நிறைவேற்றிட வேண்டும். அறிவும், நல்ல பண்புகளும் எங்கெங்கே கிடைத்திடுமோ அங்கெல்லாம் அதைத் தேடி பெற்றிட வேண்டும். தனது தவறுகளை திருத்திட அவர் தயங்கிடலாகாது. தனது பாவங்களுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிக்க வேண்டி மன்றாட வேண்டும். அவர் சமுதாயத்தில் மிகவும் பொறுப்பு மிக்கவராக இருந்திட வேண்டும். தன்னைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு தாராளமாகத் தந்திட வேண்டும். அத்துமீறல்களையும், வீண்விரயங்களையும் தவிர்த்திட வேண்டும். இயற்கையும், இந்த உலகமும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிக் களமாகும். அதை அகழ்ந்து இறைவனின் அற்புதங்களை கண்டெடுப்பதில் அவர் மூழ்கி கழித்திடுவார். இயற்கையின் இரகசியங்களைக் கண்டெடுத்து ஆண்டவனின் அற்புதங்களை அகிலத்தார் அறிந்திடத் தருவார். அவர் இயற்கையையும் இன்னும் இந்த உலகில் இருப்பவைகளையும் தானும் தான் சார்ந்த சமுதாயமும் பயன்பெற தந்திடுவார். ஆனால் அவர் இதிலும்கூட அளவுக்கு அதிகமான செலவீனங்களையும் வீண்விரயங்களையும் தவிர்த்திட வேண்டும்.

ஒரு முஸ்லிம் இறைவனின் பொறுப்புமிக்க பிரதிநிதியாவார். இறைவன் வழங்கியுள்ள வளங்களின் பாதுகாவலர் ஆவார். ஆகவே அவர் தன்னோடு இந்த உலக வளங்களில் பங்குதாரர் இன்னும் பலர் உண்டென்பதை உணர்ந்திட வேண்டும்.

இஸ்லாம் வழங்கும் ஒழுக்கக் கொள்கைகள் இருவகை எனலாம்.

முதல் வகை, அவசியம் செய்து முடித்திட வேண்டிய கடமைகளைக் கொண்டது.

இரண்டாவது வகை, செய்யாது தவிர்த்திட வேண்டியவைகளைக் கொண்டது.

இந்த இரண்டு வகைகளுமே மனிதனின் உயர்வுக்கு வழி வகுப்பனவே ஆகும். மனிதனின் மனதை ஆரோக்கியப் படுத்திடவும், அவனது மனதில் அமைதியை உருவாக்கிடவும், அவனிடத்தில் சிறந்த குணங்களை உறையச் செய்து அவனை ஒரு உயர்ந்த மனிதனாக ஆக்கிடவும், அவனது உடலை பலமுள்ளதாக உருவாக்கிடவும் இந்த இரண்டு வகை ஒழுக்க வழிகாட்டுதல்களும் உறுதுணையாய் நிற்கின்றன.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம், மனித இனத்தின் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியமான தேவைகள் என்பதில் ஐயமில்லை. இந்த தேவைகளை நிறைவு செய்வதில் மனிதனுக்கு உதவுவதற்காக பல்வேறு ஒழுக்க விதிகளை தந்துள்ளது இஸ்லாம். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1). இறைவன் ஒருவன் என்பதையும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் திருத்தூதர் என்பதையும் உள்ளத்தால் ஏற்று, நாவால் சாட்சி பகருதல். அதோடு அதற்கு செயல் வடிவம் கொடுப்பது.

2). தினமும் நிறைவேற்ற வேண்டிய தொழுகைகளை நிறைவாகவும், ஒழுங்காகவும் நிறைவேற்றுவது.

3). ‘ஜகாத்’ எனப்படும் ஏழை வரியை தருவதன் மூலம் அந்தக் கடமையையும் நிறைவேற்றுவது.

4). புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்.

5). வாழ்நாளில் ஒரு முறையாவது புனிதத் தலமான மக்காவுக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி வருதல்.

இவைகளைத் தவிர, இஸ்லாம் சிலவற்றை செய்யக்கூடாதென தடுத்திருக்கின்றது. சிலவற்றைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதன் அசுத்தங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தனது தரத்திலிருந்து தாழ்ந்து போவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பலவீனம், சோம்பல் இவற்றிலிருந்து தன்னை விடுவித்திடவும், அவன் அருவெறுக்கத்தக்க வகையில் ஆகிவிடுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிடவும் இஸ்லாம், உணவு பொழுதுபோக்கு இவைகளில் சில தடைகளை விதித்திருக்கின்றது.

இவைகளில் சில கீழே தரப்படுகின்றன.

1). எல்லாவிதமான போதைப் பொருள்களும், மதுபான வகைகளும் மனிதனுக்குத் தடுக்கப்பட்டவை. (திருமறையின் 2:219, 4:43, 5:93-94 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

2). பன்றியின் இறைச்சியும், பன்றியிலிருந்து பெறப்படும் ஏனைய பொருட்களும் (பன்றியின் கொழுப்பு போன்றவை) இரையைக் கொல்வதற்காக, நகம், பல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்ற விலங்குகள் (புலி, நரி, சிறுத்தை முதலியன) பிற பிராணிகளைக் கொன்று தின்னும் பறவைகள் (வல்லூறு, கழுகு, காக்கை போன்றவை) கொத்தித் தின்னும் பிராணிகள், ஊர்வன, புழு, செத்த பிராணிகள், மற்றும் முறைப்படி அறுக்கப்படாத பிராணிகள், பறவைகள். இன்னும் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள்.

எல்லாவிதமான இரத்தங்கள், இவைகள் யாவும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
(திருமறையில் 2:172-173, 5:4-6)

3). எல்லாவிதமான சூதாட்டங்களும் வீண் விளையாட்டுக்களும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

4). திருமணத்தால் அங்கீகரிக்கப்படாத உடல் உறவுகள், சிற்றின்ப ஆசையைத் தூண்டுகின்ற விதத்தில் பேசுவது, நடப்பது, பார்ப்பது, ஆடை அணிவது இவைகள் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டவையாகும். (திருமறையின் 23:5-7, 24:30-33, 70:29-31 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

மனிதனது ஆன்மீக உயர்வுக்காகவும், அறிவு சிறந்த வகையில் வளர்வதற்காகவும், அவன் சிறந்த ஒழுக்கங்களின் சின்னமாகத் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும், அவனது உலக வாழ்வின் வசதிகள் வளர வேண்டும் என்பதற்காகவுமே இறைவன் மேலே சொன்ன விதிகளை விதித்திருக்கின்றான்.

நல்ல பலன்களைத் தருகின்ற சிலவற்றை மனிதனுக்குக் கிடைக்காமல் செய்திட வேண்டும் என்பதற்காக அல்ல இறைவன் சில தடைகளை விதித்திருப்பது. மாறாக, மனிதன் ஒழுக்கத்தில் உயர்ந்திட வேண்டும். அவன் வாழ்க்கையை சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என்ற அக்கறையினால் தான் இறைவன் இந்தத் தடைகளை விதித்திருக்கின்றான்.

மனிதன் ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்கிடவும், அவன் பிறப்பின் இலட்சியத்தை அடைந்திடவும், இவ்வுலக வாழ்க்கையை சிறந்த முறையில் நடத்திடவும், அவனுடைய ஆன்மா, மனம், உள்ளம், உடல், உணர்ச்சிகள், ஆரோக்கியம், செல்வம் இவைகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, இங்கே தரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மனிதனின் வளர்ச்சியைத் தடுக்கமாட்டா. மாறாக, அவனது வளர்ச்சிக்கு உற்ற துணையாக அமையும். அவனது வளர்ச்சியை ஒடுக்குகின்றன இந்தத் தடைகள் என்பதல்ல, மாறாக ஒழுங்குப்படுத்தி ஒரே நிலையில் வைக்கின்றன என்று பொருள்.

இறைவன் விதித்திருக்கின்ற அத்தனைத் தடைகளும், இறைவன் நம் மீது கொண்டுள்ள கருணையின் பிரதிபலிப்பேயாகும். அது அவனது பூரண அறிவைப் பிரதிபலிப்பதாகவும் அமையும். இவைகளை உறுதிப்படுத்த இங்கே இரண்டு இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்துக் காட்டலாம்.

முதலாவதாக, நெருக்கடி நிலைகளில் அகப்பட்டுக் கொள்ளும்போது, சூழ்நிலைகளால் நிர்பந்திக்கப்படுகின்ற போது, தவிர்க்க முடியாத நேரங்களில் முஸ்லிம்கள் சாதாரண சூழ்நிலையில் தங்களுக்கு தடுக்கப்பட்டவைகளை கடைபிடிக்கத் தேவையில்லை. முஸ்லிம்கள் இந்த சூழ்நிலைகளில் இருக்கும்வரை அல்லது தங்களை இந்த சூழ்நிலைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும்வரை அவர்கள் இந்த ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறியமைக்காக குறை கூறிட முடியாது. (திருமறையின் 2:173, 5:4 ஆகிய திருவசனங்களைப் பார்க்கவும்.)

இரண்டாவதாக, தனது படைப்பினங்கள் மீது கருணைக் கொள்வதை இறைவன் தனக்கு ஒரு விதியாக ஆக்கிக் கொண்டுள்ளான். அறியாமையின் காரணமாக தீமையை செய்து விடுபவர்கள், பின்னர் அதை உணர்ந்து வருந்தி, தன்னைத் திருத்திக் கொண்டு, மன்னிப்புக்காக இறைவனிடம் மன்றாடுவாரேயானால், இறைவன் அவர்களை மன்னிக்கவே செய்கின்றான். நிச்சயமாக இறைவன் கருணை நிறைந்தவன். மன்னிப்பவன். (திருமறையின் 6:54 திருவசனத்தைப் பார்க்கவும்)

சீரிய ஒழுக்கத்திற்கான வழிகாட்டுதல்களை திருமறையின் ஒரு பகுதி தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

’ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (நபியே!) நீர் கேட்பீராக “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்; “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம். “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்,பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.  (திருக்குர்ஆன்: 7:31-33)

இறைவன் மீது தாம் வைக்கின்ற நம்பிக்கை, ஆன்மீக அனுஷ்டானங்கள், சமுதாயத்தில் நாம் நடந்து கொள்ளும்முறை, முடிவுகளை எடுக்கும் முறை, அறிவைத் தேடுவதில் மேற்கொள்ளும் முயற்சிகள், உணவுகளை, பானங்களை உட்கொள்ளும் முறை, பேசும் முறை, இன்னும் வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் தழுவி நிற்பதாகும். இஸ்லாம் கூறும் ஒழுக்க நெறிகள் அந்த அளவிற்கு விசாலமானவை.

ஒழுக்க நெறிகள் இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருப்பதால் தான், திருமறையின் திருவசனங்கள் அனைத்திலும் ஒழுக்க நெறிகளின் தொனி ஊடுருவி நிற்கின்றது. திருமறை முழுவதும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்க நெறிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. ஆகையினால் தான் திருமறையின் வசனங்களைக் குறிப்பிட்டு அவைகளின் கீழ் இஸ்லாத்தின் ஒழுக்க போதனைகளை வகைப்படுத்துகின்ற ஒரு முறையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கின்றது.

ஒவ்வொரு ஒழுக்க விதியும் பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில ஒழுக்க விதிகள் ஒரு தனி விதியாக (திருமறையில்) இடம் பெறுகின்றது. அல்லது இதே ஒழுக்க விதி மொத்த ஒழுக்க விதிகளின் ஒரு பகுதியாகவும் இடம் பெற்றுள்ளது. இவைகளெல்லாம் இணைந்து ஒரு முழுமையான உயர்வான மதநெறியைத் தருகின்றன.

ஆகவே பின்னால் தரப்பட்டுள்ள திருமறையின் வசனங்கள் ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்டவைகள் என்றே கொள்ள வேண்டும். இது மூலநூலின் பூரண நிலையைப் பெற்றிருக்கின்றது எனக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப்பகுதிகள் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டவைகளேயாகும்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. அத்தகையோர் உலோபத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?) (திருக்குர்ஆன்: 4:36-38)

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள். அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள். நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான். அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். (திருக்குர்ஆன்: 16:90-91)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையாக வாழச் செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (திருக்குர்ஆன்: 16:97)

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (திருக்குர்ஆன்: 16:125)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (திருக்குர்ஆன்: 41:33-34)

(இம்மையில்) உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும். ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். அன்றியும், அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது – இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன்: 42:43)

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம். பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.

இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம். உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.

(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது, மேன்மையிலும் மிகப் பெரியதாகும்.

அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம். (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.

(அல்லாஹ்வாகிய) அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான். நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால், (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர். அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர். அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான். (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் – நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம். ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது. நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.

அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள். நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.

மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள். (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.  

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

இவையனைத்தின் தீமையும், உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.

இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர். (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். (திருக்குர்ஆன்: 17:18-39)

இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும். ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான். இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) – நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தருந்தும்) தேவையில்லாதவன்! புகழப்படுபவன்”

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள். (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும், அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன். (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக! நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள். உன் குரலையும் தாழ்த்திக் கொள். குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும். (திருக்குர்ஆன்: 31:12 முதல் 19 வரை)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக்குர்ஆன்: 5:90-91)

(சில திருக்குர்ஆன் மொழியாக்கங்களில் இவைகள் 93, 94 வசனங்களாக வருகின்றன.)

“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள். எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே. நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்). (திருக்குர்ஆன்: 28:77)

நாம் மேலே எடுத்துத்தந்துள்ள திருக்குர்ஆன் வசனங்களைப்போல் இன்னும் நிறைய இறை வசனங்களை நாம் எடுத்துத் தந்திட முடியும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும், வாக்குகளிலிருந்தும் அனேக மேற்கோள்களை எடுத்துத் தந்திட முடியும். இஸ்லாத்தின் அடிப்படை ஒழுக்க நெறிகளை எடுத்துச் சொல்ல நான் மேலே தொகுத்து தந்துள்ளவைகளே போதுமானதாகும். இயல்பில் இந்த இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் எல்லாம் ஒன்று போலவே இருக்கும். சூழ்நிலைகளின் மாற்றங்களால் இந்த ஒழுக்க நெறிகள் மாறுவதில்லை. இவைகளெல்லாம் இறைவன் நாம் சில நேரங்களில் போற்றிப் பாராட்டி விட்டு மறந்து விடுவதற்காகத் தரவில்லை. மாறாக, இவைகள் நாம் நமது நித்திய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் காட்டிட வேண்டியவைகளாகும். தனி மனிதன் தனது தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும், அவன் தனது பண்புகளை பண்படுத்திடவும், அது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லா நற்குணங்களினதும் நாயகமாக இலங்கும் இறைவனை நெருங்கிடவும், இறைவனுக்கும் தனக்குமுள்ள பிணைப்பை வலுப்படுத்திடவும் மனிதன் இந்த சீரிய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தொழுகலாம்.

இஸ்லாம் வழங்கும் ஒழுக்க நெறிகள், மனிதனை செயலிழந்தவனாகவும், பிரச்சனைகளை பாராமுகமாக இருப்பவனாகவும் ஆக்கிடுபவைகளல்ல. அல்லது அவனை அச்சமூட்டி கோழையாக மாற்றிடுவதற்காக வந்தவைகளுமல்ல.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கிடலாம்.

முஸ்லிம் ஒருவருக்கு ஏதேனும் அநீதிகள் இழைக்கப்பட்டால் அவர் அதை எதிர்த்துப் போராடலாம். தனக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்யப்படும்வரை இந்தப் போராட்டத்தை தொடரலாம். அல்லது தீங்கிழைத்தவரை மன்னித்து, இறைவனின் அருளை வேண்டி நிற்கலாம். இவை இரண்டிற்குமே அவனுக்கு பூரண சுதந்திரம் உண்டு. ஒரு முஸ்லிம் மேலே சொன்னவற்றில் எதை வேண்டுமானாலும் செய்கின்ற சுதந்திரம் தனக்கு உண்டு என்பதை நன்றாக அறிவார். அதே நேரத்தில், அந்த முஸ்லிம், தனக்கு தீங்கிழைத்தவரை மன்னித்து, இறை உவப்பைப் பெறுவதே சிறந்தது என்பதை நன்றாக அறிவார். ஆகவே அவர் மன்னிப்பாரேயானால் அவர் அதை இறைவனின் திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கின்றார். ஆனால் அவர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு பதிலடி தந்தால் அவர் இறைவனின் சட்டத்தை மீறியவராக மாட்டார். அநீதி இழைத்தவராகவும் ஆகமாட்டார். அவர் தனது உரிமைகளை பாதுகாத்தவரேயாவார். அவரது உரிமைகளை பாதுகாப்பது அவரின் புனிதமான கடமையேயாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் ஆட்சியாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில் உதவி செய்கின்றார் என்றே பொருள்.

சில கொள்கைகள் சொல்வதைப்போல், இஸ்லாமும் உங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள் என்று சொல்லுமேயானால், இதை சாக்காகக் கொண்டு சிலர் எல்லா வரையறைகளையும் கட்ந்து தீங்கிழைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுபோலவே இஸ்லாம் உங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் அனைத்திற்கும் பதிலடி கொடுங்கள், பழி வாங்குங்கள் என்று மட்டும் போதித்திடுமேயானால் அங்கு இரக்கம், மன்னிக்கும் மாண்பு என்ற உயர்ந்த ஆன்மீக நிலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். பழி வாங்குங்கள் என்பதையே இஸ்லாம் பாடமாக போதித்திருக்குமேயானால், மனிதன் தன்னிடம் இருக்கும் சில உயர்ந்த பண்புகளை இழக்கவே நேரிடும். அவனிடமிருக்கும் பல ஒழுக்க சக்திகள் பயன்படாமல் போய்விடும்.

எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் கொடியவர்களை மன்னித்து விடுங்கள் என்று போதிக்கப்பட்டவர்கள், பல நேரங்களில், பல சூல்நிலைகலில் தாங்கள் பெற்ற போதனையை செயல்படுத்த முடிவதில்லை. செயல்படுத்த முடியவும் செய்யாது. இது நாம் நமது நித்திய வாழ்வில் சந்திக்கும் உண்மை. இதற்கான காரணம் இது மனித இயல்புக்கு எதிரானது. இது மனித நலத்திற்காக இயற்றப்பட்ட விதியுமல்ல. இது மனிதனின் ஒழுக்க உயர்வுக்கு வழி வகுப்பதுமில்லை. சில காலிகள் செழித்து வளரவே இது வகை செய்யும்.

இதுபோலவே, எல்லா சூழ்நிலைகளிலும், எல்லோரையும் பழி வாங்குங்கள், பதிலடி தாருங்கள் என்ரு மனிதர்களுக்கு போதிப்பதும் முறையல்ல. இதுவும் மனித நலத்தை பாதுகாப்பதாகாது. இன்னும் இது உலக அமைதிக்கு பங்க விளைவிப்பதாகும். ஆனால் இஸ்லாம் (மனிதனின் இயல்பை நன்றாக உணர்ந்த மார்க்கம்) மட்டுமே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தேவையான உயர்ந்த மிகவும் சரியான பரிகாரங்களைத் தந்துள்ளது.

தெரியாமல் தவறுகளை செய்து விட்டு அங்கலாய்த்து, இன்னொரு முறை இப்படி நடந்து விடக்கூடாதே என ஏங்கி நிற்பவர்களுக்கு, ஒரு முறை மன்னித்து விட்டு விட்டால் திருந்தி விடுபவர்களுக்கு, அந்த மன்னிப்பால் பண்படுபவர்களுக்கு இஸ்லாம் மன்னிப்பை வழங்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றது.

மன்னிப்பதை, மன்னிப்பவரின் பலவீனம் என எண்ணுபவர்களை, மன்னிப்பதன் மாண்பை உணர்ந்துகொள்ள மறுப்பவர்களுக்கு, எத்தனை தடவை நாம் தவறிழைத்தாலும் நமக்கு எந்தத் தீங்கும் இழைக்கப்படாது என்ர எண்ணத்தோடு செயல்படுபவர்களுக்கு இஸ்லாம் பழிவாங்குவதையும், பதிலடி தருவதையும் பரிகாரமாகத் தருகின்றது.

ஆகவே ஒரு முஸ்லைம் தீங்கிழைத்தவரை மன்னித்தாலும் அல்லது பழிவாங்கினாலும் அவரது போக்கு பலமானதாகும். பலன் தருவதாகும்.

அவர் மன்னிக்கும்போது இறைவனின் உவப்பைப் பெறுகிறார். தன் பக்கத்தைப் பலப்படுத்திக் கொள்கின்றார். அத்துடன் தவறு செய்தவர் வருந்தி தன்னைத் திருத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பினையும் வழங்குகின்றார்.

அவர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு பதிலடி தருகிறார் என்றால் அவர் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்கின்றார். சமுதாயத்தில் நீதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுகின்றார். அத்துடன் தீமைகளும், தீயவைகளும் பரவி விடுவதைத் தடுத்து நிறுத்துகின்றார்.

இப்போது நல்ல சீரிய ஒழுக்க நிலை என்பது எது?

எதற்கெடுத்தாலும் பழிவாங்குவதை பழக்கமாகக் கொள்வதா? வருந்தவோ அல்லது திருந்துவதற்கோ விடாமல் பதிலடி தருவதா? அல்லது வருந்துபவர்களையும், திருந்துபவர்களையும் மன்னித்து விட்டு, அத்துமீறுபவர்களையும், அநீதியையே பிழைப்பாகக் கொண்டவர்களையும் பழிவாங்குகின்ற நிலையா?

இவை இரண்டிலும் சிறந்தது இரண்டாவதாகச் சொல்லப்பட்ட இஸ்லாமிய ஒழுக்க நியதியே!

பழிவாங்குவதற்கு அனுமதிக்கப்படாதவர்கள் மன்னித்துத்தானே ஆகவேண்டும். ஆதலால் தீங்கிழைப்பவர்களை மன்னிக்கின்றவன் அப்படி செய்வதற்கு காரணம், அவன் பழிவாங்க அனுமதிக்கப்படவில்லை. இவர் தரும் மன்னிப்பை எப்படி உண்மையான, அவரது மன உந்துதலால் அருளப்பட்ட மன்னிப்பு எனக் கொள்வது?

ஆனால் ஒரு முஸ்லிம் பழிவாங்கிட ஆண்டவனின் அனுமதி இருந்தும், (இறைவனின் உவப்பை நாம் பெறலாம் என நம்பியே) மன்னிப்பை வழங்குகின்றார். அவர் தரும் மன்னிப்பு மனமுவந்து தவறிழைத்தவர் திருந்திடுவதற்காகத் தரப்படுவதேயாகும்.

இவைகளில் எது உண்மையான மன்னிப்பு என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

வேறுவிதமாக செயல்படுவதற்கு வழியில்லாமல், வகை இல்லாமல் தரப்படும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பா?

பழிவாங்கவும், பதிலடி தரவும் வழியிருந்தும், பலமிருந்தும், அனுமதியிருந்தும் மன்னிப்பு வழங்குகின்றாரே அவர் தரும் மன்னிப்பு, உண்மையான மன்னிப்பு!

இஸ்லாம் வழங்கும் ஒழுக்க நெறிகளே, நடைமுறைக்கு ஒத்துவருவதாகும். அவைகளே பலமானவைகளாகும். அவைகளே பலன் பயப்பவையாகும். ஏனெனில் அவைகள் நன்மைகளின் இருப்பிடமாகிய இறைவனின் வழிகாட்டுதல்களாகும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.