முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார்.

இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இந்தப் பயணத்தின் மத்தியில் இருவரும் தங்களுக்குள் நேசம் கொண்டவர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு உள்ளவர்களாகவும், உதவி ஒத்தாசை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இந்தத் திருமண ஒப்பந்தத்தின் வாயிலாக, ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும் பெறுகிறார். ஒருவர் மற்றவரது தோழமையில் வாழ்வின் சுபிட்சத்தையும், சுவையையும், பாதுகாப்பையும், மனமகிழ்ச்சியையும், திருப்தி உணர்வையும் அடைந்து கொள்கிறார்.

அல்லாஹ்வின் சங்கைமிகு நூலாம் அல்குர்ஆன், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற இந்த சட்டரீதியான ஒப்பந்தத்தை அழகிய முறையில் விளக்கிச் சொல்கிறது.

அன்பு, பாசம், நெருக்கம், உறுதி, புரிந்துணர்வு, இரக்கம் ஆகிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் பரந்து காணப்படுகின்றன. இதனால்தான் இந்தத் திருமணத்திலே நற்பாக்கியம், ஈடேற்றம், வாழ்க்கையில் வெற்றி போன்ற நறுமணங்கள் வீசுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

இந்தத் திருமண ஒப்பந்தம், மிக உறுதி மிக்க அடிப்படையில் கண்ணியமிக்க இறைவனால் ஏற்படுத்தப்படுகிற ஒப்பந்தமாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்மையை நாடிக் கொள்வதற்காக இதில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களுக்கிடையே இறையச்சம் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தை நிர்மாணிக்கிறார்கள். இங்குதான் இஸ்லாமியக் குழந்தை வளர்கிறது. அதன் அறிவு வளர்கிறது. அதன் ஆன்மா, இஸ்லாமியப் பண்பாட்டிலே வார்த்தெடுக்கப்படுகிறது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், இஸ்லாமியச் சமூகத்தைக் கட்டி எழுப்புவதில் ஒரு முஸ்லிம் குடும்பம் உறுதிமிக்க செங்கல்லைப் போன்றதாகும்.

அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் இறையச்சம் உள்ளவர்களாகவும், நன்மையில் ஒருவருக்கொருவர் உதவக்கூடியவர்களாகவும், ஆக்கப்பூர்வமான காரியங்களை நிகழ்த்தக் கூடியவர்களாகவும், நன்மையான விஷயங்களுக்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.

இறையச்சமுள்ள நல்ல பெண்ணே, ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு அடிப்படைத் தூணாக விளங்குகிறாள். குடும்பத்தின் உறுதிமிக்க அடித்தளமாக இருக்கிறாள்.

ஆணின் வாழ்க்கையிலே பெண்தான் இன்பத்தை வழங்க முடியும். உண்மையில், பெண்ணால் மட்டுமே ஓர் ஆணுக்குச் சிறந்த இன்பத்தை வழங்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”உலகம் அனைத்தும் ஒரு செல்வம். அந்தச் செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம், நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணாவாள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்! ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்குகிற அருட்கொடைகளிலேயே ஒரு பெரியஅருட்கொடை, நல்ல பெண் அமைவது. வாழ்க்கையில் ஏற்படுகிற சிரமங்களையும், கஷ்டங்களையும், துக்கங்களையும் அந்தப் பெண்ணின் மூலமாக அவன் நிவர்த்தி செய்து நிம்மதி அடைகிறான்.

தனது அன்பு மனைவியின் மூலமாக அந்த ஆண் அடைகிற ஆறுதலுக்கும், ஆதரவுக்கும் இந்த உலகிலுள்ள எந்தச் செல்வமும் ஈடாகாது. ஒரு பெண் தன் கணவனுக்கு எப்படியெல்லாம் சிறந்த செல்வமாக இருக்க முடியும், எந்த முறையில் வாழ்க்கையை நடத்தினால் சிறந்த மனைவியாக அமைய முடியும், பெண்மையைப் பாதுகாத்துக் கொள்வதுடன் மற்றவர்களின் மத்தியில் எவ்வாறெல்லாம் கண்ணியத்தையும் உயர்வையும் பெற முடியும் போன்ற ஆகிய கேள்விகளுக்கு இனி வரும் பகுதிகளில் விளக்கம் அறிய இருக்கிறோம்.

கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தித்துக் கொள்வாள்.

இஸ்லாம், பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும், சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குவது, ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து, அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம், தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.

தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.

வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம், தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ, உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.

சில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க, தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.

கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ”என்னை, எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால், நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான், நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ”உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்!” என்றார்கள். நானோ, ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதாக மறுத்து விட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ”அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான், ”அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

”தந்தையின் செயலை ஏற்றுக்கொள்! பொருந்திக் கொள்!” என்று உபதேசித்தார்கள். ஆம்! இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும், நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன், ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை’ அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி, அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இஸ்லாம், பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்க விரும்பவில்லை தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையும் விரும்பவில்லை. காரணம், திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும், தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும், இயற்கைப் பண்பாடுகளிலும், தோழமையிலும், நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.

இப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்… கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்… தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும், வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்… கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்… கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண், தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் மனைவி நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதரியாவார்.) ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.

அதாவது, நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை, தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது, நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால், எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி, ”நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவரைத் தலாக் சொல்லிவிடு!” என்று கூறி விட்டார்கள்.

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது, ”அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும், அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாம், பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ, வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.

பரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்து விட்டான்.

பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால், நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள், பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள். விடுதலை செய்து விட்டார்கள்.

தான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா, இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில், தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே, தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ் ”பரீராவே! என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்!” என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:

”பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா, தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம், ”அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா, முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

மேலும், முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து, ”முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக் கொள்ளலாமல்லவா?” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா, ”அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”இல்லை இல்லை! நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, ”(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை!” என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக, ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில், மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.

இன்னும், உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம், தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம், கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி, தன் கணவரை வெறுக்கும் மனைவி!

இங்கு நபி (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம், ”பரீராவே! முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா? அவர் உனக்குக் கணவராக, உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தாரில்லையா?” என்று சிபாரிசு செய்தது மட்டுமே!

இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன், ”அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? அல்லது சிபாரிசா? – கட்டளை என்றால், இதோ… உடனே கட்டுப்படுகிறேன்” என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும், நபியவர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்தவுடன் தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.

தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து, அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள், நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான, நிரந்தரமான, அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண், தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ, கவர்ச்சியைக் கொண்டோ, உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ, செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. அதே மாதிரி, பொதுவாக பெண்கள் ஆசைப்படக் கூடிய விஷயங்களை வைத்தும்கூட, ஒரு நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண் கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது.

மாறாக, தான் தேர்ந்தெடுக்கப் போகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ஆண், பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.

”எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால், அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால், சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)

எப்படி ஒரு முஸ்லிமான ஆண், ‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே’ என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ, அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.

நல்ல ஒழுக்கமுள்ள, திறந்த சிந்தனை உள்ள, தூய்மையான பண்புள்ள, கற்பைப் பேணும் நடத்தையுள்ள, அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.

நம்பிக்கையுள்ள, தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு, ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற, வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு, அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:

”கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும் பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான) வர்கள்தாம், குற்றம் குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு கண்ணியமான முறையில் உணவும் உண்டு. (அன்னூர் 24:26)

இங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது, தான் தேர்ந்தெடுக்கிற ஆண், சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம், வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி, உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

ஒரு முன்மாதியான முஸ்லிம் பெண்மணி, தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன், தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்.

அல்லாஹ் கூறுகிறான்:

”ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். காரணம், அவர்களில் (ஆண்கள், பெண்களில்) சிலரை (ஆண்களை) சிலரைவிட (பெண்களைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். மேலும் ஆண்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்கின்றனர். (அன்னிஸா 4:34)

எனவே, ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால், அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும். அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும். ‘இவனைப் போய், மணமுடித்துக் கொண்டோமே!’ என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகி விடக்கூடாது.

கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில், இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.

கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும். முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும். தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும், அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும், சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ, குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.

ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில், அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே, இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.

இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்’ (‘அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது….

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)

ஆகவே, வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும், சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே!

எத்தனையோ மகத்துவமிக்க முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை, உண்மையில் பாராட்டுக்குரியது.

இத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாரிப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.

உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில் ‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)

உம்மு ஸுலைம் (ரழி), இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே, உம்மு ஸுலைமை வெறுத்து விலகி விட்டார்.

தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக, இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.

சில காலங்கள் கழிந்தன. மாலிக், இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு, பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.

கணவரை இழந்த உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில், மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான் ‘அபூதல்ஹா’.

அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும், மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால், அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால், உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ, அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.

உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: ”ஓ… அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”.

இதற்கு அபூதல்ஹா, ”ஆம் அப்படித்தான்!” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி), ”அபூதல்ஹாவே! என்ன, உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு, ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?” என்று அறிவுரை கூறினார்.

இதைக் கேட்டு அபூதல்ஹா, சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசையூட்டும் விதமாக, ”உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன். பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ”இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார்.

மேலும் கூறினார்: ”அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால், நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று, நம்பிக்கை கொண்டால், அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)

திரும்பிச் சென்ற அபூதல்ஹா, மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து, முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறி ஆசையூட்டினார்.

இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி), அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:

”அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர். அதற்கு தீ மூட்டினால், எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?”

இந்த ஞானமிக்க பேச்சு, அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே, ”என்ன… கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால், அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல், ”நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும், சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி, ”அனஸே! எழு தயாராகு. உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!” என்று கூறினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள், சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!

தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ”அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன். அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லி விட்டார்கள்.

அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு, தமக்குப் பொருத்தமான, நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை, நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்…?

”உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது, உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)

இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பாள் அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வாள்

ஒரு நல்ல அறிவுள்ள முஸ்லிமான பெண்மணி பாவமற்ற விஷயத்தில் தனது கணவருக்குக் கீழ்ப்படிந்தே நடப்பாள்.

தன் கணவருக்கு நல்ல முறையில் பணிவிடைகள் புரிவாள். அவரது திருப்தியைத் தேடுவதில் பேராசை கொண்டவளாக இருப்பாள். அவருக்கு மகிழ்ச்சி ஊட்டுவதில் ஆர்வம் உள்ளவளாக இருப்பாள்.

அந்தக் கணவர் ஏழையாக, வறுமையில் வாடுபவராக இருந்தாலும், ‘உன்னிடம் செல்வம் இல்லையே; வாழ்க்கை வசதிகள் இல்லாமல் இருக்கிறதே!’ என்பதாகச் சடைந்து கொள்ள மாட்டாள். வீட்டு வேலைகள் செய்வதில் குறை வைக்க மாட்டாள். மேலும், இஸ்லாமிய வரலாற்றின் மிகச் சிறந்த பெண்களையெல்லாம் நினைத்துப் பார்த்து, அவர்களது பொறுமையையும் உபகாரப் பண்பையும் கணவருக்குப் பணிவிடை புரிந்து வீட்டைப் பேணிய கடமையுணர்வையும் பின்பற்ற விரும்புவாள்.

தங்கள் கணவருக்குப் பணிந்து நடப்பதிலும் வீட்டு வேலைகளை ஒழுங்குறச் செய்வதிலும் அந்த மிகச் சிறந்த பெண்களுக்கு அவர்களின் வறுமையும் சிரமங்களும் நெருக்கடிகளும் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இதற்குச் சரியான முன்னுதாரணமாக நமது தலைவி ஃபாத்திமா (ரழி) அவர்கள் திகழ்கிறார்கள்.

இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களின் மகளாகவும் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் மனைவியாகவும் ஃபாத்திமா (ரழி) இருந்தார்கள். வீட்டில் மாவரைக்கத் திருகை சுற்றியதால் அவர்களின் கைகளில் காய்ப்பு உண்டாகி வடுக்கள் விழுந்திருந்தன. எனினும், ஃபாத்திமா (ரழி) அவற்றைச் சிரமத்துடன் சகித்து வந்தார்கள்.

இதைக் கண்ட அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள், ”ஃபாத்திமாவே! உனது தந்தையிடம் சில கைதிகள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். அங்கு சென்று உனக்கு வசதியாக ஓர் அடிமைப் பெண்ணை, நீ பெற்று வரலாமே?” என்று யோசனை கூறினார்கள்.

ஃபாத்திமா (ரழி) அவர்கள் அதற்காகச் சென்றபோது அவர்களின் வெட்க உணர்வு, தம் தந்தையிடம் தமது தேவையைக் கேட்பதை விட்டும் அவர்களைத் தடுத்து விட்டது. எனவே, கேட்காமலேயே திரும்பி விட்டார்கள்.

இதனால் அலீ (ரழி) அவர்களே சென்று, ”நபியின் பிரியத்திற்குரிய மகளான ஃபாத்திமாவுக்கு, உதவி ஒத்தாசை புரிய ஒரு பணியாளர் தேவை” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே தமக்கு விருப்பமான தமது மகள் ஃபாத்திமாவுக்கு ஒரு பணியாளரை வழங்கிவிட்டு, முஸ்லிம்களில் மிக வறுமையில் சிக்கியிருப்பவர்களுக்கு இல்லாமல் ஆக்கிவிடுவதை விரும்பவில்லை. எனவே, தமது மகள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு வந்து அவரையும் அலீ (ரழி) அவர்களையும் நோக்கி, ”நீங்கள் விரும்பியதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்றார்கள். பிறகு சொன்னார்கள்:

”நீங்கள் தூங்குவதற்காக படுக்கைக்குச் சென்றவுடன், 33 தடவை அல்லாஹ்வை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று துதியுங்கள் 33 தடவை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று புகழுங்கள் 34 தடவை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெயரிவன்) என்று பெருமைப்படுத்துங்கள். இது உங்களுக்கு ஓர் அடிமைப் பணியாளர் கிடைப்பதை விடச் சிறந்தது.”

இவ்வாறு கூறி, அந்த இருவர் மனதிலும் இறைவனது உதவியின் மீதுள்ள நம்பிக்கையை விதைத்துவிட்டுச் சென்றார்கள். எப்படிப்பட்ட உதவியை அது செய்ததென்றால், அதனால் மனத்தின் கவலைகளும் உடல் சோர்வுகளும் விலகி மறைந்தன.

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

”என்றைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இந்த துதிச் சொற்களைக் கற்றுக் கொடுத்தார்களோ, அன்று முதல் இன்று வரையிலும் நான் அதை அப்படியே அமல் செய்து வருகிறேன்”.

இந்தக் கூற்றைக் கேட்ட அலீயின் தோழர்கள் சிலர், ”நீங்கள் ஸிஃப்ஃபீன் போர்களிலே கடுமையாக ஈடுபட்டிருந்த அந்த இரவுகளிலுமா?” என்று கேட்டார்கள். உடனே அலீ (ரழி) அவர்கள், ”ஆம்! அந்த ஸிஃப்ஃபீன் இரவுகளிலும் நான் அதை விட்டு விடவில்லை” என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

கணவருக்குப் பணிவிடை புரிவதில் இன்னொரு முன்னுதாரணத்தையும் இங்கு நாம் சொல்லலாம்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளார் அஸ்மா (ரழி) அவர்கள் தம் கணவர் ஜுபைர் (ரழி) அவர்களுக்குப் பணிவிடை புரிந்தார்கள். அவரது வீட்டை நல்ல முறையில் பராமரித்து வந்தார்கள்.

ஜுபைர் (ரழி) அவர்களுக்கு ஒரு குதிரை இருந்தது. அந்தக் குதிரைக்கு நீர் புகட்டுவதையும் தீனி போடுவதையும் குளிப்பாட்டுவதையும் அஸ்மா (ரழி) அவர்களே செய்வார்கள். மேலும், அந்தக் குதிரைக்காக தானியங்களையும் பேரீச்ச மர வித்துகளையும் தூரமான இடங்களுக்குச் சென்று, சேகரித்து வருவார்கள்.

அஸ்மா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

”என்னை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் செல்வங்களும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அவர் குதிரைக்கு நானே தீனி போடுவேன் தண்ணீர் இறைப்பேன் அவரது தோல் துருத்தியைத் தைப்பேன் மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் பக்கத்து வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் மிக நல்லவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது சுமந்து வருவேன். அந்த நிலம், இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளைச் சுமந்து வந்து கொண்டிந்தேன். (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ”இஃக் இஃக்” என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன்.

மேலும், நான் (என் கணவர்) ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நான் (என் கணவர்) ஜுபைரிடம் ”(வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக் கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தையும் நான் அறிந்துள்ளேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்றார்.

(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரழி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை(ப் பெண்) குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ அது எனக்கு ஒரு பெரிய விடுதலை கிடைத்தது போல் இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய மிக முக்கியப் படிப்பினை என்னவென்றால், ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி தனது கணவருக்குப் பணிவிடை புரிவதிலும், அவரது வீட்டைப் பராமரிப்பதிலும் அதிக அக்கறையுள்ளவளாக இருப்பாள். தனது கடமையை நன்கு அறிந்திருப்பாள். உண்மையில், கணவருக்குப் புரிய வேண்டிய பணிவிடைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, சிந்தியுங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”எந்த மனிதனுக்கும் எந்த மனிதனும் சிரம் தாழ்த்தி மரியாதை செய்வதற்கு அனுமதியில்லை அப்படி ஒருவர் மற்றவருக்குச் சிரம் பணிவது அனுமதிக்கப் பட்டதாக இருப்பின், நான் பெண்ணை அவள் தமது கணவருக்குச் சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன் ஏனெனில், கணவருக்குப் பணிவிடை செய்வது அவ்வளவு மகத்துவமானதாக இருக்கிறது.” இன்னும், சொன்னார்கள்:

”ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் சிரம் பணிய நான் கட்டளை இடுவதாக இருந்தால், கணவருக்கு மனைவி சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.” (ஜாமிவுத் திர்மிதி)

ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! பெண்ணின் மீது மிக மகத்தான உரிமை உள்ளவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அவளது கணவர்” என்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள், ”ஆணின் மீது மிக மகத்தான உரிமையுள்ளவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”அவனது தாய்” என்றார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவையை முன்னிட்டு வந்தார்கள். அவர் தம் தேவையைக் கூறி முடித்த பின், நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உனக்குக் கணவர் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ‘ஆம்! இருக்கின்றார்’ என்றார்.

நீ அவரிடம் எப்படி நடந்து கொள்கிறாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அதற்கு அந்தப் பெண், ‘நான் அவருக்குப் பணிவிடை செய்வதிலே, என்னால் முடிந்தளவு எக்குறையும் வைப்பது கிடையாது’ என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உபதேசித்தார்கள்: ”நீ அந்தக் கணவரிடம் எந்தத் தகுதியில், தரத்தில் இருக்கிறாய் என்பதைச் சரிபார்த்துச் சிந்தித்துக் கொள்! ஏனென்றால், கணவர்தான் உனக்குச் சொர்க்கமாக இருப்பார் அல்லது நரகமாக இருப்பார்”. (முஸ்னது அஹ்மது, ஸுனனுன் நஸாம்)

ஒரு முஸ்லிமானப் பெண்மணி நபியவர்களின் இந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கேட்ட பின்பும், தன் கணவருக்கும் அவரது வீட்டுக்கும் பணிவிடை புரிவதிலிருந்து தன்னை தூரமாக்கிக் கொள்வாளா? நிச்சயமாக தூரமாக்கிக் கொள்ள மாட்டாள். தன் கணவர் மீது தனக்குள்ள பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து செயல்படுவாள் கவனித்துக் கொள்வாள்.

மேலும், மலர்ந்த முகத்துடன் தன் கணவரை அணுகி ஆதரவு தருவாள். வீட்டு வேலைகளைச் செய்வதைக் கொண்டு மனமகிழ்ச்சி அடைவாள். அதை ஒரு பெரியசுமையாகவோ, சிரமமாகவோ கருதமாட்டாள். தன் வீட்டுக்குத்தான் வேலை செய்கிறோம் என்ற எண்ணத்துடனும், அல்லாஹ்விடம் அதற்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம் என்ற உறுதியுடனும் தன் கடமைகளைச் செய்து முடிப்பாள்.

நபித்தோழர்களும் மனத்தூய்மையில் அவர்களைப் பின்பற்றியவர்களும் இந்த விளக்கத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கற்று வைத்திருந்தார்கள். தங்கள் பெண் பிள்ளைகளை மணமுடித்துக் கொடுக்கும் போது, கணவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும், அனுசரித்து நடக்குமாறும் அவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். எனவேதான், அந்த முஸ்லிம் பெண்மக்கள் நல்லதோர் இல்லறத்தை நடத்தி வந்தார்கள். கணவரைச் சரியான முறையில் பராமரித்து வந்தார்கள். கணவரிடம் அழகிய முறையில் நடந்து கொண்டு, இனிய மனைவியராகத் திகழ்ந்தார்கள். இந்தப் பண்பாடெல்லாம் அவர்களிடம் இயற்கைப் பழக்கங்களாக காலங்காலமாகத் தொடர்ந்தது.

ஒரு நல்ல அறிவுள்ள முஸ்லிம் பெண், தன் கணவருக்கு நற்குணங்களைக் கடைப்பிடிப்பதில் உதவி புரிபவளாக இருப்பாள். தன்னுடைய புத்திக் கூர்மையாலும், நுண்ணறிவாலும் கணவன் நற்குணங்களுக்கு மெருகூட்டக் கூடியவளாக இருப்பாள். காரணம், அப்படி நடந்து கொள்வது அல்லாஹ் தனக்கு இட்ட கட்டளை என்று புரிந்து வைத்திருப்பாள். இதுதான் மார்க்கம் என்றும் விளங்கி வைத்திருப்பாள். நாளை விசாரணை நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்றும், நல்ல முறையில் நடந்தால் நற்கூலி பெறுவோம், மாறு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்றும் நம்பியிருப்பாள்.

இறையச்சமிக்க நல்ல பெண்கள், எப்படி கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனில், கணவன் நல்ல குணங்களுக்கு ஆதரவளித்து அந்தக் குணங்களுடன் ஒத்துப்போக வேண்டும். இவ்வாறு ஒத்துப்போகும் போதுதான் குடும்ப வாழ்க்கையின் சுவையை உணர முடியும். உதாரணமாக, பழக்க வழக்கங்கள், சந்திப்புகள், சாப்பிடுவது, ஆடை அணிவது, பேசுவது மட்டுமின்றி அன்றாடத் தேவைகள் அனைத்திலும் கணவன் விருப்பத்திற்கு ஒத்தவளாக இருக்க வேண்டும். அவரது விருப்பத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு தூரம் இந்த விஷயத்தில் ஒரு பெண் அக்கறை காட்டி அதற்கேற்ப நடந்து கொள்வாளோ, அவ்வளவு தூரம் அவளது குடும்பத்தில் ஈடேற்றம், சுபிட்சம், மகிழ்ச்சி, அமைதி ஆகியன நிலவும். மேலும், இஸ்லாம் போதிக்கக்கூடிய உயிரோட்டமுள்ள மணவாழ்க்கைக்கு இதுவே நெருக்கமாகவும் இருக்க முடியும்.

மார்க்கத்தை அறிந்து உணர்ந்து கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி ”தனது கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது, தன்னைச் சொர்க்கத்தில் சேர்த்து வைக்கக்கூடிய நல்ல அமல் – நற்செயல் என்பதை” ஒருக்காலும் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”ஒரு பெண் ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது, ரமழான் மாத நோன்பு நோற்று, தனது கணவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து, தனது கற்பையும் பாதுகாத்துக் கொண்டு நடப்பாளாயின், (மறுமையில்) அவளை நோக்கி நீ சொர்க்கத்தில் எந்த வாசல் வழியாக நுழைய விரும்பினாலும், உன் விருப்பப்படி நுழைந்து கொள்ளலாம்” என்று சொல்லப்படும்.
(முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரழி) அறிவிக்கிறார்கள்: எந்தப் பெண், கணவர் திருப்தியுற்ற நிலையில் மரணிக்கிறாளோ, அவள் சொர்க்கம் புகுவாள்.
(ஸுனன் இப்னுமாஜா)

நல்லொழுக்கமுள்ள, பிரியத்திற்குரிய, பெருந்தன்மையான, நற்குணமுள்ள, இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறக்கூடிய பெண் எப்படி இருப்பாள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை நபி (ஸல்) கூறும் போது,

”சொர்க்கத்தில் உங்களுடன் இருக்கும் மனைவியரைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள், ‘ஆம், அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!’ என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

”அதிகமாகக் குழந்தை பெற்றெடுக்கக் கூடியவள். அதிகமாக நேசிக்கக் கூடியவள். அவளுக்குக் கோபம் ஏற்பட்டாலோ அல்லது தீங்கு இழைக்கப்பட்டாலோ அல்லது அவளது கணவர் கோபித்துக் கொண்டாலோ, கணவரை நெருங்கி அவள் சொல்லுவாள்: ‘இதோ… எனது கைகளை உங்களது கைகளுடன் கோர்த்துக் கொண்டேன். உங்களை விட்டுப் பிரியமாட்டேன். நீங்கள் என்னைக் கொண்டு திருப்தி அடையும் வரை தூக்கத்தால் என் கண்களுக்கு மை தீட்ட மாட்டேன்.’ (தூங்கமாட்டேன்) (முஃஜமுத் தப்ரானி)

மனைவி கணவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நன்மையையும் சொர்க்கத்தையும் நற்கூலியாக பெறுவாள் என்று கூறும் இஸ்லாம், மனைவி கணவருக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால், கணவருக்கு மாறு செய்தால், கணவன் விருப்பங்களைப் புறக்கணித்தால் கடுமையான தண்டனையையும் வானவர்களின் சாபத்தையும் அந்தப் பெண் அடைவாள் என்றும் எச்சரிக்கிறது.

ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஒரு ஹதீஸ் இதற்கு மிகப் பெரிய சான்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகிறார்கள்:

”ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாமலிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.”

மற்றுமொரு ஹதீஸில்,

”என் உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவரது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானத்திற்கு மேல் இருக்கும் இறைவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான் அவள் மீது கணவர் திருப்தி கொள்ளும்வரை.!”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கணவருக்கு மாறு செய்யக்கூடிய, அவரது விருப்பத்தைப் புறக்கணிக்கக் கூடிய ஒவ்வொரு தீய பெண்களின் மீதும் சாபம் இறங்குகிறது. அவ்வாறே கணவரை அலட்சியப்படுத்தும் பெண்களும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்வதில் காலம் தாழ்த்தும் பெண்களும் அந்தச் சாபத்திலிருந்து தப்பிக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்: ”இன்ன பெண்ணை அல்லாஹ் சபிப்பானாக! அவள் யார் என்றால், கணவர் படுக்கைக்கு அழைக்கும் போது ‘அப்புறம்! அப்புறம்! அப்புறம்!’ என்றபடியே தள்ளிப் போடுகிறாள். பின்பு கணவரும் தூக்கம் மிகைத்து தூங்கி விடுகிறார்”. (முஃஜமுத் தப்ரானி)

பெண்களும் ஆண்களும் தங்களது கற்பைப் பாதுகாத்து பேணிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம், திருமணத்தை உபதேசித்து முறைப்படுத்தியுள்ளது. இதனால்தான், கணவர் தன் மனைவியைத் தமது தேவைக்காக அழைக்கும் போது, அவசியம் அவரிடம் செல்ல வேண்டும் எனக் கட்டளையிடுகிறது. கணவர் தம் விருப்பத்திற்கு அழைக்கும் போது இல்லாத காரணங்களைச் சொல்லி சாக்குபோக்குகளைக் கூறி அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்கிறது. தன்னைக் கணவர் அழைக்கும் போது அவருக்கு இணங்க வேண்டும் என்பதைக் கூறும் ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன.

உண்மையான மார்க்கக் காரணங்களுக்காகவே தவிர வேறு எதற்காகவும், எவ்வளவுதான் தடைகளும் இடயூறுகளும் இருந்தாலும் மறுக்கக் கூடாது.

நபி (ஸல்) கூறினார்கள்: ”ஒருவர் தமது மனைவியைப் படுக்கைக்கு அழைத்தால், அந்த மனைவி அவருக்குப் பதிலளிக்கட்டும். அவள் ஒட்டகத்தின் மீதிருந்தாலும் சரியே!’ (முஸ்னதுல் பஸ்ஸார்)

மேலும், கூறினார்கள்:

”ஒருவர் தமது மனைவியைத் தேவைக்கு அழைத்தால், அந்த மனைவி அவரிடம் செல்லட்டும். அவள் அடுப்பிலே சமைத்துக் கொண்டிருந்தாலும் சரியே!’(ஜாமிவுத் திர்மிதி)

இப்படியெல்லாம் நபியவர்கள் கட்டளையிடுவதற்குக் காரணம், ஒரு மனைவி தமது கணவரைக் குழப்பமான சூழ்நிலைகளை விட்டும், மனதைப் பரிதவிக்க வைக்கும் நிலைகளை விட்டும் பாதுகாத்து அவருக்கு அமைதி அளிக்க வேண்டும் என்பதற்கே! இதுதான்அந்த மனைவியின் முதன்மையான கடமையும் ஆகும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அவர்கள் இருவரும் ஒரு தூய்மையான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதே! அந்தத் தூய்மையான சூழ்நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால், தீய ஆசாபாசங்களை விட்டும், தடுக்கப்பட்டவற்றைக் கொண்டு இன்பம் காணுவதை விட்டும் தூரமானதாக இருக்க வேண்டும். இயற்கையான ஆசைகளை அல்லாஹ் அனுமதித்த வழிகளில் தீர்த்துக் கொள்வதால் மட்டுமே இச்சையின் நெருப்பை அணைக்க முடியும் தவறான வழிகளில் செல்லும் சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும்.

”உங்களில் ஒருவரை ஒரு பெண் கவர்ந்து விட்டால் அவர் தமது மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் தம் தேவைகளை முடித்துக் கொள்ளட்டும். அது அவரது உள்ளத்தில் ஏற்பட்ட(குழப்பத்)தை நீக்கி விடும்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)

கணவரால் அதிருப்தி கொள்ளப்பட்ட பெண்ணை, மார்க்கம் வன்மையாக கண்டித்திருக்கின்றது. அந்தக் கண்டிப்பைக் கேட்கும் போது இறையச்சமுள்ள ஒவ்வொரு மனைவியும் உள்ளத்தால் நடுநடுங்கி விடுவாள். உண்மையில், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அவள் பயப்படக் கூடியவளாக இருந்தால், அந்த எச்சரிக்கைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். ஏனெனில், யார் கணவருக்கு அதிருப்தி அளிக்கின்றார்களோ, அவர்களுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது வானத்தின் பக்கம் அவர்களுடைய எந்த நன்மைகளும் உயர்த்தப்படாது அவர்கள் தமது கணவருக்கு திருப்தி அளிக்கும் வரை அதே நிலையே நீடிக்கும்!

இதை ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழி உறுதிப்படுத்துகிறது.

மூன்று நபர்களுடைய தொழுகையும், அவர்களது நற்செயல்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று நபர்களில் முதலாமவர், ஓடிப்போன ஓர் அடிமையாவார். அந்த அடிமை தன் எஜமானனிடம் திரும்பும்வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. இரண்டாமவர், கணவரால் கோபிக்கப்பட்ட ஒரு மனைவியாவார். அந்த மனைவி தன் கணவருக்குத் திருப்தியளிக்கும் வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. மூன்றாமவர், போதை உள்ளவராவார். அவர் போதையை விட்டுத் தெளிவு அடையும் வரை அவரது தொழுகையும், நற்செயல்களும் ஏற்கப்படாது. (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த இடத்தில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். மனைவி மீது கணவர் அதிருப்தி கொள்வதற்கு முறையான, நியாயமான, அனுமதிக்கப்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும். அதாவது, கணவரிடம் சரியான காரணங்கள் இருந்து, மனைவியிடம் குற்றங்கள் இருந்தால் அந்த நேரத்தில்தான் கணவன் கோபம் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதாகவும் ஆகுமானதாகவும் ஆகிவிடும். ஆனால், கணவர் இதற்கு மாறாக, நியாயமற்ற காரணங்களுக்காக கோபித்துக் கொண்டால், அது அவரை அக்கிரமக்காரனாகவும், அநியாயக்காரனாகவும் ஆக்கிவிடும். அவர் தன் மனைவியை இந்நேரத்தில் கோபித்துக் கொள்வதால், மனைவிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, அல்லாஹு தஆலா அந்தப் பெண்ணுக்கு அவள் காக்கும் பொறுமைக்காக நற்கூலியையே வழங்குவான். எனினும், மார்க்கத்தில் எவை பாவமானவையாக, தடுக்கப்பட்டவையாக இல்லையோ, அந்த விஷயங்களில் எல்லாம் கணவருக்குக் கீழ்ப்படிந்தே ஒரு மனைவி இருக்க வேண்டும். ஆனால், மார்க்கம் தடுத்த விஷயங்களாக இருப்பின் அவற்றில் தன் கணவருக்கு அந்த மனைவி கட்டுப்படக் கூடாது. இஸ்லாமில் இது ஒரு பொதுவான சட்ட விதியாகும்.

எந்த ஒரு படைப்பினத்திற்கும், படைத்த இறைவனுக்கு மாறாக கீழ்ப்படியக் கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும். இது விஷயமாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”கணவருக்கு விருப்பமின்றி ஒருவரை வீட்டிற்குள் அனுமதிப்பதும், அவரது விருப்பமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல! இன்னும், கணவரது விஷயத்தில் பிறருடைய பேச்சைக் கேட்பதும், பிறருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், கணவன் படுக்கையை விட்டு தூரமாகி இருப்பதும், அவரை அடிப்பதும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! உண்மையில்,

கணவர் அநியாயக்காரராகவே இருந்தாலும், அவரது திருப்தியைப் பெறுவதற்கே ஒரு மனைவி முயல வேண்டும். அந்தக் கணவர் அவளிடமிருந்து அவள் கூறும் காரணத்தை ஏற்றுக் கொண்டால், அது மிகச் சிறந்தது. அல்லாஹ்வும் அந்தப் பெண்ணின் காரணத்தை (மன்னிப்பை) ஏற்றுக் கொள்கிறான் அவள் தனது கடமையை நிறைவேற்றி விட்டாள் அவள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், அந்தப் பெண் எவ்வளவோ முயன்றும் கணவர் திருப்தியுறவில்லையெனில், அல்லாஹ்விடம் அவள் தனது மன்னிப்புக்குரிய காரணத்தைச் சமர்ப்பித்தவளாக ஆகிவிடுவாள்.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், கட்டுப்பட்டு நடப்பதும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு முக்கியப் பண்பாடாகும். இந்த அடிப்படையில்தான், ரமழான் அல்லாத மாதங்களில் நோற்கிற உபரியான (நஃபில்) நோன்புகளை ஒரு மனைவி தன் கணவன் அனுமதியின்றி நோற்கக் கூடாது என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அவ்வாறே கணவன் அனுமதியும் திருப்தியுமின்றி எவரையும் அவரது வீட்டிற்குள் அனுமதிக்கவும் கூடாது. அவரது சம்பாத்தியத்தை அவர் அனுமதியில்லாமல் செலவளிக்கக் கூடாது (அப்படியே நன்மையான காரணங்களுக்காக செலவளித்தாலும் அதில் ஒரு பகுதி நன்மை கணவருக்கும் வழங்கப்படும்) என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இறையச்சமுள்ள பெண், அல்லாஹ்வும் அவனது தூதரும் நிர்ணயித்த மார்க்கச் சட்டங்களைப் பேணிக் கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (உபரியான நஃபில்) நோன்பு நோற்கக் கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது வீட்டிற்குள் அனுமதிப்பது ஆகுமானதல்ல. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (நல்வழியில் அவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.” (ஸஹீஹுல் புகாரி)

இந்த கருத்திலான நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.

ஒரு பெண் தம் கணவன் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவளித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவர் என்ற அடிப்படையில் கணவருக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்து விடாது. (ஸஹீஹ் முஸ்லிம்)

இவற்றின் மூலம் நாம் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு செயலைச் செய்யும் போது அதற்கு கணவன் அனுமதியும் ஆதரவும் இருக்கின்றதா என்பதே! அதாவது, அவரது பொருளைக் கொண்டு அவர் அனுமதியின்றி தர்மம் செய்வது நன்மையாகாது மாறாக குற்றமாகிவிடும். அதே நேரம், அருகே கணவர் இல்லாவிட்டாலும், தான் செய்கிற தர்மத்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றால், அந்தத் தர்மம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அதன் நன்மையின் ஒரு பகுதி கணவருக்கும் சேரக் கூடியதாகவும் ஆகிவிடும். ஆனால், தான் செய்யப் போகிற தர்மத்தால் அவர் கோபித்துக் கொள்வார் என இருப்பின், அப்போது தர்மம் செய்வது ஆகுமானதல்ல.

இந்த விஷயங்களில் எல்லாம் கணவன் மனைவி இருவரிடமும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். முழுமையான புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். எந்த விதமான குழப்பங்களோ, மனச் சங்கடங்களோ ஏற்பட்டு விடக்கூடாது. அப்படி இருவருக்கிடையேயும் மனச்சங்கடங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு விட்டால், இஸ்லாம் எதிர்பார்க்கிற அன்பு, நேசம், இரக்கம் ஆகிய திருமண நோக்கங்கள் சீர்குலைந்து விடும். அவற்றின் அஸ்திவாரங்கள் உறுதியற்றவையாக ஆகிவிடும். பொதுவாக இஸ்லாம் திருமண வாழ்க்கையில் தூய்மையையும், ஒருவரை ஒருவர் பாதுகாக்கக் கூடிய, ஒத்தக் கருத்துள்ள போக்கையுமே விரும்புகின்றது.

சில நேரங்களில் கணவர் கஞ்சனாகவும், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் செலவளிப்பதில் இறுகக் கையை மூடியவராகவும் இருக்கலாம். இந்த நேரங்களில் ஒரு மனைவி அவரது அனுமதியில்லாமலும் அவருடைய செல்வத்திலிருந்து தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மார்க்கம் அனுமதித்திருக்கிறது. இதை அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய ஓர் உபதேசத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ ஸுஃப்யான் கஞ்சனாக இருக்கிறார். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(செல்வத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான செல்வத்தை அவராகத் தரமாட்டார்)” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு நீ எடுத்துக் கொள்!” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிமொழியின் மூலம், வீட்டுக் காரியங்களைச் செம்மையாக நிர்வகிப்பதில் பெண்ணே பொறுப்பாளி என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிமான பெண் இஸ்லாம் தனக்குக் கொடுத்துள்ள பொறுப்பை நன்கு புரிந்து கொள்வாள். தமது கணவன் வீட்டைப் பாதுகாப்பதிலும், அவரது பிள்ளைகளையும் பொருட்களையும் பராமரிப்பதிலும் இஸ்லாம் தனக்கு வழங்கியுள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவாள். தான் ஒரு பொறுப்பாளி என்பதை நன்கு விளங்கி வைத்திருப்பாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நல்ல முஸ்லிம் பெண், எப்போதுமே தன் குழந்தைகளின் மீது அன்பையும் பாசத்தையும் இரக்கத்தையும் பொழிந்து கொண்டிருப்பாள். அன்பால் தன் கணவரை அரவணைத்தவளாக இருப்பாள். இந்த இரண்டும் எல்லாக் காலங்களிலும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டிய முக்கிய நற்குணங்களாகும். இந்த நற்குணங்கள், குறைஷிப் பெண்களிடம் நிறைவாக இருந்ததாக ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தம் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதிலும், கணவன் பொருளையும் வீட்டையும் பாதுகாப்பதிலும், வீண் விரயங்களை விட்டு விலகி நிற்பதிலும் குறைஷிப் பெண்கள் நல்ல முன்மாதிகளாகத் திகழ்ந்தார்கள். இதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படிக் கூறினார்கள்:

”ஒட்டகங்களில் ஏறிச் செல்கிற பெண்களிலேயே மிகச் சிறந்த பெண்கள் குறைஷிப் பெண்கள்தான். அவர்கள் தங்களது குழந்தைகளின் மீது அதிக இரக்கமுள்ளவர்களாகவும், தங்கள் கணவன் செல்வத்தைப் பாதுகாப்பதில் அதிகப் பேணுதல் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.’(ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே வெளிவந்துள்ள இந்த சாட்சி மிக உன்னதமானது. குறைஷிப் பெண்களுக்கு அவர்களின் உயர்ந்த குணங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதரே புகழாரம் சூட்டியுள்ளார்கள். இது அந்தக் குறைஷிப் பெண்களின் சிறப்பை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.

இந்த சாட்சியிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிமான ஒவ்வொரு பெண்களும் தம் குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதிலும், கணவன் உடைமைகளைப் பாதுகாப்பதிலும் குறைஷிப் பெண்களைப் போன்று வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். இந்த மகத்தான தன்மைகளைக் கொண்டே திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய முடியும். தனி நபரும் ஈடேற்றம் பெற முடியும் குடும்பமும் நற்பாக்கியம் பெறும் சமுதாயமும் முன்னேற்றத்தைக் காண முடியும்.

பெண்ணின் சிறப்பே இங்குதான் இருக்கின்றது. அதாவது, தம் கணவருடன் அன்பாக நடப்பதிலும், அவரை அரவணைத்து அவர் காரியங்களைப் பொறுப்பாக நிர்வகிப்பதிலும், காலை மாலை, இரவு பகல் எல்லா நேரங்களிலும் அவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வதிலும், மென்மையான அணுகுமுறைகளால் அவருக்கு நிம்மதியை, வெற்றியை, பாதுகாப்பை அளிப்பதிலும் மட்டுமே ஒரு பெண் சிறப்பை அடைகிறாள். இதற்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்க்கையிலே நல்லதொரு முன்மாதிரி இருக்கின்றது.

ஆயிஷா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிலே கலந்து கொள்வார்கள் அனைத்து பணிவிடைகளையும் துரிதமாகச் செய்வார்கள் ‘இஹ்ராம்’ அணிவதற்கு முன்பதாக, நபியவர்களின் மீது நறுமணம் பூசி விடுவார்கள் ‘இஹ்ராம்’ களைந்து கடமையான தவாஃபை ஆரம்பிக்கும் முன் நறுமணம் பூசி விடுவார்கள். இன்னும், நபி (ஸல்) அவர்களுக்காக தாமே மிகச் சிறந்த நறுமணம் எது என்று தேர்ந்தெடுப்பார்கள். இதைப் பல தருணங்களில் ஆயிஷா (ரழி) அவர்களே மகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்கள். அந்தச் செய்திகள் ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நூற்களிலே ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ அணியும்போது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாழா’ செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்,

”இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் கஅபாவை தவாஃப் செய்வதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்” என்றும் கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இன்னும், உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ அணியும்போது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)” என்று விடையளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும், சில அறிவிப்புகளில், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ அணியும் போது அவர்கள் ‘இஹ்ராம்’ அணிந்ததற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்ட போது அவர்கள் ‘தவாஃபுல் இஃபாழா’ செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசி விட்டேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ அணிவதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை நானே பூசிவிடுவேன்.”
(ஸஹீஹுல் புகாரி)

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் ‘இஃதிகாஃப்’ இருக்கும் போதும், ஆயிஷா (ரழி) அவர்கள் நபியவர்களுக்குத் தலைவாரி விடுவார்கள். தலையை கழுவி விடுவார்கள் என்றும் செய்திகள் பதிவாகியுள்ளன.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

”நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதிலிருந்து தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்கு தலை வாரி விடுவேன். இஃதிகாஃப் இருக்கும்போது சுய தேவைக்கே தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.”
(ஸஹீஹுல் புகாரி)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்,

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும் போது பள்ளிவாசலிலிருந்து தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவி விடுவேன்” என்று பதிவாகியுள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்)

கணவருக்குக் கடமையாற்றுவதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறியுள்ள ஓர் அறிவுரை மிக ஆழமானது அழுத்தமானது.

”பெண்களே! உங்கள் கணவருக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டால், உங்கள் கணவன் பாதத்தில் படிந்திருக்கும் தூசுகளை உங்கள் முகத்தாலேயே துடைத்து சுத்தம் செய்வீர்கள்”. (முஸ்னதுல் பஸ்ஸார், ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

அதாவது, கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளின் அவசியத்தை ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த அளவிற்கு வலியுறுத்தினார்கள்.

அவர்களின் வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிக் கூறுவதின் மூலம் உம்முல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கணவரைப் பேணுவதின் அவசியத்தை எல்லாப் பெண்களின் சிந்தனையிலும் பதிய வைக்க நாடினார்கள். தம் கணவரை விட தானே மிகச் சிறந்தவள், மேன்மையானவள், உயர்ந்தவள் என்று பெருமையடிக்கக் கூடிய பெண்கள், அந்த வரட்டுக் கர்வத்தை விட்டும், அந்த எண்ணத்தை விட்டும் நீங்க வேண்டுமென விரும்பினார்கள்.

ஆணவம்தான் குடும்ப வாழ்க்கையின் கோட்டையை அடியோடு தகர்க்கிறது அல்லது நரகமாக்கி விடுகிறது. கணவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நமது சமுதாயத்தின் சிறந்த நற்குணங்களில் ஒன்றாகும். இந்த நற்குணம், அறியாமைக் காலத்தில் கூட நடைமுறையில் இருந்து வந்தது. இஸ்லாம் அதைச் சீராக்கி, செம்மைப்படுத்தி மெருகூட்டியது. இன்றும் அரபிய முஸ்லிம்களிடையே இந்த நற்குணம் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு தாய்மார்கள், தங்கள் பெண் மக்களை மணமுடித்துக் கொடுக்கும் போது நல்ல உபதேசங்களைக் கூறி வழியனுப்புவார்கள். அந்த உபதேசங்களில் கணவரைப் பேணுவதின் ஒழுக்கங்களை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்வார்கள். அந்த உபதேசங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தும் பிரசாரங்களாக இன்று விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒழுக்க போதனைகளில் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய ‘அப்துல் மலிக் பின் உமைர் அல் குறைஷி’ என்பவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பு மிகச் சிறப்பானது.

அவ்ஃப் இப்னு முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்தி பெற்ற ஓர் அரபுத் தலைவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவன் வீட்டிற்கு அவர் வழியனுப்பப்படும்போது, அந்தப் பெண்ணின் தாய் ‘உமாமா பின்த் ஹாரிஸ்’ வந்தார்.

இலக்கிய நயத்துடன் பேசுகிற அறிவும், சீரிய சிந்தனையும் கொண்ட அவர், தம் மகளுக்கு அப்போது உபதேசித்தவை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

இதோ… அவரது உபதேசம்:

 • ”என் அருமை மகளே! ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும் உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவருக்கும் உபதேசம் தேவையில்லை என்றால், அது உனக்கும் தேவையில்லை தான்.
 • இருப்பினும் உபதேசம் என்பது, மறதி உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உதவி!
 • என் அருமை மகளே! தகப்பனது செல்வம், அன்பு, பிரியம் ஒரு பெண்ணுக்குப் போதுமானது என்றால், அவை உனக்கும் போதுமானதுதான்.
 • இருப்பினும் பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டவள் ஆண், பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்.
 • என் அருமை மகளே! எந்தச் சூழ்நிலைகளில் நீ இதுவரை வளர்ந்து வந்தாயோ, அந்தச் சூழ்நிலைகளிலிருந்து இனி பிரியப் போகிறாய்.
 • எந்தக் கூட்டிற்குள் நீ வளர்ந்து வந்தாயோ, அந்தக் கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத ஒரு கூட்டிற்குச் செல்லப் போகிறாய்.
 • நீ பழகாத ஒரு நண்பனிடம் செல்லப் போகிறாய். அந்த நண்பன் உன் மீது உரிமை பெற்றிருப்பதால் உனக்கு அரசனாக ஆகிறான் நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனும் உனக்கு அடிமையாக மாறி விடுவான்.
 • நான் உனக்கு பத்து நற்பண்புகளைச் சொல்லுகிறேன். அவற்றை நன்றாக நினைவில் பதித்துக் கொள்.
 • முதலாவது, உன் கணவரிடம் போதுமென்ற தன்மையுடன் நீ பழகிக் கொள். போதுமென்ற தன்மையில்தான், மனதிற்கு அமைதி இருக்கிறது.
 • இரண்டாவது, அவன் பேச்சுக்குச் செவிதாழ்த்திக் கட்டுப்பட்டு நடந்து கொள். அதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கின்றது.
 • மூன்றாவது, உன் கணவன் மூக்கு எதை நுகர்கிறது என்பதைத் தெரிந்து கொள். நல்ல நறுமணத்தையே தவிர வேறு எதையும் அவர் உன்னிடம் நுகர்ந்துவிட வேண்டாம்.
 • நான்காவது, உன் கணவன் கண் எதைப் பார்க்கிறது என்பதைக் கவனித்துக் கொள். அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்துவிட வேண்டாம்.
 • சுர்மா இட்டுக் கொள் அது கண்களுக்கு கவர்ச்சி தரும் குளித்துச் சுத்தமாக இரு; தண்ணீரும் நறுமணங்களில் ஒன்றாகும்.
 • ஐந்தாவது, கணவர் உணவு உண்ணும் நேரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்! பசி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
 • ஆறாவது, அவர் தூங்கும் பொழுது அமைதி காத்துக் கொள்! தூக்கத்தைக் கெடுப்பது எரிச்சலூட்டக் கூடிய செயல்.
 • ஏழாவது, அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினரைப் பேணிக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் நிர்வகிக்க முடியும்.
 • எட்டாவது, கணவன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்! அதன் மூலம்தான் குடும்பத்தை அழகிய முறையில் சீர்படுத்த முடியும்.
 • ஒன்பதாவது, கணவன் இரகசியத்தைப் பகிரங்கப்படுத்தாதே. அதனால், அவரது வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.
 • பத்தாவது, அவரது கட்டளைகளுக்கு மாறு செய்யாதே. அதனால் அவருக்கு கோபமூட்டியவளாக ஆகிவிடுவாய்!
 • என்னருமை மகளே! கணவர் துயரத்தில் இருக்கும் போது மகிழ்ந்திருப்பதைத் தவிர்த்துக் கொள்! இது ஒழுக்கக் குறையாகும். அவர் மகிழ்ச்சியுற்று இருக்கும் போது கவலையில் இருப்பதையும் தவிர்த்துக் கொள்! அது (உங்கள் இருவரது) மகிழ்ச்சியை(யும்) கெடுப்பதாகும்.
 • எந்த அளவிற்குக் கணவரைக் கண்ணியப்படுத்தி, மதிக்க முடியுமோ, அந்த அளவிற்கு மதித்து வாழ்ந்து கொள்! அவரும் உனக்கு அதே அளவிற்குச் சங்கை செய்வார் உன்னைக் கண்ணியப்படுத்துவார்.
 • மேலும், எந்த அளவிற்கு அவருக்கு கீழ்ப்படிந்தவளாக, கட்டுப்பட்டவளாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள்! அவர் உன்னை விட்டுப் பிரிய மாட்டார் உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே விரும்புவார்.
 • என் அருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய வேண்டுமென்றால், உன் விருப்பத்தை விட அவர் விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடு! உன் மகிழ்ச்சியை விட அவர் மகிழ்ச்சிக்கே அதிக முன்னுரிமை கொடு! அது உனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ இருந்தாலும் சரியே!
 • அல்லாஹ் உனக்கு நன்மையே நாடட்டும் அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கட்டும்.

இந்த உபதேசங்கள் கூறப்பட்டே அந்த மகள் தம் கணவரிடம் அனுப்பி வைக்கப்பட்டாள். தனது தாயின் வார்த்தைகளுக்கு இணங்க அவள் வாழ்ந்ததால், கணவரிடம் கண்ணியம் அடைந்தாள். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள், பிற்காலத்தில் அரபுலகத்தின் பிரசித்தி பெற்ற அரசர்களாக இருந்தார்கள் என வரலாறு கூறுகிறது.

உண்மையில், மேற்கூறப்பட்ட நல்லுபதேசங்கள் மிக ஆழமானவை; விசாலமான கருத்துடையவை; நுட்பமான ஞானமிக்கவை. ஒரு வாலிபப் பெண் தமது கணவருடன் வாழத் தேவையான எல்லா நற்பண்புகளையும், நல்ல நடத்தைகளையும், நுண்ணறிவையும் அந்த உபதேசங்கள் உள்ளடக்கியுள்ளன. எனவேதான், மணமுடிக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த உபதேசங்கள், பொருத்தமான வாழ்க்கை வழிகாட்டிகளாக இருக்கின்றன.

இறையச்சமுள்ள ஒரு முஸ்லிம் பெண்மணி, செல்வம் படைத்த சீமாட்டியாக இருந்தாலும், அவளது செல்வம் அவள் பார்வையைக் குருடாக்கி விடக் கூடாது. கணவரை விட தன்னிடமே செல்வம் அதிகமிருப்பதாக எண்ணி, தானே சிறந்தவள் என்று கர்வம் கொண்டு விடக் கூடாது. மாறாக, எப்போதும் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவரது உரிமைகளையும் பாதுகாத்து அவர் விரும்பும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் எவ்வளவுதான் இருந்தாலும் கணவன் மதிப்பை மட்டந்தட்டி விடக்கூடாது.

தனக்கு அல்லாஹ் புரிந்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றியையும் உபகாரத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை வேண்டி, தானதர்மங்களை அதிகப்படுத்த வேண்டும். அப்படி தனது புறத்திலிருந்து கொடுக்கப் படுகிற தர்மங்களிலேயே முதலாவதாக அதைப் பெறும் தகுதியுள்ளவர், தம் கணவரே என்பதை உணர வேண்டும். அதாவது, வறுமையிலும் ஏழ்மையிலும் கணவர் இருந்தால், தனது செல்வத்தை முதலில் அவருக்கே செலவளிக்க வேண்டும். இதன் மூலமாக அந்தப் பெண்ணுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கின்றன. ஒன்று, உறவுக்குச் செய்த உபகாரத்திற்கான கூலி; மற்றொன்று, தர்மத்திற்கான கூலி.

இதோ… அதற்கான ஆதாரம்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், ”பெண்களே! உங்களின் நகைகளிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும்’ செலவளிப்பவளாக இருந்தேன். எனவே, என் கணவரிடம், ‘நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவளிப்பது தர்மமாகுமா?’ என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் என்றேன். அவரோ ‘நீயே சென்று கேள்!’ எனக் கூறிவிட்டார். எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாசலில் ஓர் அன்ஸாரிப் பெண்ணும் அப்போது நின்று கொண்டிருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியிலேயே நின்று கொண்டிருந்தோம்) அந்த நேரத்தில் எங்களிடையே பிலால் (ரழி) வந்தார். அவரிடம் நான், ‘எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் நான் செலவளிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள் நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்’ எனக் கூறினோம். பிலால் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ”அந்த இருவரும் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு, ”ஓர் அன்சாரிப் பெண்ணும் ஜைனபும்” என்று பிலால் (ரழி) பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ என்று கேட்டார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களுடைய மனைவி ஸைனப்’ என்று பிலால் பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த இருவருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று, உறவுக்குரியது மற்றொன்று தர்மத்திற்குரியது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ”உன் கணவரும் உன் குழந்தைகளுமே’ உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை உள்ளவர்கள்” என்று நபி (ஸல்) கூறியதாக பதிவாகியுள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

மார்க்கத்தைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய முஸ்லிமான பெண், எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவாள். அல்லாஹ்வின் அருட்கொடை, தன்னைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில் அதற்காக நன்றி செலுத்துவதை மறந்துவிட மாட்டாள். அதே நேரம், சோதனைகளும் சிரமங்கள் ஏற்படும் போது பொறுமை காத்துக் கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த விஷயங்களை அலட்சியப் படுத்திவிட மாட்டாள். நரகத்தில் பெண்களே அதிகமாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டிருக்கிறார்கள். எனவே, அந்த நரகப் பெண்களில் தானும் ஒருத்தியாக இருந்து விடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களே! நீங்கள் அதிகமதிகம் தர்மம் செய்யுங்கள். நரகத்தில் உங்களைத்தான் நான் அதிகமாகப் பார்த்தேன். ”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதிகமாக நரகில் இருக்க என்ன காரணம்?” என்று பெண்கள் கேட்டார்கள். ”நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள். கணவருக்கு மாறு செய்கிறீர்கள். கூரிய அறிவுடைய ஆண் மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறையுடையவர்களாக இருக்கும் நீங்கள் போக்கி விடுகிறீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ”எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்” என்று நபி (ஸல்) கூறிய போது, ‘இறைவனையா நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் பார்த்துவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசி விடுவாள்” என்று கூறியதாக பதிவாகியுள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

இமாம் அஹ்மத் அவர்களின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் பற்றி இவ்வாறு கூறிய சமயத்தில் ஒரு தோழர், ”அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்கள் – எங்கள் தாய்மார்கள் அல்லவா? சகோதரிகள் அல்லவா? மனைவியர் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ஆம்! அப்படித்தான். ஆனால், அவர்களுக்கு வாரி வழங்கப்பட்டாலும் அவர்கள் நன்றி செலுத்துவதில்லை சோதனைக் காலங்களில் பொறுமை காப்பதில்லை!” என்று கூறியதாக உள்ளது. (முஸ்னது அஹ்மது)

தூய்மையும் இறையச்சமும் மிக்க முஸ்லிம் பெண்மணி இந்த ஆதாரமிக்க நபிமொழிகளைச் சிந்தித்து, மறுமையில் தாமும் அந்த நரகவாசிகளில் ஒருத்தியாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கணவருக்கு மாறு செய்வதை விட்டும், அவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பதை விட்டும், உபகாரத்தை மறுப்பதை விட்டும், சபிப்பதை விட்டும், செல்வ வசதியுள்ள காலங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை விட்டும், சிரமங்களின்போது பொறுமை இழப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியிருக்கும் தர்மங்களைச் செய்வதிலே ஈடுபாடு காட்ட வேண்டும். அந்த தர்மங்கள்தான், நாளை மறுமை நாளில் தங்களை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடியது என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விற்கும் மறுமை நாளிற்கும் அஞ்சாமல், வாழ்க்கையில் ஒழுக்கமின்றி வாழ்ந்த பெண்கள், மறுமையில் பெரியதொரு நஷ்டத்தில் இருப்பார்கள். அவர்களிடம் இருந்த தீய பண்புகளே அவர்களை நரகத்தில் புகுத்திவிட காரணமாகிவிடும். மாறாக, நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்கள் தம் கணவரைக் கண்ணியப்படுத்துவதிலும், அவரது சிறப்புகளைப் பிரஸ்தாபிப்பதிலும், அவன் நற்குணங்களை நினைவு கூர்வதிலும் அழகிய பண்புகளைப் பரப்புவதிலும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கணவன் உரிமைகளைக் கண்ணியப் படுத்த வேண்டும். அல்லாஹ் கணவருக்கு வழங்கியுள்ள மேன்மைகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தங்கள் கணவன் பாராட்டத்தக்க தன்மைகளை நினைவுகூர வேண்டும். அவற்றைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் இவற்றிற்கு நல்லதொரு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அந்த முன்னுதாரணங்களில் ‘அஸ்மா பின்த் உமைஸ் (ரழி)’ அவர்களைப் பற்றிய செய்தி ஒரு நல்ல சான்றாகும்.

ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் அஸ்மா பின்த் உமைஸும் ஒருவராவார். சிறந்த நல்லடியாராக இருந்த இவரை முதலில் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள் மணமுடித்தார்கள். ஜஅஃபர் (ரழி) அவர்கள் மரணமடைந்த பின், அவரை அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். அபூபக்ர் (ரழி) அவர்களும் மரணித்து விட, பின்னர் அலீ (ரழி) அவர்கள் அஸ்மாவை மணமுடித்தார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் ஜஅஃபர் (ரழி) அவர்களின் மகன் முஹம்மதும், அபூபக்ர் (ரழி) அவர்களின் மகன் முஹம்மதும் தங்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து ”உன் தந்தையை விட என் தந்தையே உயர்ந்தவர் எனவே, உன்னை விட நானே சிறந்தவன்” என்று கூறினார். இதைப் பார்த்த அலீ (ரழி) அவர்கள், ”அஸ்மாவே! இவர்களுக்கு மத்தியில் நீயே தீர்ப்புச் சொல்லிவிடு” என்று அஸ்மா (ரழி) அவர்களை நோக்கி கூறினார்கள். அப்போது அஸ்மா (ரழி) அவர்கள், ”நான் அரபுகளிலேயே ஜஅஃபரை விடச் சிறந்த ஒரு வாலிபரைப் பார்த்ததில்லை. அபூபக்ரை விடச் சிறந்த ஒரு நடுத்தர வயதுடையவரையும் பார்த்ததில்லை” என்றார்கள்.

இதைக் கேட்ட அலீ (ரழி) அவர்கள், ”அஸ்மாவே! இதில் என்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே; அதே சமயம் அவர்களைப் பற்றி இது தவிர்த்து வேறு எதையாவது நீ கூறியிருந்தால், நான் உன்னைக் கோபித்திருப்பேன்” என்றார்கள். அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள், ‘நீங்கள் மூன்றுபேரும் நிச்சயமாக நல்லோரே! நீர் அவர்களில் வயது குறைந்தவர்! என்று கூறி முடித்தார்கள்.

இங்கு அஸ்மா (ரழி) அவர்களது அறிவின் முதிர்ச்சியைக் கவனிக்க வேண்டும். அவர் மணம் முடித்த கணவன்மார்கள் எல்லோருக்கும் அவரவருக்குத் தகுந்த கண்ணியத்தை வழங்கினார்கள். குறிப்பாக அலீ (ரழி) அவர்களையும் திருப்திப் படுத்தினார்கள். அவரது ஞானம்தான் எவ்வளவு ஆழமானது! அவரது பதில்தான் எவ்வளவு நுட்பமானது!

முஸ்லிம் பெண்மணி – தம் கணவன் தாய்க்கு உபகாரம் செய்வாள் அவன் குடும்பத்தார்களைக் கண்ணியப் படுத்துவாள்.

நல்லறிவுள்ள முஸ்லிம் மனைவி, தம் கணவரைக் கண்ணியப்படுத்துவதுடன் அவரது தாய்க்கும் உபகாரம் புரிவாள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்று வைத்துள்ள அவள், தம் கணவருக்கு அவரது தாய் மீதுள்ள கடமையையும் தெரிந்து வைத்திருப்பாள். எனவே, தமது கணவர் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளில், தானும் உதவி புரிவாள். இதனால் தனக்கும் தம் கணவருக்கும் நன்மை புரிந்தவளாகி விடுவாள்.

அல்லாஹ் உபதேசிக்கிறான்:

நன்மைக்கும் (அல்லாஹ்வின் மீதான) இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். (அல்மாயிதா 5:2)

இந்த அல்குர்ஆன் வசனத்திற்கேற்ப அவள் நடந்து கொள்வதால், கணவன் பிரியத்திற்கு பாத்திரமானவளாக ஆகுவாள். தன் மனைவி தனது தாய்க்கும் தனது குடும்பத்திற்கும் செய்கிற உபகாரங்களை எண்ணி அந்தக் கணவர், அவளைச் சங்கையுடன் கண்ணியப்படுத்தி வைத்துக் கொள்வார்.

ஒரு வீரமிக்க ஆண்மகனின் மனதைக் குளிர வைப்பதெல்லாம், அவரது மனைவிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே நிலவுகிற உறுதியான அன்பு, உண்மையான நேசம், பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை ஆகியவையே!

அதே போல் அந்த ஆண்மகனைக் கோபமூட்டுவதெல்லாம், அவரது மனைவிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே நிலவுகிற பொறாமை, குரோதம், வெறுப்பு, பகைமை, சச்சரவு ஆகியவையே!

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு ‘ஈமான்’ என்ற நறுமணத்தால் மணம் வீசுகிற ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களது அறிவையும், உணர்வையும் இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி பிரகாசம் பெறச்செய்ய வேண்டும். மடத்தனமான அறியாமைச் செயல்களில் இருந்து தூரமாக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், குடும்பத்தில் பிரச்சனைகளும் சிக்கல்களுமே மிஞ்சும்.

சில முஸ்லிம் பெண்மணிகளுக்கு அவர்களது கணவன்மாரின் சகோதர சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் உயர்ந்த நற்பண்புகள் இல்லாதவர்களாக இருப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களிடம் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். அப்போது மதி நுட்பத்துடனும், சமயோசித புத்தியுடனும், தவறுகளை நயமாகச் சுட்டிக் காட்டுகிற நாகரிகத்துடனும், நன்மைகளை ஏவுகிற ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, கணவரது உறவினர்களை ஒரு சமநிலையில் பேண முடியும். மேலும், தன்னையும் தனது திருமண வாழ்க்கையையும் சச்சரவுகள், குழப்பங்கள் போன்றவற்றை விட்டுப் பாதுகாக்க முடியும்.

கணவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உபகாரம் செய்யும்படி முஸ்லிமான பெண் கட்டளையிடப்பட்டுள்ளாள். அதே நேரம், ‘தனக்கு மட்டுமே அந்தக் கட்டளை, கணவருக்கு இல்லை கணவர் குடும்ப கடமைகளையும் ஒழுக்கங்களையும் பேணவில்லை என்றாலும் அவர் மீது எவ்வித குற்றமும் இல்லை’ என்று நினைத்து விடக் கூடாது.

மண வாழ்க்கையை முறைப்படுத்தி, சீர்படுத்தியுள்ள இஸ்லாம், கணவர் மனைவியர் இருவருக்கும் தனித்தனியான பொறுப்புகளையும் கடமைகளையும் சுமத்தியிருக்கிறது.

எப்படி கணவருக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள் உள்ளனவோ, அதே போல் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. அந்தக் கடமைகள் மனைவியின் கண்ணியத்தையும், தனித்தன்மைகளையும் பாதுகாக்கின்றன. இன்னும், அவளுடன் தவறாகவோ, அலட்சியமாகவோ, அநியாயமாகவோ அந்தக் கணவர் நடப்பதை விட்டும் பாதுகாக்கின்றன.

பெண்ணின் உரிமைகளைப் பேணுவது கணவன் மீது கடமையாகும். கணவர் தன் மனைவியின் உரிமைகளைக் கண்ணியப்படுத்த வேண்டும் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.

ஒரு நல்ல முஸ்லிமான கணவன் கடமை, தனது மனைவியை நல்ல முறையில் நிர்வகிப்பதாகும். அப்படி நிர்வகிக்கும் போது, தன் குடும்பம் சீர்குலையாதபடி வெற்றிகரமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அவரது மனைவி விரும்பக்கூடிய தனித்தன்மையான குணங்களும் அவரிடம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, தன் விருப்பத்தைச் சாதிப்பதில் கடினப்போக்கு காட்டாமல் நளினம் காட்ட வேண்டும் பலவீனனாக இருக்காமல் உயர்ந்த கொள்கை உறுதி உள்ளவராக இருக்க வேண்டும். அதே சமயம், சகிப்புத்தன்மையுடன் நடந்து, மன்னிக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். மணவாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் புரிந்து கொண்டு, வழி நடத்தக் கூடிய திறமை இருக்க வேண்டும். பெருந்தன்மை பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். வீண் விரயமோ, வரம்பு மீறிய செலவுகளோ அவரிடம் இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். வீட்டையும் பிள்ளைகளையும் பேணுவதில் உயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தை உருவாக்குவதில் அவளது பொறுப்புகளை அவளுக்கு உணர வைக்க வேண்டும்.

கணவரிடம் அன்பாக நடந்து கொள்வாள் – அவரது மகிழ்ச்சியை அடைய பேராவல் கொள்வாள்

இறையச்சமுள்ள முஸ்லிம் பெண்மணி, எந்நேரமும் தமது கணவன் பிரியத்தைத் தேடுவாள். அவரைத் திருப்திப்படுத்துவதிலும், மகிழ்ச்சியுறச் செய்வதிலும் பேராசை கொண்டிருப்பாள்.

கணவன் வாழ்க்கையை எந்த அசம்பாவிதமும் அணுகி விடக்கூடாது என்பதிலும், அவரது சந்தோஷத்தை எதுவும் சீரழித்து விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பாள்.

தம் கணவரை ஆனந்தப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும். அவரது சிந்தனைக்குப் புத்துணர்வு ஊட்டும் விஷயத்தையே பேச வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பாள்.

கணவன் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசமாட்டாள். அவரை நோகடிக்கும் பேச்சுகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். அவரிடம் நல்ல செய்திகளையே சொல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவாள். அவரைக் கவலையுறச் செய்யும் செய்திகளை முடிந்தவரை தவிர்க்கவே செய்வாள். அதையும் தாண்டி, அவரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலையிருப்பின், அதை எந்த நேரத்தில், எப்படிச் சொன்னால் அதன் திடுக்கம் அவரைத் தாக்காது என்று சிந்தித்துக் கொள்வாள். அந்தத் துயரச் செய்தியைச் சொல்லும் முன், சில வார்த்தைகளை அதற்கு முன்னுரையாகப் பேசுவாள். பிறகு, அவர் உள்ளம் காயம் படாதபடி நளினமாகவும், நயமாகவும் அந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொல்வாள்.

உண்மையில், இந்த அணுகுமுறை மிக சவாலான செயலே என்றாலும், புத்திக் கூர்மையுள்ள பெண்களுக்கு சாத்தியமான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். இந்த நிகழ்ச்சியை இங்கு பதிவு செய்வதற்கு முன், நாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இது மட்டும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகாது போயிருந்தால், இதை வெறும் கதையாகவே நம்பியிருப்போம்.

ஒரு நாள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் ஆண் குழந்தை திடீரென இறந்து விட்டது. கணவர் அபூதல்ஹா (ரழி) வெளியே சென்றிருந்தார். குழந்தை இறந்து விட்டதை அறிந்தவுடன், உம்மு ஸுலைம் (ரழி) செய்த முதல் வேலை, ‘அந்தக் குழந்தை இறந்ததைப் பற்றி, அபூதல்ஹாவிடம் யாரும் சொல்ல வேண்டாம் நானே சொல்லுகிறேன்’ என்று தம் குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததுதான்.

அபூதல்ஹா (ரழி) அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு அவருக்கு எப்போதும் போல் உம்மு ஸுலைம் (ரழி) உணவு பரிமாறினார். பிறகு தன்னை மிக அழகிய முறையில் அலங்கரித்துக் கொண்டார். அபூதல்ஹா மனைவியிடம் தனது ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார். தன் கணவன் ஆசை பூர்த்தியாகி விட்டதை அறிந்த பின், அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தார் உம்மு ஸுலைம்.

”ஒரு கூட்டத்தினர் ஒரு வீட்டாரிடம் சில பொருட்களை இரவலாகக் கொடுத்து விட்டு, பிறகு ஒரு நேரத்தில் அதை வாங்கிக் கொள்ள நினைக்கும்போது, அந்த வீட்டார் அப்பொருட்களைத் தர மறுப்பதற்கு அனுமதி இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அபூதல்ஹா (ரழி), ‘இல்லை!’ என்று பதிலளித்தார். அப்போது உம்மு ஸுலைம், ”அப்படியானால், உமது குழந்தையின் இழப்பை (அல்லாஹ்விடம் கிடைக்கப் பெறும் நன்மையாக) நினைத்துக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

இதைக் கேட்டவுடன் அபூதல்ஹா (ரழி) அவர்களுக்குக் கோபம் மிகைத்து விட்டது. ‘நான் பெருந்தவறு செய்து விட்டேன்!’ என்றவாறு தன் நிலையை ஒரு குற்றமாக எண்ணினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து, நடந்ததைச் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உங்கள் இருவருக்கும் கடந்த இரவில் அருள் செய்வானாக! அருளைப் பொழிவானாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

தன் தூதருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கர்ப்பமானார்கள். அவர்கள் கர்ப்பமாகி பிரசவிக்கக் கூடிய நிலைக்கு வந்த சமயத்தில் அபூதல்ஹாவுடன் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அந்த பயணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சென்ற பயணம். மதீனாவை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில் இரவு வந்து விட்டது. பொதுவாகவே இரவு நேரங்களில் மதீனாவிற்குள் நுழைகிற வழக்கம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததில்லை. நகருக்கு வெளியிலேயே தங்கி இருந்து விட்டு, அதிகாலையில் தான் நுழைவார்கள்.

இந்த நிலையில் மதீனாவிற்கு அருகில் அனைவரும் வந்து விட்டனர். உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

மனைவிக்காக அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்து மதீனாவிற்குள் நுழைய முடியாததை எண்ணி அபூதல்ஹா (ரழி) அவர்கள் மிகவும் வருந்தினார்கள்.

”என் இறைவனே! எப்போதும் உனது தூதருடன் இருப்பதையே நான் விரும்புகிறேன். அவர் வெளியேறினால் நானும் வெளியேற வேண்டும். அவர் நுழைந்தால் நானும் நுழைய வேண்டும் எதற்காக நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்பதை நீயே அறிவாய் அல்லவா?” என்று பிரார்த்தித்தார்கள்.

அபூதல்ஹா (ரழி) அவர்களின் நிலையைப் பார்த்த உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் ”அபூதல்ஹாவே! இது எனக்கு ஏற்பட்டுள்ள பெரிய சிரமம் ஒன்றுமில்லை நாம் செல்லலாம்” என்றார்கள். பிறகு இருவரும் நபியவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

மதீனாவில் நுழைந்த பிறகு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு ஸுலைம் (ரழி) என்னிடம் ”அனஸே! இந்தக் குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் காலையில் கொண்டு செல்லும் வரை எவரும் இதற்குப் பால் கொடுக்கக் கூடாது” என்று கூறிவிட்டார். நான் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்றேன். என்னைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்திற்கு அடையாளம் இடுவதற்காக தம் கையில் வைத்திருந்த இரும்பை ஓர் ஓரமாக வைத்து விட்டு ”உம்மு ஸுலைம், குழந்தை பெற்று விட்டாரா?” என்று கேட்டார்கள்.

நான் ‘ஆம், குழந்தை பெற்று விட்டார்’ என்றேன். உடனே குழந்தையை தம் கைகளில் வாங்கிய நபியவர்கள், மதீனாவின் ‘அஜ்வா’ பேரீச்சங்கனிகளில் ஒன்றைப் பெற்று, அதைத் தமது வாயிலிட்டு மென்று இளகியதாக்கி அதில் சிறிதை குழந்தையின் வாயில் வைத்தார்கள்.

குழந்தை அதைச் சுவைக்க ஆரம்பித்தது. நபியவர்கள் அந்தக் குழந்தையைச் சுட்டிக் காட்டி, ”பாருங்கள்! அன்சாரிகள் எந்த அளவிற்கு பேரீச்சங்கனிகளை நேசிக்கிறார்கள்!” என்றார்கள். குழந்தையின் முகத்தை மென்மையாகத் தடவி, ‘அப்துல்லாஹ்’ என்றும் பெயரிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். உம்மு ஸுலைமே! உன் ஈமான் எவ்வளவு மகத்துவமானது. உனது பொறுமை எவ்வளவு போற்றத்தக்கது! கணவருக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு அவரது அன்பை நீ அடையத்தேடியது எந்தளவு சிறப்புமிக்க செயல்! உனது அன்பு பிள்ளை இறந்த துக்கத்தை உன்னால் எப்படி சகித்துக் கொள்ள முடிந்தது! உன் பொறுமை, நீ கணவருடன் அழகிய முறையில் நடந்து கொண்டது – இவை அனைத்திலும் அல்லாஹ்வின் அன்பை அல்லவா நீ எதிர்பார்த்தாய்! ஆம் இதுதான் ஆழமான உண்மை இறைநம்பிக்கை ஆகும்.

உம்மு ஸுலைம் கர்ப்பமான சமயத்தில்தான் மக்காவை வெற்றி கொள்ள நபி (ஸல்) புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் உம்மு ஸுலைம் (ரழி) நபியவர்களிடம் அனுமதி கேட்க, நபியவர்களும் அனுமதி வழங்கினார்கள். எவ்வளவு தூரமான பயணம், கரடுமுரடான பாதை, வெயில், வாகன வசதியின்மை என எதையும் பொருட்படுத்தவில்லை. மக்கா நகரம் நல்ல முறையில் வெற்றி கொள்ளப்பட்டது. பிறகு நபி (ஸல்) ஹுனைன் நோக்கி புறப்பட, அதிலும் உம்மு ஸுலைம் (ரழி) கலந்து கொண்டார்கள். இந்தப் போரோ மிகக் கடுமையாக இருந்தது. பல உறுதிமிக்க தோழர்கள் கூட பின்வாங்கிவிட, உம்மு ஸுலைம் நிலைகுலையாமல் நின்றார். பிறகு மதீனா நெருங்கும்போது பிரசவ வேதனையை உணர, சற்று தாமதித்தார். ஆனால் நபியர்களுடன் சேர்ந்து மதீனாவிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். வலி குறைந்தது. மதீனாவிற்குள் நுழைந்தவுடன் குழந்தை பிறக்க அதை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். நபியவர்கள் அந்தக் குழந்தைக்காக துஆ கேட்கிறார்கள். அல்லாஹ் அதை அங்கீகரித்து அந்தக் குழந்தையின் சந்ததியில் பத்து பெரும் மார்க்க அறிஞர்களை நமக்குத் தந்தான்.

நிச்சயமாக அல்லாஹ் அவன் உறுதிமிக்க நம்பிக்கையை அறிந்தவன். அவருக்குத் தனது நபியின் வாயிலாக நற்செய்தி வழங்கினான். நபி (ஸல்) சொன்னார்கள் ”நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு காலடி சப்தத்தைக் கேட்டேன். இது யாருடைய சப்தம் என்று கேட்டேன். இவர்தான் மில்ஹானின் மகள் அனஸ் இப்னு மாலிகின் தாய் என்று வானவர்கள் பதில் அளித்தனர்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பெண்மணி, தனது கணவருடன் அன்பாக நடந்து கொள்வதற்கு மற்றுமோர் உதாரணமாக ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்க்கை நம் முன் இருக்கிறது.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதக் காலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் – அந்த இரவுகளை எண்ணிக் கொண்டே இருந்த – என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள்தான் முடிந்திருக்க தாங்கள் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை, ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தேனே!” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”மாதம் இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்றார்கள். உண்மையில், அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களாகவே இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கூற்றைக் கவனியுங்கள். தம் கணவர் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்புடன், அவர் குறிப்பிட்ட காலம் வரும்வரை அதைக் கணக்கிட்டு, ‘நான் அந்த நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேனே!’ என்று கூறும் அளவிற்கு கணவன் மீது பிரியமும் அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிற ஆர்வமும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்திருக்கிறது. இந்த அன்பும் பிரியமும் மற்றவர்களிடம் இருப்பதைவிட ஆயிஷா (ரழி) அவர்களிடம் அதிகமாக இருந்ததால் தான், நபி (ஸல்) அவர்களும் தம் மனைவியலேயே ஆயிஷாவை முதலில் சந்தித்துள்ளார்கள்.

முஸ்லிமான நல்ல மனைவி இப்படித்தான் இருப்பாள். தம் கணவன் நோக்கத்தையும், ஆசைகளையும் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு, தன்னால் இயன்றவரை அவரைத் திருப்திப்படுத்துவதிலேயே காலத்தைக் கழிப்பாள். இருவருக்கிடையே கருத்து ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் கவனமாகப் பேணிக் கொள்வாள். இதனால்தான் கணவருக்கும் தனக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்புகளை விட்டும், சோம்பல், சடைவு ஆகியவற்றை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியும் இப்படித்தான் நடந்து கொள்வாள்.

‘ஷுரைஹ்’ என்ற மிகப்பெரிய மார்க்க அறிஞர் மூலம் ஒரு கருத்து வலியுறுத்தப்படுகிறது.

ஹன்ளலா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை அவர் மணமுடித்தார். முதலிரவில் அவரும் அந்தப் பெண்மணியும் அல்லாஹ்வுக்காக இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அல்லாஹ்விடம் நன்மையை வேண்டி பிரார்த்தித்தார்கள். அப்போது அந்தப் பெண்மணி அவரிடம் ”நான் உங்களுக்கு ஒரு புதிய பெண்ணாவேன். அதனால் நீங்கள் விரும்புவதையெல்லாம் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் அவற்றைச் செய்கிறேன். அதே போல் நீங்கள் வெறுப்பவற்றையும் என்னிடம் சொல்லி விடுங்கள். நான் அவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்” என்றார். அறிஞர் ஷுரைஹ் அவர்களும் தம்மைப் பற்றி அவளிடம் தெரிவிக்கவே, அவரும் அவரது சொல்படியே நடந்து கொண்டார். அவர்களின் இல்லற வாழ்வும் மகிழ்ச்சிகரமாக கடந்தது.

பிற்காலத்தில் அறிஞர் ஷுரைஹ் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கூறும் போது ”என்னுடன் அந்தப் பெண் சுமார் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள். எந்த நேரத்திலும் நான் அவளைப் பழித்தது கிடையாது. குறை கூறியது கிடையாது. ஒரேயொரு முறை மட்டுமே அப்படி நேர்ந்தது அதிலும் என்மீதுதான் தவறு இருந்தது” என்றார்.

இஸ்லாம், விரும்பக்கூடிய நல்ல மனைவிக்கு இலக்கணம் இதுதான். தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாள். தம் கணவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பாள். அவரது உறவைப் பலப்படுத்திக் கொள்வதில் பேராவல் உள்ளவளாக இருப்பாள். தனக்கும் தம் கணவருக்கும் இடையே ஏதாவது மன சஞ்சலங்கள் ஏற்பட்டால் அதைத் தூய்மையான அன்பைக் கொண்டும், மதி நுட்பமான புரிந்துணர்வைக் கொண்டும் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்வாள். ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கும், தீமையை ஏவக்கூடிய மன இச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் செவி சாய்க்க மாட்டாள்.

சில பெண்கள் தம் கணவன் மீதுள்ள சில சந்தேகங்களுக்காகவே விவாகரத்துக் கோருவதை நாம் பார்க்கிறோம். அது தவறு திருமண ஒப்பந்தம் என்பது சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளுக்காகவோ, மனக்கசப்புகளுக்காகவோ சட்டென்று உடைத்துக் கொண்டு பிரியக் கூடிய உறவு அல்ல. அது ஓர் உறுதிமிக்க, உன்னதமான, நீண்ட உறவாகும். எனவேதான், நபி (ஸல்) அவர்கள் மார்க்க ரீதியான காரணமல்லாமல் ‘தலாக்’கைக் கேட்கிற மூடப் பெண்களைக் கடுமையாக எச்சரித்தார்கள்.

”தக்க காரணமின்றி தமது கணவரிடம் ‘தலாக்’கைக் கோருகிற பெண்ணுக்குச் சொர்க்கத்தின் வாடையும் தடுக்கப்பட்டதாகி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

இறையச்சமுள்ள முஸ்லிமான பெண், தனது கணவன் இரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தனக்கும் தம் கணவருக்கும் இடையேயுள்ள அந்தரங்கங்களை எவரிடமும் சொல்லி விடக்கூடாது. வெளிப்படுத்தக் கூடாது.

ஒரு நல்ல மனைவி அது போன்ற அற்பக் காரியங்களை விட்டும் உயர்ந்திருப்பாள். வெட்கக்கேடான, அசிங்கமான பேச்சுகளைப் பேசுவதை விட்டும் விலகி, ஒழுக்கத்தைக் காப்பாள். தன் நிலையை உணர்ந்து நடந்து கொள்வாள். ஒழுங்கீனமான செயல்களையும் செய்து நேரத்தை வீணடிப்பதை விட்டும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள்.

பொறுப்பற்ற குணங்களை விட்டு தன்னை விலக்கிக் கொள்வாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கைகளை உணர்ந்து நடந்து கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் அவர்களில் ஒருவர் மற்றவரின் இரகசியத்தைப் பரப்பினால் அவர்களே அல்லாஹ்விடம் நாளை மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர்கள் ஆவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

இரகசியங்களை வெளியிடுவதிலேயே மிக மட்டரகமான செயல் இதுவே ஆகும். தரங்கெட்ட மனிதர்கள்தான், அப்படிச் செய்வார்கள்.

இரகசியங்களைப் பாதுகாப்பது என்பது உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும். அதை வெளிப்படுத்துவது என்பது மிக மோசமான பண்புகளில் அடங்கியதாகும். இரகசியங்களில் சில, அவற்றை வெளிப்படுத்துவது அந்த அளவு குற்றம் இல்லை என்றாலும் அது ஒரு வெறுக்கத்தக்க செயலே. நபியவர்களைத் தவிர வேறு யாரும் இதிலிருந்து தப்பிப்பது சாதாரண விஷயமல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தார்கள். ஹஃப்ஸாவோ அதை ஆயிஷா (ரழி) அவர்களிடம் சொல்லி விட்டார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினுள் பல குழப்பங்களும், பிரச்சினைகளும் உருவாயின. இந்த நிலையில் தமது மனைவியர் மீது கோபம் கொண்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு மாதம் வரை எவரிடமும் சேர மாட்டேன் என்பதாக சத்தியம் செய்து விட்டு ஒதுங்கி விட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றியே அல்லாஹ் சூரத்துத் தஹ்ரீமின் 3, 4, 5 ஆகிய வசனங்களில் பேசுகிறான்.

(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்து விட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அந்த மனைவி ”இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” எனக் கேட்டார். அதற்கு அவர் ”(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்” என்று கூறினார்.

அதன் பிறகு அல்லாஹ் அவ்விரு மனைவியரையும் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகிறான். அவர்கள் செய்த குற்றத்தால் அவர்களது உள்ளங்கள் அல்லாஹ்வை விட்டும் விலகி விட்டன. உண்மையான பாவமன்னிப்பைக் கொண்டு தான் அல்லாஹ்வை நெருங்க முடியும்.

(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியிலிருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (அத்தஹ்ரீம் 66:3, 4)

இந்த அளவிற்கு கண்டித்த பிறகும் அவர்கள் பாவமன்னிப்புக் கோராமல் தங்கள் தவறிலேயே நிலைத்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் உங்களை ‘தலாக்’ விடும் நிலை ஏற்படலாம் என்பதையும் அல்லாஹ் பின்வருமாறு தெரிவிக்கிறான்:

நபி உங்களை ‘தலாக்’ கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கை கொண்டவர்களாகவும், (இறைவனுக்குப்) பயந்து (நபிக்குக் கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தை விட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (அத்தஹ்ரீம் 66:5)

இந்த நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் இரகசியங்களைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லிமான பெண்ணும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதில் அல்லாஹ்வின் தனிப்பெரும் அருள் என்னவென்றால், தனது தூதரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் நமக்கு ஒரு திறந்த புத்தகமாக அவன் ஆக்கியிருப்பதே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் கொள்கை கோட்பாடுகளை மட்டுமின்றி அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட இரகசியம் என்றோ, பிறருக்குக் கூறக்கூடாத விஷயம் என்றோ எதுவும் கிடையாது.

குர்ஆனிலும் நபிவழித் தொகுப்புகளிலும் நபியவர்களின் வாழ்க்கை எந்த அளவிற்குப் பதிவாகி இருக்கிறதென்றால், பொதுவாக மக்கள் வெட்கப்பட்டு மறைத்து விடக்கூடிய தவறுகளும், நிகழ்ச்சிகளும் கூட வெளிப்படையாக உள்ளன. காரணம் இஸ்லாமின் ஒரே நோக்கம், உண்மையை விட்டும் பொய்யை, நேர்வழியை விட்டும் வழிகேட்டைத் துல்லியமாகப் பிரித்துக் காட்டுவதே ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்விற்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நாட்டுகிற அழைப்புப் பணியின் அடிப்படையிலும்தான் இருந்தது என்பதை நபித்தோழர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். எனவே, அவர்களில் எவரும் நபியவர்களின் வாழ்க்கையில் சிலவற்றை மறைத்தும் சிலவற்றை வெளிப்படுத்தியும் வேறுபாடு காட்டவில்லை. அறிந்ததை அப்படியே பிறருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாயினும், பொது வாழ்க்கையாயினும் அனைத்தும் அவர்கள் எந்தக் கொள்கையைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்களோ, அந்தக் கொள்கையின் நடைமுறை விளக்கங்களாகவே இருந்தன. இந்த நிலையில் நபித்தோழர்கள் ஒன்றைச் சொல்லியும் இன்னொன்றை மறைத்தும் இருப்பார்கள் என்பதற்கு எந்தச் சாத்தியக் கூறும் இல்லை.

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய சிறிய, பெரிய எந்தச் செய்தியாக இருப்பினும் அதை நபித்தோழர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். இதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிற அவசியத்தை அல்லாஹ்வே உண்டாக்கினான். ஒருபுறம், நபித்தோழர்களின் அறிவிப்புகளால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கை தெளிவாக கிடைத்திருக்க, இன்னொரு புறம், உலக முடிவுநாள் வரையிலும் பாதுகாக்கப்பட்டதாக உள்ள அல்லாஹ்வின் இறுதி நூல் அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியை நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply